கதையே இல்லாமல் வசூல் பார்க்க வேண்டும் என்று, மொழிக்கு தலா ஒரு நடிகரைப் போட்டுப் படமெடுத்துக் கழுத்தை அறுக்கும் ‘பான் இந்தியா’ சினிமா என்று போங்கு காட்டாத படம். நம் சமூகத்தில் அடிக்கடி நிகழும் கொடுமைகளை நகலெடுத்த கதை. அதற்கு நல்ல திரைக்கதை, கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய பிரபலமான நடிகர்கள் என்று மாற்றி யோசித்த ஒரு படம் சமீபத்தில் வந்திருக்கும் என்றால் அது தான் ‘மாரீசன்’.
பூனையிடமிருந்து தப்பிக்கும் ஓர் எலி, பாம்பிடம் சிக்கும் அந்தக் குறியீட்டுக் காட்சியே, அடுத்த இரண்டரை மணி நேரத்துக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைச் சொல்லிவிடுகிறது.
ஃபகத் ஃபாசில் - வடிவேலு இணையின் நடிப்புதான் படத்துக்குப் பெரிய பலம். கிளைமாக்ஸில் நீதிமன்றத்திலிருந்து வடிவேலு வெளியே வரும்போது, ‘எனக்குப் பேத்தி பிறந்திருக்கா, இனிப்பு எடுத்துக்கோங்க சார்’ என்று காவல் அதிகாரி கோவை சரளாசொல்லும்போது உடல் சிலிர்க்கும். ‘மாரீச’னை இப்போது நெட் ஃபிலிக்ஸ் தளத்தில் காணலாம்.