இந்து டாக்கீஸ்

Stolen - போலிச் செய்தியால் திருடப்பட்டவர்கள்! | ஓடிடி உலகம்

திரை பாரதி

போலிச் செய்திகளால் மூச்சுத் திணறும் உலகம் இது. அப்படிப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய யாருக்கும் ஆர்வமில்லை. செய்தி தரும் பரபரப்பு மட்டும் போதும் என்று கடந்துவிடுகிறோம். ஆனால், அது போன்ற செய்திகளால் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதை, 2018இல் அசாமில் இரண்டு இளைஞர்களுக்கு நடந்த மோசமான நிகழ்வொன்றை மையமாக வைத்து உருவான படம்தான் அமேசான் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தி மொழிப் படமான ‘ஸ்டோலன்’.

ராஜஸ்தானில் எங்கோ ஒரு தொலை தூரப் பகுதியில் உள்ள ரயில் நிலையத் தில் ஓர் இளம் தாய் தன்னுடைய 5 மாதக் கைக்குழந்தையுடன் கண்ணயர்ந்து விடுகிறாள். அப்போது அக்குழந்தை திருடப்படுகிறது. அந்நேரத்தில் தற்செயலாக அங்கே வரும் இரண்டு சகோதரர்கள் அக்குற்றத்தைச் செய்யாமலேயே அதில் சிக்கிக்கொள்கிறார்கள்.

அதற்குக் காரணம் ஒரு கைப்பேசியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு சின்ன வீடியோ கிளிப்பும் அது பரவும் வேகமும். அது பொதுவெளியில் உருவாக்கும் பதற்றம், அந்தச் சகோதரர்களையும் குழந்தையைப் பறிகொடுத்த தாயையும் எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் கதை.

திரைக்கதை, கச்சாவான படமாக்கம், உபரியாக ஒரு ஷாட் கூட இல்லாத படத்தொகுப்பு, நடிகர்களின் அபாராமான பங்களிப்பு ஆகிய அம்சங்கள் இணைந்து, 90 நிமிடம் நீங்கள் தலையை வேறெங்கும் திருப்ப முடியாத திரை அனுபவத்தை வழங்குகிறது படம். அப்பழுக்கற்ற இப்படைப்பைத் தந்திருப்பவர் கரண் தேஜ்பால். ரயில் நிலையத்தில் முக்கியச் சம்பவத்துடன் தொடங்கும் கதை, ஒரு ‘ரோட் மூவி’யாக மாறிய பின், நாமும் மூன்று முக்கியக் கதாபாத்திரங்களுடன் ’தலை தெறிக்க’ப் பயணிக்கத் தொடங்கி விடுகிறோம்.

குழந்தையைத் தேடிக் கண்டறிந்துவிட வேண்டும் என்கிற தவிப்பு ஒருபக்கம், மற்றொரு பக்கம் ‘கண்ணால் காண்பதே மெய்’ எனக் கும்பல் மனநிலையுடன் துரத்தும் கூட்டம். இந்தக் குற்ற ஆட்டத்தில், தப்பிப் பிழைக்கப் போராடும் முதன்மை கதாபாத்திரங்களில் வரும் அபிஷேக் பானர்ஜி, சுபம், மியா ஆகிய மூவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவை ஆவணப்படத் தன்மையுடன் கையாண்டிருந்தாலும் அவ்வகைப் படமாக்கத்தைப் படத்தொகுப்பின் மூலம் மாபெரும் ரசவாதமாக மாற்றிவிடுகிறார்கள். இப்படம் உண்மையின் பிரதிபலிப்பாக மிரட்டும் ஓர் அசலான த்ரில்லர்!

SCROLL FOR NEXT