இந்து டாக்கீஸ்

தொப்புள் கொடி உறவுக்கு ‘வீர வணக்கம்’ - இயக்குநரின் குரல்

திரை பாரதி

சுதந்திரத்துக்கு முந்தைய கேரளத்தில், ஒடுக்குதல் நிரம்பிய சமூகச் சூழ்நிலையில் பி.கிருஷ்ண பிள்ளையால் கம்யூனிஸ்ட் இயக்கம் எவ்வாறு கட்டி எழுப்பப்பட்டது என்கிற வரலாற்றை ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ (2014) என்கிற வெற்றிப் படத்தின் மூலம் எடுத்துக் காட்டினார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.

சமுத்திரக்கனி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்தப் படம் வெற்றி பெற்றதுடன் விமர்சகர்கள் விருதையும் வென்றது. தற்போது மீண்டும் சமுத்திரக்கனியுடன் இணைந்து ‘வீரவணக்கம்’ என்கிற படத்தை மலையாளம், தமிழ் ஆகிய இருமொழிகளில் இயக்கியிருக்கிறார் அனில் வி.நாகேந்திரன். திரையரங்க வெளியீட்டுக்குப் படம் தயாராக இருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

மீண்டும் சமுத்திரக்கனியை நடிக்க வைத்திருக்கிறீர்கள்? இது உங்களுடைய ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ படத்தின் தொடர்ச்சியா? - அப்படியும் கூற இடமிருக்கிறது. தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவை மையப்படுத்திய ஒரு கதை. தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து கேரளத்துக்கு அடைக்கலம் தேடி வரும் ஓர் இளைஞனுக்கு, பி.கிருஷ்ணபிள்ளையின் புரட்சிகர வாழ்க்கை வரலாற்றின் ஒரு துளி கொடுக்கும் உத்வேகமும் அதன்பின் அவன் தன்னுடைய பிரச்சி னையை மதுரைக்கு வந்து எப்படி எதிர்கொண்டான் என்பதுதான் கதை.

பி.கிருஷ்ண பிள்ளையைப் பற்றி அறிந்திராத வாசகர்களுக்குச் சுருக்கமாகக் கூறுங்கள்... கிருஷ்ண பிள்ளை வைக்கத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். நிலப் பிரபுத்துவம் மேலோங்கியிருந்த 20களின் கேரளத்தில் சாதியின் பெயரால் எளிய மக்கள் துன்புறுத்தப்படு வதைக் கண்டு கொதித்து, இளம் வயதிலேயே மக்கள் இயக்கங்களில் பங்கு கொண்டார். முதலில் ஒரு காந்தியவாதியாகக் காங்கிரஸில் இயங்கினார். அங்கே சோஷலிஸ்ட்களாக இருந்த நேரு, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

1934 இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மும்பையில் தொடங்கப்பட்டபோது அதன் கேரள மாநிலச் செயலாளர் ஆனார். பின்னர் அந்த இயக்கத்தை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரளக் கிளையாக மாற்றினார். அவர் முன்னெடுத்த ஆலப்புழா தொழிலாளர் வேலை நிறுத்தம் புன்னப்பாறா - வயலார் புரட்சி போன்றவை கேரள அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்டவை.

அவர் வாழ்க்கை முழுவதும் சாகசம்தான். தோழர் என்றால் அவர்தான்! கிருஷ்ணப்பிள்ளை ஒரு சின்ன கிராமத்துக்குப் போனால், இரண்டே நாளில் அங்குள்ள தொழிலாளர்களை அரசியல்மயப்படுத்தி கம்யூனிஸ்ட் டுகளாக மாற்றிவிடும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.

உலகெங்கும் கம்யூனிஸ்ட் இயக் கங்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டி ருந்த காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்தல் அரசியலில் முதலில் வெல்ல வைத்தவர் அவர்தான். இ.எம்.எஸ்.நம்புதிரிபாட் ‘எனது தலைவர் கிருஷ்ண பிள்ளை’ என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டு எழுதியிருக் கிறார். கம்யூனிஸ்ட் இயக்கம் 1948இல் தடை செய்யப்பட்ட ஆண்டு களில் ஆலப்புழா வில் ஒரு தொழிலாளி யின் குடிசையில் தலை மறைவாகத் தங்கியிருந்தபோது பாம்பு கடித்து இறந்தார். அவர் அமைத்த அடித்தளம்தான் இன்றைய முற்போக்குக் கேரளம்.

இதில் சமுத்திரக்கனியும் பரத்தும் ஏற்றுள்ள கதாபாத்திரங்களைப் பற்றி… கன்னியாகுமரி மாவட்ட இடலாக்குடியில் இருப்பது, சுதந்திரப் போராட்ட வீரர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் அடைத்து வைத்துத் துன்புறுத்திய ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற சிறை. அந்தச் சிறையில் 1940களில் கிருஷ்ண பிள்ளையும் மதுரையைச் சேர்ந்த வேலாயுதம் என்கிற கம்யூனிஸ்ட்டும் அடைக்கப்பட்டி

ருந்தனர். அவர்கள் உயிர்த் தோழர்கள். படத்தில் கிருஷ்ண பிள்ளையாக மீண்டும் சமுத்திரக் கனியும் வேலாயுதத்தின் பேரனாக
பரத்தும் வருகிறார்கள். இவர்க ளுடன் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் 95ஆம் அகவையில் இருக்கும் முதுபெரும் புரட்சிப் பாடகியான பி.கே.மேதினி. அவர், மேடைகளில் 50 ஆண்டுகளாகப் புகழ்பெற்ற தனது புரட்சிப் பாடல் ஒன்றைப் பாடி நடித்திருக்கிறார்.

டி.எம்.சௌந்திரராஜன் மகனை இதில் அறிமுகப்படுத்துகிறீர்களா? - ஆமாம்! எத்தனை பெரிய சாதனையாளரின் மகன் அவர். இன்று வரை தமிழ் சினிமா அவரைக் கண்டுகொள்ளவில்லை என்பதை நம்ப முடியவில்லை. அவரைப் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

- jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT