இந்து டாக்கீஸ்

OTT Pick: டெஸ்ட் - வாழ்க்கை நடத்தும் தேர்வு!

செய்திப்பிரிவு

சென்னையில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் ஆட்டத்தின் கடைசி மேட்சில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டக்காரர்களில் ஒருவரான அர்ஜுன் (சித்தார்த்).

மாற்று எரிபொருளைக் கண்டறிந்து, அதில் இயங்கும் இன்ஜினையும் உருவாக்குவதைக் கனவாகக் கொண்டிருக்கிறார் சரவணன் (மாதவன்). ஒரு கட்டத்தில் அந்த ஆராய்ச்சிக்காகப் பெரும் தொகையை மனைவிக்குத் தெரியாமல் கடனாக வாங்கிவிட்டு, அதேநேரம் தனது கண்டறிதலின் அரசு அங்கீகாரத்துக்காகக் கொடுக்க வேண்டிய லஞ்சத்துக்குப் பணமில்லாமல் போராடுகிறார். இன்னொரு பக்கம், குழந்தை வேண்டும் என்கிற தனது மனைவி குமுதாவின் (நயன்தாரா) தாய்மைக் கனவை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார்.

இதற்கிடையில் அர்ஜுனைப் பயன்படுத்தி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட நினைக்கிறது ஒரு கூட்டம். வாங்கக் கூடாதவர்களிடம் வாங்கிய கடன் பிரச்சினையிலிருந்து மீள கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை ஈட்டிவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார் சரவணன். ஆனால், மனைவி குமுதா குறுக்கே வருகிறார். இந்த மூன்று கதாபாத்திரங்களும் வாழ்க்கை நடத்தும் இந்த ‘டெஸ்ட்’டில் எப்படிச் சாதூர்யம் காட்டுகிறார்கள் என்பதுதான் நெட்ஃபிளிக்ஸில் ஒரிஜினலாக வெளியான ‘டெஸ்ட்’ படத்தின் கதை.

பிரபல தயாரிப்பாளரான சஷிகாந்த் எழுதி, இயக்கி, இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் தனது முதல் முயற்சியில் விறுவிறுப்பாக ஆடியிருக்கிறார். மூன்று மனிதர்களின் வெவ்வேறு பிரச்சினைகளை, ஒரே புள்ளியில் இணைக்கும் திரைக்கதை, முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பு, கிரிக்கெட் போட்டிகளைப் படமாக்கிய விதம் என எல்லா அம்சங்களும் ஒரே சீராக ஏமாற்றம் அளிக்காத திரை அனுபவத்தைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

SCROLL FOR NEXT