இந்து டாக்கீஸ்

‘கெவி’க்குச் சாலை கிடைக்கப் போகிறது! | ஜெகன் ஜெயசூர்யா நேர்காணல்

திரை பாரதி

கொடைக்கானல் மலையில், சுமார் 2,800 மீட்டர் உயரத்தில் இருக்கிறது வெள்ளக்கெவி கிராமம். ஒற்றையடிப் பாதை மட்டும்தான் அதை அடைவதற்கான வழி. அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை உண்மைக்கு நெருக்கமாகக் காட்சிப்படுத்தியிருந்தது கடந்த மாத இறுதியில் வெளியான ‘கெவி’ திரைப்படம்.

தமிழ் தயாளன் இயக்கியிருந்த அப்படத்தின் உருவாக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்கள், விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. குறிப்பாக ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா குறிப்பிட்டுப் பாராட்டப்படுகிறார். அவருடன் ஒரு பேட்டி:

‘கெவி’ திரைப்படம் எப்படி உருவானது? - ‘கெவி’ படத்தின் இயக்குநர் தமிழ் தயாளன், நான் உள்படப் படக் குழுவில் உள்ள பலரும் ஒன்றாகப் படித்த ஊடக மாணவர்கள். படிக்கும் போது நண்பர்கள் ஆனோம். கடந்த 2018இல் குரங்கணி - கொழுக்கு மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்து எங்களைப் பெரிதும் பாதித்தது.

அதை ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கள ஆய்வுக்காக அங்கே குழுவாகச் சென்றோம். அப்போது சாலை வசதி இல்லாத ஒரு மலைக் கிராமத்திலிருந்து உடல்நிலை சரியில்லாத ஒருவரை ‘டோலி’ கட்டித் தூக்கிக்கொண்டு மலையிறங்கியதைக் கண்டபோது மனம் கலங்கியது.

இதுதான் ‘கெவி’ திரைப்படம் உருவானதற்கான முதல் புள்ளி. பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த பல மலைக் கிராமங்களுக்குத் தேனியைச் சேர்ந்த நண்பர் கிருபா அழைத்துச் சென்றார்.

ஆங்கிலேயர்கள் முதன் முதலில் சென்றபோது கொடைக்கானலை உருவாக்கும் முன்பு அவர்கள் அங்கே கண்ட 400 ஆண்டுகள் பழமையான மலைக் கிராமமான வெள்ளக்கெவிக்கு அவர் அழைத்துப்போனார். அங்கே போய் அந்த மக்களோடு தங்கி, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உண்மைச் சம்பவங்களை எடுத்து, திரைக்கதையை உருவாக்கினோம்.

மலைக் கிராமங்களுக்குச் சென்றபோது எவையெல் லாம் உங்களைப் பாதித்தன? - மனிதர்கள் நடந்து உருவாக்கிய கரடு முரடான ஒற்றையடிப் பாதைகளை நம்பிதான் கெவி மாதிரியான கிராமங்கள் கடினமான வாழ்வை வாழ்கின்றன. சாலை இல்லாததால், அவசரக் காலத்தில் அந்த மக்கள் பறிகொடுத்த உயிர்கள் ஏராளம். கடந்த 2019 உள்ளாட்சித் தேர்தலைச் சாலை வசதி இல்லாத பல மலைக் கிராமங்கள் புறக்கணித்தன.

இதை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்றுதான் மலையன் - அவனுடைய நிறைமாத கர்ப்பிணி மனைவி மந்தாரையின் வாழ்வா - சாவா போராட்டமாகப் படத்தை உருவாக்கினோம். ‘கெவி’ படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எதுவும் கற்பனை அல்ல.

வெள்ளக்கெவி கிராமத்துக்குத் தற்போது 22 கோடியில் 3 கிலோ மீட்டர் சாலை அமைக்க அரசு அடிக்கல் நாட்டியிருக்கிறது, அந்தக் கிராமத்துக்குச் சாலை கிடைக்கப்போகிறது என்பது, எங்களைப் போல் கெவி மாதிரியான கிராமங்களின் அவலத்தை வெளிக் கொண்டுவர பாடுபட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கெவி போன்று மட்டக் குதிரைகளையும் டோலிகளையும் நம்பியிருக்கும் எல்லா மலைக் கிராமங்களுக்கும் விடிவு பிறக்க வேண்டும்.

‘கெவி’ படத்தில் 20 நிமிடம் நீளும் கிளைமாக்ஸ் காட்சியை நள்ளிரவில் படமாக்கிய அனுபவம் எப்படி யிருந்தது? - பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. மந்தாரை பிரசவ வலியால் துடிக்க, அவளை டோலி கட்டி தூக்கிக்கொண்டு கொடைக்கானல் நோக்கி வெள்ளக்கெவி மக்கள் மலையேறும் காட்சியை அதே பாதையில் படமாக்கினோம். மூன்று கிலோமீட்டர் ஏறினால் ரெட்டக்கல் என்கிற சிகரம் வரும். அங்கிருந்து குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றாலும் போய் எடுத்துக்கொண்டு திரும்ப ஒரு நாள் ஆகும். மிகவும் சிரமப்பட்டோம். லாந்தர்கள், டார்ச் விளக்குகள் மட்டும் பயன்படுத்தி இயற்கை ஒளியில் படமாக்கினேன்.

65 பேர் கொண்ட படக்குழுவினர் உயிரைப் பணயம் வைத்துத்தான் படப்பிடிப்பை முடித்தோம். மக்களின் உதவி மறக்க முடியாதது. தொடக்கத்தில் திரைக்கதை தயாரானதும், அதைக் கேட்டுப் பாராட்டிய பல தயாரிப்பாளர்கள் ‘ஷூட் பண்றது ரொம்ப ரிஸ்க்’ என்று எங்களைக் கைவிட்டபோது நாங்களே கடன் வாங்கி முதலீடு செய்து படத்தை உருவாக்கினோம்.

உங்களைப் பற்றிக் கூறுங்கள்.. நான் பிறந்து, வளர்ந்து படித்த தெல்லாம் சென்னை மீனம்பாக்கத்தில். அப்பா மனோகரன் ஒரு பத்திரிகை ஒளிப்படக் கலைஞர். நான் பல ஊர்களுக்குத் தனியே பயணம் செய்து கற்றுக்கொள்ளத் துணிந்து அனுமதித்தார். அவர் வழியாகத்தான் ஒளிப்படக் கலையில் ஆர்வம் பிறந்தது. சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலையில் இதழியலும் ஒளிப்படக்கலையும் பயின்றேன். கையிலிருக்கும் சொற்பக் கருவிகளைக் கொண்டே சிறந்த ஒளிப்பதிவைத் தரமுடியும் என்று தொடர்ந்து நிரூபித்தவர் பாலுமகேந்திரா சார். அவர்தான் என் மானசீக ஆசிரியர்.

SCROLL FOR NEXT