மதுவுக்கு எதிராக இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘பாட்டில் ராதா’ மிக முக்கியமானதொரு படைப்பு. ‘குயிலி’ முற்றிலும் சிக்கலான பல விளிம்பு நிலைக் கதாபாத்திரங்களின் வழியாக மதுவுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறது.
ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த குயிலி ஆடு மேய்ப்பதை வாழ்வாதாரமாகச் செய்துவரும் ஏழைக் குடும்பத்துப் பெண். அவளும் விளம்பரப் பலகைகள் எழுதும் வீராவும் கரம் பற்றுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அந்த எளிய, அமைதியான குடும்பத்தில் மது உள்ளே நுழையும்போது எல்லாம் தலைகீழாக மாறிப்போகிறது. மது கணவனின் உயிரைக் குடிக்க, உடைந்துபோகிறாள். தன்னைப் போல் சமூகத்தில் மதுவால் கணவனை இழந்த பெண்களின் கண்ணீரைக் காணும் குயிலியை அவளது கோபம் எந்த எல்லைக்கு அழைத்துக்கொண்டு போனது என்பது கதை.
மாற்றத்தைக் கொண்டுவரத் தீர்மானிக்கும் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இடதுசாரி பொதுவுடைமை இயக்கத்தில் சேர்வது, அங்கே, வர்க்க, போராட்ட அரசியலைக் கற்று, அதிகாரமும் மது உற்பத்தியும் பின்னிப் பிணைந்திருக்கும் சமூக - பொருளாதார சுரண்டலுக்கு எதிரான ஒரு புரட்சிக் குரலாக மாறுவது என, ‘குயிலி’ கதாபாத்திரத்தின் ‘கேரக்டர் ஆர்க்’ வலுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் பாதியில் வரும் குயிலியின் மகனுடைய மேட்டிமைப் போக்கு யாதர்த்தத்துடன் ஒட்டவில்லை. லட்சியத்தை நாம் சுமக்கலாமே தவிர, நம்முடையதைப் பிள்ளைகளிடம் திணிக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக மகன் கதாபாத்திரம் மாறிவிடுவது ஏற்புடையதே. மகன் அப்படி மாறியிருக்காவிட்டால் குயிலி இவ்வளவு தீவிரமான போராளியாக மாறியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.
முதல் பாதியில் வீராவின் காதலியாக, இளம் குயிலியாக வரும் தஷ்மிகாவும் இரண்டாம் பாதியில் முதிர்ந்த குயிலியாக வரும் லிசி ஆண்டனியும் ஒரு கதாபாத்திரத்தின் இருவேறு பரிமாணங்களுக்கு அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குயிலியின் மகனாக, மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் வரும் வி.வி.அருண்குமாரும் கவனிக்க வைக்கிறார்.
மது அரக்கனை அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் அழிக்க முடியாது என்பதை மாறுபட்ட கதாபாத்திரங்களுடன் கூறியிருக்கும் இப்படத்தின் இறுதியில் குயிலி எடுக் கும் முடிவு, மதுவால் குடும்ப உயிர்களை இழந்த பெண்களின் தார்மிகக் கோபம்.