இயக்குநர் அபிஷேக் வர்மனின் இயக்கத்தில் பாலிவுட் ரசிகர்களின் செல்லக் கதாநாயகி ஆலியா பட் நடிப்பில் உருவாகிவந்தது ‘களங்க்’ திரைப்படம்.
அதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட தகவலை ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். சஞ்சய் தத், வருண் தவான், சோனாக்ஷி சின்ஹா, மாதுரி தீக்ஷித், ஆதித்ய ராய் கபூர் எனப் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து கூட்டணி அமைத்திருக்கும் இந்தப் படத்தில் ஆலியாவுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டராக மாதுரி நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. 1940-களில் நடக்கும் கதை. கரண் ஜோஹர் தயாரிப்பில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 19 அன்று வெளியாகவிருக்கிறது.
‘களங்க்’ படப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ‘ரன்பீர் கபூர், அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் ஆலியா. அதில் நாகார்ஜுனா சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகியிருக்கும் ஆலியாவின் வசம் தற்போது ஏழு திரைப்படங்கள் இருக்கின்றன. அவை இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வெளியாகின்றன.
- கனி