உலகின் எந்த நடிகரும் இதுவரை முயலாத ‘ஹாலோ’ (HALO-Jump) பாணி சாகசத்தைத் தனது அடுத்த படத்துக்காகச் சாதித்திருக்கிறார் டாம் க்ரூஸ். ஆக்ஷன் ரசிகர்களால் இணையவெளியில் அதிகம் சிலாகிக்கப்படும் இந்தச் சாகசகக் காட்சி, ஜூலை 27 அன்று வெளியாகவிருக்கும் ‘மிஷன்:இம்பாசிபிள் - ஃபால்அவுட்’ திரைப்படத்தில் இடம்பெறுகிறது.
அதிரடியும் துப்பறிதலுமாக 90-களின் தொடக்கத்தில் பிரபலமான ஒரு தொலைக்காட்சித் தொடரைத் தழுவி, ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படம் 1996-ல் வெளியானது. இதில் டாம் க்ரூஸின் ஆக்ஷன் அதகளத்துக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது; வசூலும் குவிந்தது. ஆகவே, தன்னளவில் நிறைவாகவும் அடுத்தடுத்துப் படமாக்கும் எதிர்பார்ப்புடனுமாக, மிஷன் இம்பாசிபிள் தொடர் வரிசை உதயமானது. இந்த வரிசையின் ஐந்தாவது பாகமான ‘மிஷன்:இம்பாசிபிள்- ரோக் நேஷன்’ 2015-ல் வெளியானது. தற்போது ஆறாவது வெளியீடாக ‘மிஷன்: இம்பாசிபிள் - ஃபால் அவுட்’ திரைக்கு வரத் தயாராக உள்ளது.
சாகச நாயகன் ஈதன் ஹண்டின் முயற்சி ஒன்று தோல்வியில் முடிகிறது. அதனால் அவரது விசுவாசம், செயல்பாடு மீது சி.ஐ.ஏ நிறுவனம் சந்தேகம் கொள்கிறது. தன்னை நிரூபிக்கும் வகையில் அதுவரையில்லாத உலகப் பேரழிவுக்கு எதிரான சாகசத்தை ஈதன் மேற்கொள்கிறார். இதற்காக இம்முறை காலத்துடன் போட்டியிடும் ஈதனுடன், அவருடைய வழக்கமான கொலைகார எதிரிகளும் முன்னாள் நண்பர்களும் மோதுகிறார்கள்.
55 வயதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய, இப்படத்தில் டாம் க்ரூஸ் ஏகமாய் உழைத்திருக்கிறார் என்று ஹாலிவுட் புகழ்ந்து தள்ளுகிறது. லண்டனில் கட்டிடங்களுக்கு இடையே தாவும்போது கால் முறிந்து 2 மாதம் ஓய்விலிருந்தார். அபுதாபியில் 9 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதிக்கும் ‘ஹாலோ’ ஜம்புக்காக ஒரு வருடம் பயிற்சி பெற்றுப் பின்னர் சாதித்துக் காட்டியுள்ளார்.
சைமன் பெக், ரெபக்கா பெர்குசன், மைக்கேல் மோனஹன், சீன் ஹாரிஸ் என வழக்கமான நட்சத்திரப் பரிவாரங்கள் இதிலும் உண்டு. ‘ரோக் நேஷனை’த் தொடர்ந்து ‘மிஷன்: இம்பாசிபிள்’ வரிசையில் இரண்டாம் படத்தை இயக்கும் வாய்ப்பை கிறிஸ்டோஃபர் மெக்க்யரி (Christopher McQuarrie) இப்படத்தில் பெற்றுள்ளார்.
“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்