‘எல்லாருக்குமே உண்டு ஒரு முறிவுப் புள்ளி (breaking point)’. இது ‘12 ஆங்க்ரி மென்’ தொடங்கி ‘குருதிப்புனல்’ வரை பயன் படுத்தப்பட்ட புகழ்பெற்ற திரைப்பட வசனம். சில பத்தாண்டுகள் கடந்த திருமண பந்தத்துக்குப் பிறகு, தொடரவும் முடியாமல், வெளியேறும் காரணங்களும் புரியாமல் ஒரு பேரிளம் பெண்ணின் மனம் கோரும் ஒரு முறிவுப் புள்ளியை உளவியல்ரீதியாக ஆழமாக அலசும் சுயாதீனத் திரைப்படம் தான் ‘தி திரஷோல்ட்’. முதுமையின் தொடக்கத்தில் அடி வைத்திருக்கும் தம்பதி ராஜும் ரிங்குவும். இவர்களுடைய ஒரே மகனின் திருமணம் முடிகிறது.
ஒத்திசைவில்லாது கசந்த திருமண பந்தத்தில் உழலும் ரிங்கு தன் கணவனிடம் தான் வெளியேறுவது பற்றிக் கேட்கிறார். அவர் கேட்பது விவாகரத்து அல்ல, விடுதலை. அதன் பின் அந்த இரண்டு நாள்களுக்கு அத்தம்பதிக்குள் அவர்களின் கடந்த கால மணவாழ்க்கை குறித்த உரையாடல், மௌனம் என உளவியல் போராட்டம் நடக்கிறது. இறுதியில் அவர்களுடைய பல வருட பந்தம் என்னவாகிறது என்பதே கதை.
சிறார் சினிமா போலவே மூத்த குடிமக்கள் பற்றிய சினிமாவும் நம்மிடம் மிகக் குறைவு. ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘ஓகே கண்மணி’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற சில விதிவிலக்குகள் தவிர. அந்த வரிசையில் ஒரு நல்ல திரைப்படம் இது. ஒரு மூத்த தம்பதி, வீட்டின் பணிப்பெண் என மூன்று பேரை மட்டுமே வைத்துக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. வணிக சினிமாவின் பேசாப்பொருள்களான தனிமை, கையறு நிலை, முடிவெடுக்கும் தன்மை உள்படப் பல அகச்சிக்கல்கள் பற்றி அணுக்கமாகப் பேசுவது இப்படத்தின் சிறப்பம்சம்.
முக்கியமாகச் சொல்ல வந்த விஷயத்தைக் கதாபாத்திரங்கள் சொல்ல முடியாமல் விழுங்குவது, திசை மாற்றிப் பேசுவது, கனத்த மௌனம் என நிஜ வாழ்வின் அருகாமை தொட்டு உரையாடல் எழுதப்பட்டிருக்கிறது. எந்தவிதத் திரைக்கதை உத்திகளோ திருப்பங்களோ, பிளாஷ் - பேக் காட்சிகளோ இல்லாமல் முதன்மைக் கதாபாத்திரங்களின் வசிப்பிடத்துக்கு அருகே சலசலத்தும் பல சமயம் பெருக்கெடுத்தும் ஓடும் நீரின் தன்மையோடு கதை நகர்கிறது.
நாடகப் பின்னணியிலிருந்து வந்து சினிமாவில் தடம் பதித்த மிகத் தேர்ந்த நடிகர்களான நீனா குப்தா, ரஜித் கபூர் கணவன் - மனைவியாக நடித்துள்ளனர். திரைக்கதையிலும் உதவி புரிந்துள்ளனர். உரையாடல் மட்டுமன்றி மௌனங்களாலும் இவர்களது வாழ்வில் என்ன நடந்திருக்கலாம், பழைய வலிகளின் பின்னணிகள் என்ன என்பதைப் பார்வையாளர்களின் ஊகத்துக்கே கதாசிரியர் விட்டுவிடுகிறார். இதனாலேயே கதாபாத்திரங்களின் நாடகத் தன்மையற்ற உரையாடலும் அதிலிருக்கும் உள்ளக்கிடக்கை உச்சரிப்பின் வழி நமக்கு அதிகமாகப் புரிய வைத்து விடுகிறது.
நீரின் மேற்பரப்பில் எறியப்பட்ட கல் ஏற்படுத்தும் வளையங்கள் போல் படத்தில் எழுப்பப்படும் கேள்விகள் நம்மை ஆக்கிர மிக்கின்றன. எடுத்துக்காட்டாக: “நம்மிடம் என்ன இல்லை? ஒரு பிள்ளை, வீடு, வாகனம், பணம் இவை போதாதா ஒரு குடும்பத்துக்கு?” என ராஜ் கேட்கிறார். “இவை மட்டுமே குடும்பமாகி விடுமா?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறார் ரிங்கு. அவரவர் இழப்புகளை, அவரவர் நியாயத்துடன் பேசியபடி கதை நகர்கிறது. காதலின் தொடக்கப் புள்ளி எப்படியோ அப்படித்தான் பிரிவின் தொடக்கப்புள்ளியும். அது சொல்லிக்கொண்டு வருவதில்லை என்பதை அவர்களின் வாழ்வு நமக்குப் புரிய வைக்கிறது.
அன்றாட வாழ்வில் தமக்குள் சரிபாதியாக இருந்தவர்கள், பார்த்த, கேட்ட, அனுபவித்த சொற்களையும் நிகழ்வுகளையும் கதைக்களம் சாரமாக வைத்திருக்கிறது. வளர்ந்த பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறியபின் ஒரு கட்டத்தில் கணவன் மனைவி மட்டுமே சேர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் அடுத்தது என்ன என்கிற விடை தெரியாதவோர் அமானுஷ்யக் கேள்வி, ரிங்குவையும் ராஜையும் சுற்றிக்கொண்டேயிருகிறது. வெறும் 83 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இக்கதையை நிஹாரிகா நேகி எழுத, பூஷன் கிருபளானி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.
தபஸ் ரெலியாவின் குறைவான இசையும் பிரதீப் பாட்டீலின் திட்டமிட்ட நடையில் நகரும் சீரான படத்தொகுப்பும் கதையை நீரோடைபோல் நகர்த்துகின்றன. ஒரு குறும்படம் அளவுக்கு உள்ளடக்கம் இருந்தாலும் அதை ஒன்றரை மணி நேரப் படமாக மாற்றி கட்டமைத்திருப்பது இயக்குநரின் ஆளுமையைக் காட்டுகிறது.
ஓர் உறவு முறிய இன்னோர் உறவு இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்கிற மூத்தவர்களின் இருத்தலியல் நெருக்கடி குறித்து எப்போதாவதுதான் திரைப்படம் பேசுகிறது. பெண்ணின் திருமண வயது 21 போல் நம்மால் ஏன் ஒரு பெண்ணின் இல்லறப் பணி ஓய்வின் வயதைத் தீர்மானிக்க முடியவில்லை என்கிற கேள்வியைப் படம் எழுப்புகிறது. ஒரு சாமானிய மனிதனின் அன்றாடத்துக்கும் ஓர் இலக்கியப் படைப்புக்குமான இடைவெளியை இல்லாமல் செய்வதே கலையின் நோக்கம். அதைத் தன் பாடுபொருளால் அடைந்திருக்கும் இப்படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டாரில் காணலாம்.