கடந்த 2019இல் ஜோதிகா நடிப்பில், கௌதம் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ராட்சசி’, அரசுப் பள்ளிகளையும் அதன் ஆசிரியர்களையும், தற்காலக் கல்விச் சூழ்நிலையுடன் பொருத்திப் பெருமைப்படுத்திய படம். ‘நறுவீ’யோ, அர்ப்பணிப்பு மிகுந்த ஓர் அரசுப் பள்ளி ஆசிரியருக்குத் தந்துவிடக் கூடாத குருதட்சிணையை ஓர் அசலான கதைக் களத்தின் பின்னணியில் ஹாரர் த்ரில்லராக, மெல்லிய நகைச்சுவையையும் தொட்டுகொண்டுச் சித்தரித்துள்ளது.
சாலைகளே இல்லாத ஒற்றையடிப் பாதைகளைக் கொண்ட பல மலைக் கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகள் உண்டு. அப்படியொரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து கல்விப் பணியாற்றச் சேவை மனப்பான்மை கொண்ட ஒருவரால்தான் முடியும். அதைச் செய்கிறார் ஹரீஷ் என்கிற இளம் ஆசிரியர். நீலகிரியின் குன்னூர் மலைக்கு மேலே சாலை ஏதுமற்ற ஒரு கிராமத்தில் இருக்கும் ஓராசிரியர் பள்ளி அது.
ஹரீஷ் அங்கே சென்று வருவதை அன்றாட சாகசமாகச் சிறிய மனக்கசப்பும் இல்லாமல் செய்வதைச் சித்தரித்த விதம், படத்துடனும் ஹரீஷ் கதாபாத்திரத்துடனும் நம்மை ஒன்றவைக்கிறது. அவரிடம் ஆசையுடன் பயில ஓடிவரும் மலைவாழ் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கும் அவருக்குமான பிணைப்பைச் சித்தரித்த விதமும் யதார்த்தம்! ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் அந்த ஆசிரியர் காணாமல் போகிறார்.
இன்னொரு பக்கம், தனது காபி தோட்ட லாபத்தை அதிகரிக்க விரும்பும் ஒரு தொழிலதிபருக்காக மண் ஆய்வு செய்ய, ஏழு பேர் கொண்ட குழுவினர், ஆசிரியர் காணாமல் போன அதே காட்டுப்பகுதிக்கு வருகின்றனர். அங்கே அவர்கள் பல அமானுஷ்யமான நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர். இந்த இரண்டு கதைகளும் இணையும் புள்ளியில் ‘நறுவீ’ தன் திரைமொழியால் உயர்ந்துவிடுகிறது.
ஹரீஷ் தனது கதாபாத்திரத்தைக் குறையில்லாமல் உணரவைத்து விடுகிறார். அவரின் முறைப்பெண்ணாக வருபவர், ஒரேயொரு காட்சியில் வந்தாலும் காட்டை நேசிக்கும் அந்த வன அதிகாரி தொடங்கி துணைக் கதாபாத்திரங்களில் வரும் அவ்வளவு பேரும் கச்சிதமாக நடித்துள்ளனர்.
அஸ்வத்தின் இசையும் ஆனந்த் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கும் சுபாரக்.எம்மின் காட்சிமொழி, கதைசொல்லல் இரண்டோடும் இணைந்து பயணித்திருக்கின்றன. இந்த ‘நறுவீ’யிடம் உயர்ந்த லட்சியம் இருப்பதுபோலவே, அறியாமை நிரம்பிய ஆபத்தான ‘யூ டேர்ன்’ வளைவுகளும் இருக்கின்றன. அதனால் எச்சரிக்கை தேவை.