இணையச் சூதாட்ட விளையாட்டுகளால் தற்கொலை செய்துகொண்டவர்கள் அதிகம். அதைத் தடுக்கச் சட்டங்கள் கொண்டுவந்தாலும், பசுத்தோல் போர்த்திய புலிபோல் புதிய போர்வையில் அவை வேட்டையைத் தொடர்ந்தபடியிருக்கின்றன.
இணையச் சூதாட்ட விளையாட்டுகளில் பண இழப்பு ஏற்பட்டுத் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை சிதைகிறது என்றால், புகழையும் பணத்தையும் விரும்பும் இளம் தம்பதிகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் ரியாலிட்டி விளையாட்டுகள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் காவு வாங்கிவிடுகின்றன. இந்த உண்மையைத் துணிவாகவும் விரிவாகவும் சுவாரசியமான உளவியல் த்ரில்லர் திரைக்கதை கொண்டு அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவராஜ்.
கலை - ப்ரியா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட யூடியூபர்கள். காணொளிகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை வசதியாக அமைத்துக்கொண்டவர்கள். ஆனால், ‘கம்யூனிட்டி கைடுலைன்’களை மீறிய காரணத்தால் அவர்களது சேனல் நீக்கப்பட்டுவிடுகிறது.
வருவாய்க்கான கதவு அடைபட்ட நேரத்தில், அவர்களைக் குறிவைத்து ஒரு மர்ம நபர் தொலைப்பேசி வழியே பேசுகிறார்.‘நாங்கள் நடத்தும் ‘பெஸ்ட் கப்பிள் ஆஃப் தி வீக்’ என்கிற இணைய ரியாலிட்டி விளையாட்டை வீட்டிலிருந்தபடி விளையாடினால் லட்சக்கணக்கில் பணம் வெல்லலாம்’ என்கிறார்.
ஆனால், ‘விளையாட்டில் பங்கேற்றிருப்பதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது’ என்கிற நிபந்தனையையும் விதிக்கிறார். கடனைச் சமாளிக்க, அதை ஏற்றுவிளையாட்டுக்குள் நுழையும் இருவருக்கும் பல ‘டாஸ்க்கு’கள் கொடுக்கப்படுகின்றன. டாஸ்க்கில் வென்றால் ‘பெட்’ கட்டிய பணத்தைப் போல் இரண்டு மடங்குப் பரிசுப் பணம். தோற்றால் பணத்தை இழக்க வேண்டியிருக்கும். டாஸ்க்குகளில் வெல்ல, கணவனும் மனைவியும் ஆடும் ஆட்டம், அவர்களை எந்த இடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது என்பதுதான் கதை.
உறவுகளுக்கு இடையிலான நம்பிக்கை, பிணைப்பு, அன்பு, பாசம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் இதுபோன்ற விளையாட்டுகளை ஆடும் இணையர்கள் எவ்வாறு வெகு விரைவாக இழந்துவிடுகிறார்கள் என்பதை டாஸ்க்குகள் வழியாகவே எடுத்துக்காட்டுகிறார் இயக்குநர். வாழ்வின் மிக முக்கியத் தருணமாகக் கொண்டாடியிருக்க வேண்டிய, தான் கர்ப்பம் தரித்த தகவலை ‘டாஸ்க்’ காரணமாக 1 வாரம் கழித்துச் சொல்கிறார் மனைவி. டாஸ்க்கில் வெல்ல, வீட்டுக்கு வந்த மாமியாரை 10 நிமிடத்தில் வெளியே அனுப்ப வேண்டும் என்கிற நிர்பந்தத்தால் கணவன் செய்யும் செயல், அதிர்ச்சியளிக்கிறது.
கணவன் - மனைவியாக நடித்திருக்கும் கலையரசன் - ப்ரியாலயா இருவரும் போட்டி போட்டு மட்டுமல்ல; கதாபாத்திரங்களில் பொருந்தியும் நடித்திருக்கிறார்கள். இணையத்தின் வழியாகவும் சமூக ஊடகங்களின் வழியாகவும் பணம் ஈட்ட நினைப்பவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்வையும் உணர்வுகளையும் எவ்வாறு பணயம் வைக்க வேண்டியிருக்கும் என்பதை அபாய மணியடித்துச் சொல்லியிருக்கிறது இந்த ‘டிரெண்டிங்’.