இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: கலப்படமற்ற மண்வாசனை

செய்திப்பிரிவு

“கிராமத்து வாழ்க் கையைப் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் கலப்படமோ சமரசமோ இல்லாமல், அசலான மண்வாசனையைத் தரும் முயற்சி இது” என்கிறார் ‘தொரட்டி’ படத்தின் இயக்குநர் பி.மாரிமுத்து. “காடு, மலை, மேடு கடந்து, காடோடியாக வாழ்பவர்களின் வாழ்க்கை இது. கிடை போடும் கீதாரி, கிடை காவல் காக்கும் ஆயுதம்தான் தொரட்டி. வெட்டவெளி வாழ்க்கை, வெள்ளந்தியான கூட்டம். ஆடுகளோடு ஆடாக அலையும் அப்பாவிக் கூட்டம். அப்படிப்பட்டக் கூட்டத்தைச் சேர்ந்த நாயகன் திசை மாறிச் செல்கிறான்.

வெந்த சோறு, சுட்டக் கறி, பட்டச் சாராயத்துக்காக வாழும் வஞ்சகக் கூட்டம் ஒன்றுக்கு தன் அறியாமையால் அடைக்கலம் கொடுக்கிறான். இரக்கப்பட்ட எளியவனோடு விதி விளையாடுகிறது. இது உண்மைக்கதை” என்று இலக்கியத் தோரணையுடன் கதை சொல்கிறார் இயக்குநர். `இளமறி மாயன்’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமாகிறார் ஷமன் மித்ரு. செம்பொன் கதாபாத்திரத்தில் நாயகியாக சத்யகலா அறிமுகமாகிறார். படத்தைப் பார்த்த திருக்குமரன் எண்டெடெயின்மெண்ட் நிறுவனம் அதை வெளியிடுகிறது.

சீ.வி.குமாரின் நாயகி

நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் உட்பட இன்று முன்னணி இயக்குநர்களாக வலம்வரும் பலரை அறிமுகப்படுத்தித் தரமான படங்களைத் தந்தவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார். ‘மாயவன்’ என்ற அறிவியல் புனைவுப் படத்தை இயக்கி இயக்குநராகவும் தன்னை நிரூபித்தார். தற்போது ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். ‘ஆடுகளம்’ நரேன், வேலுபிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக்குமார், பகவதி பெருமாள், இயக்குநர் ராமதாஸ் என நடிகர்கள் தேர்வே இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது.

இந்தப் படத்தில் கதாநாயகி உண்டா, இல்லையா என்பதை இதுவரை அறிவிக்காமல் இருந்தார் சீ.வி.குமார். சன் டிவியின் ‘கேளடி கண்மணி’ தொடர் மூலம் புகழ்பெற்று, தமிழ், தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கும் பிரியங்கா ருத்தை கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் தனது நடனத் திறமையைக் காட்டிய ப்ரியங்கா, இந்தப் படத்தில் நடிப்புத்திறமையையும் காட்டுவார் என நம்புகிறார் இயக்குநர்.

அர்ஜுனுடன் கூட்டணி!

அரவிந்த்சாமியைத் தொடர்ந்து ‘ஸ்மார்ட்’ வில்லனாக ‘இரும்புத் திரை’ படத்தில் தோன்றினார் ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன். அதற்கு ரசிகர்களிடம் ஆதரவும் கிடைத்தது. தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துவரும் ‘கொலைகாரன்’ படத்திலும் இதேபோன்ற ‘ஸ்மார்ட்’ கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் அர்ஜுன். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் இந்தப் படத்தில் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, நாசர், சீதா, ‘விடிவி’ கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியை ‘ஸ்மார்ட் + ஸ்மார்ட்= மாஸ்’ என்று வருணித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். 

சர்ச்சை இயக்குநர்!

அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரு சிவப்பு விளக்குப் பகுதி சென்னைக்குத் தேவை என்ற சர்ச்சைக்குரிய கருத்தை, ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தின் மூலம் அழுத்தமாகச் சொன்னவர் யுரேகா. இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘காட்டுப்பய சார் இந்தக் காளி’. ‘மத்திய சென்னை’ படத்தின் நாயகன் ஜெய்வந்த் கதையின் நாயகனாக நடிக்க, அறிமுக நாயகியாக ஐரா நடித்திருக்கிறார்.

“தமிழ்நாட்டில் தமிழில் பேசத் தயங்கும் தலைமுறை உருவாகிவிட்டது. நம் கலாச்சாரத்துடன் வாழவும் முடியாத ஒரு நிலைமை இங்கே உருவாகி வருகிறது. இந்த அசாதாரண சூழல் கண்ணுக்குத் தெரியாததுபோல் தோன்றலாம். ஆனால் எனது கதாபாத்திரங்கள் அதை எப்படி உணர்கிறார்கள் என்பதுதான் கதை. இவை கற்பனையான கதாபாத்திரங்கள் அல்ல. இங்கே வாழும் மக்களில் பலர். எனது முந்தைய படங்களைப்போலவே இதுவும் சர்ச்சைக்குரிய விவாதத்தைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்கிறார் இயக்குநர் யுரேகா.

போஸ்டர் நாயகன்!

ஹரி இயக்கத்தில், ஷிபு தமீம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சாமி ஸ்கொயர்’. இதன் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. அதில் தந்தையாகவும் மகனாகவும் இரு வேடங்களில் நடித்திருக்கும் விக்ரமை அனைவரும் பாராட்டித் தள்ளினார்கள். நடிகர் பிரபு, “ எனது அப்பா சிவாஜிக்குப் பிறகு நடிப்புக்கான தேடலை கமல்ஹாசனிடம் பார்த்திருக்கிறேன். இப்போது விக்ரமிடம் பார்க்கிறேன். அவர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தப் பொக்கிஷம்” என்றார்.

படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது “நான் சிறுமியாக இருந்தபோது ‘அந்நியன்’ படத்தில் வரும் ரெமோவின் போஸ்டரை என்னுடைய அறையில் ஒட்டிவைத்து ரசித்தேன். தற்போது அதே ரெமோவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் விக்ரம் எப்படியிருந்தாரோ அதேபோல்தான் இந்தப் படத்திலும் இருக்கிறார்” என்று விக்ரமுக்கு ஜலதோஷம் பிடிக்கும் அளவுக்குப் பாராட்டித் தீர்த்துவிட்டார்.

பாலாஜிக்கு மறுபடியும் வெளிய ஒரு பிக்பாஸ் வெயிட்டிங் - நித்யா @ தேஜு

SCROLL FOR NEXT