இந்து டாக்கீஸ்

திரையிசை: காவியத் தலைவன்

சுரேஷ்

வசந்தபாலன், பிரித்விராஜ், சித்தார்த் எனப் பலரும் இருந்தாலும், கோச்சடையானுக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள படம் என்பதால், ‘காவியத் தலைவன்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதில் ஆச்சரியமில்லை. எடுத்த படங்கள் ஒவ்வொன்றிலும் புது சப்ஜெக்ட்டை கையாளும் வசந்தபாலன், இந்தப் படத்தில் நாடு விடுதலை பெறுவதற்கு முன் இருந்த சபா நாடகக் குழுக்கள் பற்றிய கதையைக் கையில் எடுத்திருக்கிறார்.

மொத்தம் ஆறு முழுமையான பாடல்கள், நாடகங்களில் இடம்பெறும் குறும்பாடல்களைப் போன்று 8 பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் அல்லி அர்ஜுனா நாடகத்தில் இடம்பெறுவது போல வாலியால் புதிதாக எழுதப்பட்டவை. பெரும்பாலான பாடல்களை ஹரிசரண் பாடியுள்ளார்.

நா. முத்துகுமார் எழுதி, ஹரிசரண் பாடியுள்ள "வாங்க மக்கா வாங்க" படத்துக்கும் ஆடியோவுக்கும் நல்ல அறிமுகமாக அமைகிறது. அடுத்த நான்கு பாடல்களையும் எழுதியிருப்பவர் பா.விஜய். அந்தக் காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும், ஸ்வேதா மோகன் பாடியுள்ள "யாருமில்லா தனி அரங்கில்" மெலடி பாடலில் ரஹ்மானை உணர முடிகிறது.

இருவர் படத்தில் வரும், "ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி" பாடலின் மெதுவான வெர்ஷன் போலிருக்கும் "ஏய்! மிஸ்டர் மைனர்" பாடல் (ஹரிசரண், சாஷா திரிபாதி) ரசிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. இன்றைய தேதிக்கு அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலை, வாணி ஜெயராமைத் தவிர வேறு யாரால் பாட முடியும்?

"சண்டிக் குதிரை" பாட்டு, ‘காதலிக்க நேரமில்லை’ "விஸ்வநாதன் வேலை வேணும்" பாடலை நினைவுபடுத்துகிறது. "சொல்லிவிடு சொல்லிவிடு" பாடலை முகேஷ் பாடியுள்ளார்.

ஹாலிவுட் படத்துக்கு இசையமைப்பதைத் தவிர்த்துவிட்டு இந்தப் படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆர்வம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பை, இந்த ஆடியோ பூர்த்தி செய்யவில்லை. மேலும், 40-50களில் நடக்கும் கதைக்கான பாடல்கள் என்ற உணர்வை முழுமையாகத் தரவில்லை.

SCROLL FOR NEXT