இந்து டாக்கீஸ்

சொட்டச் சொட்ட நனையுது: சீரியஸ் பிரச்சினைக்குச் சிரிப்பு வைத்தியம் | திரைப் பார்வை

ரசிகா

பாலிவுட்டில் ‘பாலா’, ‘உஜ்டா சாமன்’ எனக் கடந்த 2019இல் வெளியான இரண்டு இந்திப் படங்கள், இளவயது வழுக்கைத் தலைப் பிரச்சினை உருவாக்கும் உளவியல் சிக்கலை நகைச் சுவையுடன் ஆராய்ந்தன. தற்போது தமிழில் அதே கதைக் களத்தில் அலுப்புத் தட்டாத ஒரு முழு நீள நகைச்சுவைப் படத்தைத் தந்திருக்கிறார் நவீத் எஸ்.ஃபரீத்.

எங்கும் தொய்வடையாத விறுவிறுப்பான திரைக்கதை, வெடித்துச் சிரிக்க வைக்கும் ஒன்லைனர்களைக் கொண்ட துடிப்பான வசனம் இரண்டையும் எழுதியிருப்பவர் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற ராஜா. இவர் நாயகனின் நண்பன் ராக்கியாகப் படத்தில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

பணக்கார வீட்டுப் பையனான ராஜாவுக்கு (நிஷாந்த் ரூஸோ) திருமண வயதைக் கடந்தும் பெண் கிடைக்கவில்லை. அவரின் வழுக்கைத் தலையைக் கண்டு பெண்கள் தெறித்து ஓடுகிறார்கள். ஆனால், பக்கத்துவீட்டுப் பெண்ணான ப்ரியா (ஷாலினி) அவரை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கிறார். ஆனால், திருமணத் துக்கு முதல் நாள் ராஜாவுக்கு வரும் ஒரு வீடியோவால் திருமணம் நின்றுபோகிறது. அதன்பிறகு தன் தலையில் முடியை முளைக்க வைத்தே தீருவது என இறங்கும் ராஜாவின் முயற்சிகளும், அவரது வாழ்க்கையில் வந்தஇரண்டாவது திருமண வாய்ப்பும் என்னவானது எனக் கதை செல்கிறது.

தலையில் முடி இல்லாமல் போவது இயற்கை தான்; அதை வைத்து சக மனிதர்களைக் காயப்படுத்தாதீர்கள் என்கிற செய்தியைச் சுமந்து வந்திருக்கும் இந்தக் கதையில் ராஜாவாக மிகக் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருக்கிறார் நிஷாந்த் ரூஸோ. அவருக்குச் செய்யப்பட்டிருக்கும் வழுக்கைத் தலை ஒப்பனை நம்பும்படியாக இருக்கிறது. ராஜாவுக்கும் பக்கத்து வீட்டு ராயல் பாட்டிக்குமான பாசப் பரிமாற்றம் உணர்வுப்பூர்வம்!

ப்ரியாவாக வரும் ஷாலினியைவிட ‘ரீல்ஸ் போபியா’ ஸ்ருதியாக வந்து கலக்கியிருக்கும் வர்ஷினியின் நடிப்பு ரணகளம். மரபுவழியாகப் பலருக்கு முடிப் பிரச்சினை வந்தாலும், இன்றைய இளைஞர் களில் பெரும்பாலானவர்களுக்குப் பணி அழுத்தம், வாழ்க்கை முறை, உணவு முறையால் உருவான சிக்கலே முடிப் பிரச்சினை என்பது பற்றிப் படம் ஆழமாக ஆராயவில்லை. மாறாக, நகைச்சுவை கலந்த அறிவுரையில் நனைய வைக்கிறது படம்.

SCROLL FOR NEXT