ஒரு பக்கம் கத்தி படச் சர்ச்சை பளபளத்துக்கொண்டிருக்க இன்னொரு பக்கம், இன்று வெளியாகும் ‘சினேகாவின் காதலர்கள்’ படம், தர்மபுரி இளவரசன் – திவ்யா காதலைக் கதையின் முக்கியப் பகுதியாகக் கொண்டு வெளியாகிறது என்கிறார்கள் படம் பார்த்த பிரபலங்கள்.
கதாநாயகர்களின் முதுகில் சவாரி செய்யும் தமிழ் சினிமாவில் இந்தப்படத்தின் நாயகி சினேகா படம் முழுக்க ஹீரோவாக வலம் வருகிறாராம். கல்லூரியில் படிக்கும் போது காதல், வேலை கிடைத்ததும் காதல் என்று எல்லோருக்குமான காதல் இதில் பேசப்பட்டாலும் ஒவ்வொரு கட்டத்திலும் சினேகா தனது காதலை எதிர்கொள்ளும் விதம் தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் என்கிறார்கள்.
தனது காதலனிடம் “காதலிச்சிட்டா உடனே உன்னோட டேட் பண்ணிடனுமா?” என்று கதாநாயகி கேட்பதில் ஆரம்பித்து, வேலை கிடைத்து கொடைக்கானல் செல்லும் சினேகா, அங்கே இளவரசன் என்ற இளைஞன் மீதும் காதல் கொள்வதும். அடிப்படை வசதிகள் இல்லாத அவனது வாழ்விடத்துக்கே சென்று அவனைக் காதலிப்பதும் படத்தில் கவிதையாக இருக்கிறதாம். ஆனால் சினேகாவின் காதலை இளவரசன் மறுக்கிறான்.
அவன் மறுப்பதற்கான காரணத்தைச் சொல்லும்போது ரசிகர்கள் நொறுங்கிப் போவது உறுதி. இதைத் தாண்டி, சினேகா – இளவரசன் காதல் வென்றதா என்பதைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள். ஆனால் படத்துக்கு எதிராக யாரும் நீதிமன்றத்துக்குப் போய்விடக் கூடாதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.