இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை | தி வெர்டிக்ட்  | தடயங்களின் பின்னாலிருக்கும் நிஜம்! 

ஆர்.சி.ஜெயந்தன்

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இருக்கும் சாட்சியங்கள், தடயங்கள், ஆதாரங்கள் ஆகியன அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு பெரும் பலம். ஆனால் அப்படிப்பட்ட நம்பகமான சாட்சியங்களில் கூட வேறொரு உண்மைக் கதை ஒளிந்திருக்கலாம் என்கிற சுவாரசியமான பக்கத்தை திறந்து காட்டுகிறது இந்த கோர்ட் ரூம் டிராமா. இரண்டாம் பாதிப் படத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒரு ஏமாற்றம் அளிக்காத திரைக்கதையுடன் நம்மை இறுதிவரை உட்கார வைக்கிறார் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் கிருஷ்ணா சங்கர். குறிப்பாக, அமெரிக்க நீதி மன்றங்களில் வழக்கு விசாரணை என்பது எப்படி நடக்கிறது. அங்கே ஒரு வழக்கில் ஜூரிக்கள் குழுவினர் ஒவ்வொரு விசாரணை அமர்வுக்குப் பிறகும் எவ்வாறு விவாதித்து உண்மைகளைக் கண்டறிய முயற்சிக்கிறார்கள். இறுதியில் ஒரு வழக்கின் தீர்ப்புக்காக அவர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதை அப்படியே காட்டியிருப்பது, இந்தியத் தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். அமெரிக்கா என்கிற ஒரு ஜனநாயக நாட்டில் நீதி மன்றங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடலாம்.

சரி.. இனி கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம்.. படத்தின் கதை அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் என்ற பகுதியில் 2019இல் உலகமே கரோனா பெருந்தொற்றால் மனித உயிர்கள் மதிப்பிழந்து, நோயின் முன்னால் மண்டியிட்ட நேரத்தில் நடக்கிறது. 2019, மே 20ஆம் தேதி, பெரும் செல்வந்தர் பெண்மணியான எலைசா (சுகாசினி மணிரத்னம்) மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் உருளையுடன் வாழ்க்கைப்பட்ட அவரது மரணம், இயற்கையா, கொலையா என்று போலீஸ் சந்தேகிக்கிறது.இறப்பதற்கு முன்பு எலைசாவுடன் இருந்தவர், அவர் தன் மகளைப் போல் நேசித்த நம்ரதா(ஸ்ருதி ஹரிஹரன்). அவருக்கு எதிராகவே சாட்சியங்களும் தடங்களும் மாறிவிட, போலீஸ் விசாரணைக்குப் பின் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. உண்மையில் அவர்தான் எலைசாவின் மரணத்துக்குக் காரணமா என்பதை நோக்கி நகரும் கதையில் ஒளிந்திருக்கும் திருப்பங்கள் தான் திரைக்கதை.

நம்ரதா மீது கொண்ட அன்பினால் எலைசா அவளுக்கு தனது 150 மில்லியன் டாலர் சொத்தை எழுதி வைக்கிறாள்.எனவே அவள் பணத்துக்காக கொலை செய்திருக்க வாய்ப்பில்லை.எலைசாவுக்கு 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் ஒரு நம்பிக்கையான ஒரு வேலையாள் உண்டு.அவரோ எலைசா இறந்த நேரத்தில் அங்கே இல்லை என்பது உட்பட சூழ்நிலைகளும் நர்மதாவுக்கு எதிராக இருக்கின்றன.நம்ரதாவுக்காக வழக்கறிஞர் வரலட்சுமி வாதாடுகிறார். ஆனால், அவரது திறமையான வாதங்களை சுக்கல் சுக்கலா உடைத்துவிடுகிறார் அரசத் தரப்பு வழக்கறிஞர். வெகு விரைவாக தீர்ப்பு வந்துவிட, படமே முடிந்துவிட்டது என எண்ணும்போதுதான் கரோனா காலத்தின் தாண்டவம் மனிதர்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைத்துவிடுகிறது என்கிற கோர முகத்தை திரை விலக்கிக்காட்டும் மற்றொரு சினிமா தீர்ப்புக்குப் பின் விரிகிறது.

கட்டற்ற, சுதந்திரமான பாலியல் வாழ்வு, அமெரிக்கா வழங்கும் மகத்தான ஜனநாயகம். அதன் பலனை தவறான வழியில் அனுபவிக்கக் துடிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை படம் நல்லதொரு நச்சென்ற செய்தியாக நமக்குக் கொடுத்து அனுப்புகிறது.

படத்தில் மில்லியனர் பெண்மணி எலைசாவாக சுஹாசினியும் அவருடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நெருங்கிப் பழகும் பெண்ணாக நம்ரதா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹரிஹரனும் அவ்வளவு இணக்கமான நடிப்பை தந்திருக்கிறார்கள். நம்ரதாவின் காதலன் வருணாக பிரகாஷ் மோகன்தாஸ் உண்மையாகவே அசத்தியிருக்கிறார். நம்ரதாவுக்காக வாதாடும் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார், ஒரு வழக்கில் உறுத்தலான கேள்விக்கு விடைகாணத் துடிக்கும் பயிற்சி வழக்கறிஞராக வித்யுலேகா ராமன், கேர் டேக்கராக வரும் ரபேல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் என அனைவரையும் இயக்குநர் நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார். குறிப்பாக படத்தில் நடித்துள்ள அமெரிக்கர்கர்களை இந்திய நடிகர்களுடன் அழகாக இயைந்து நடிக்கும்படி செய்திருப்பது சிறப்பு.

அரவிந்த் கிருஷ்ணாவின் கதை, களத்துக்கான ஒளிப்பதிவு நல்ல காட்சி அனுபவமாகக் கவர்கிறது. மிகக்குறைந்த அளவிலான படப்பிடிப்பிடங்களில் நடத்தி அந்தக் குறையே தெரியாத அளவிற்குச் சலிப்பூட்டாமல் காட்சிகள் அமைந்துள்ளன.படத்தில் தலைப்பு வரும்போது தொடங்குகிற ஆதித்யா ராவின் பின்னணி இசையின் பயணம் இறுதி வரை நேர்த்தியுடன் இயக்குநருக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா நீளமான காட்சிகளோ, தொடர்பில்லாத காட்சிகளோ இல்லாமல் சரியாக 2 மணி நேரத்துக்குப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

அமெரிக்க நீதிமன்றக் காட்சிகள் நறுக்கென்று உரையாடல் வசனங்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. நீதிமன்ற விசாரணைக் காட்சிகளில் தமிழ் சப் டைட்டிலைப் படிப்பதா, நடிகர்களின் நடிப்பைப் பார்ப்பதே என்பதே பெரும் சவாலாக இருக்கிறது. அவற்றையும் தமிழில் பேச வைத்திருந்தால் புரிதலுக்கு எளிதாக அமைந்திருக்கும். மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்காத வகையில் ஒரு நீதி மன்ற விசாரணைப் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.


SCROLL FOR NEXT