பல மொழிகளில் வெளியிடும் நோக்கத்துடன் தென்னிந்திய சினிமாவில் ஹாரர், கற்பனை வரலாறு, சீரியல் கில்லர் படங்கள் வரிசைக் கட்டித் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரியான குடும்ப டிராமாக்களும் வந்து வெற்றிபெறுகின்றன.
கடந்த ஆண்டு தமன் அக் ஷன் நடிப்பில் வெளியான ‘ஒரு நொடி’ வெற்றிப்படமானது. அதைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘ஜென்ம நட்சத்திரம்’ என்கிற ஹாரர் த்ரில்லர் விரைவில் வெளியாகவிருப்பதால் படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் தமன் அக் ஷனுக்கு ஜோடியாக மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், ரக் ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடும் இப்படத்தை அமோஹம் ஸ்டுடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்துள்ளார்.
‘ஒரு நொடி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பி. மணிவர்மன் இயக்கியுள்ளார். சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ள படம் குறித்து இயக்குநர் கூறும்போது: “ஒரு தரமான ஹாரர் த்ரில்லர் படத்தில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், அழுத்தமான பின்கதை, உணர்வுபூர்வமான சம்பவங்கள் இருக்க வேண்டும். அவற்றுடன் சிறந்த ஒளிப்பதிவு, இசையையும் எதிர்பாருங்கள்” என்கிறார்.
அடங்க மறுக்கும் ‘சர்தார்’ - கார்த்தி ஏற்ற ஆக் ஷன் அவதாரங்களில், கடந்த 2022இல் வெளியான ‘சர்தார்’ அவருக்கு மிகப்பெரிய வசூல் வெற்றியாக அமைந்தது. குடிநீரை ஒரு வர்த்தகப் பொருளாக மாற்றிய தண்ணீர் மாஃபியாக்களுடன் மோதும் சிறைப் பறவையான சர்தார் கதாபாத்திரத்தில் கார்த்தி தோன்றினார். சர்தாரின் அடுத்த அதிரடி ஆபரேஷனாக உருவாகி வருகிறது ‘சர்தார் 2’. பி.எஸ்.மித்ரன் எழுத்து, இயக்கத்தில் உருவான முதல் பாகத்தில் அப்பா-மகன் என இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் கார்த்தி.
தற்போதைய இரண்டாம் பாகத்தில் சர்தாருக்கு வில்லனாக நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். சாம். சி.எஸ். இசையக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கார்த்தி பிறந்தநாளுக்காகப் படத்தில் இடம்பெற்றுள்ள அவருடைய தோற்றதைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில் அவர் அடங்க மறுக்கும் சர்தார் ஆகக் காட்சி தருகிறார்.
இறங்கி வரும் பாலிவுட்! - கோலிவுட்டிலிருந்து விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா இருவரையும் பாலிவுட் இப்போது வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறது. அதேபோல் கன்னட, ஆந்திர நடிகர்களும் இந்திரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கும் நேரம் இது.
இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது பாலிவுட்டின் முன்னணிப் பட நிறுவனமான ஆதித்ய சோப்ராவின் யஷ் ராஜ் பிலிம்ஸ். அந்த நிறுவனம் தயாரித்துள்ள ‘வார் 2’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக்கியிருக்கிறது! இப்படத்தின் டீசரை தன்னுடைய ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹிருத்திக் ரோஷன் ’ ‘வார் 2’ என்கிற நகரத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.
இங்கு கருணைக்கு இடமில்லை’ என ஜூனியர் என்.டி.ஆரை டேக் செய்து வரவேற்றுள்ளார். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் ஜூனியர் என்டிஆருடன் கியாரா அத்வானியும் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆரை வில்லனாகப் பார்க்க தெலுங்கு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படம் வரும் ஆகஸ்ட் 14 உலகம் முழுவதும் வெளியாகிறது!