இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: இசையிலிருந்து நடிப்பு

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளர்கள் நடிகர்களாக உருமாறிவரும் சீசன் இது. தற்போது இந்தக் காற்று மலையாளக் கரையோரத்திலும் வீசத் தொடங்கிவிட்டது. ‘உஸ்தாத் ஹோட்டல்’,‘5 சுந்தரிகள்’, ‘ரிங் மாஸ்டர்’, ‘ஹெவ் ஓல்டு ஆர் யூ’,‘சார்லி’,‘புலிமுருகன்’ உட்பட பல சூப்பர் ஹிட் மலையாளப் படங்களின் இசையமைப்பாளரான கோபி சுந்தர், ‘டோல் கேட்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். படத்தை இயக்குபவர் ஹரி கிருஷ்ணன்.

நடிப்பிலிருந்து இயக்கம்!

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்துவருபவர் பிருதிவிராஜ். நடிப்புக்கு முதலிடம் கொடுத்தாலும் தற்போது ‘லூசிஃபெர்’ என்ற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அடிவைத் திருக்கிறார். மோகன்லால் நாயகன்,மஞ்சு வாரியர் நாயகி, விவேக் ஓபராய் வில்லன் எனப் படத்தின் நட்சத்திரப் பட்டியல் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

மூன்றுமே முக்கியம்!

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் அறிமுகமான கேரள வரவு ஐஸ்வர்யா மேனன். அதன்பிறகு ’தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரா’ படங்களில் நடித்தவர் இப்போது ‘தமிழ்ப் படம் -2’ மூலம் மீண்டும் வந்திருக்கிறார். இடையில் ஏங்கே சென்றிருந்தார் என்றால் “கன்னடம், தெலுங்கு, மலையாளம் மூன்றிலுமே எனக்குப் பிடித்த கதைகளில் மட்டுமே நடித்தேன். இனி மூன்று மொழிகளிலுமே தொடர்வேன். மூன்றுமே எனக்கு முக்கியம்” என்கிறார். ஏற்கெனவே ஒரு ஐஸ்வர்யா ராஜேஷ் களத்தில் இருக்கும்போது அதே பெயரில் தொடரவேண்டுமா என்றால், “பெயரில் என்ன இருக்கிறது, நமது நடிப்பு பிடித்திருந்தால் இன்னும் நான்கு கதாநாயகிகள்கூட ஒரே பெயரில் தொடரலாம்” என்கிறார் ஐஸ்வர்யா.

மீண்டும் கழுகு!

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு படம் அடையாளம். அண்ணன் பிரபலமான இயக்குநராக இருந்தாலும் நடிகர் கிருஷ்ணாவுக்கு அடையாளம் தந்த படம் ‘கழுகு’தான். சத்யசிவா இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகிவருகிறது. இம்முறையும் பிந்து மாதவிதான் ஜோடி. ஆனால் “முதல் பாகத்தைவிடச் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் சத்யசிவா.

“அண்டை மாநில முதலமைச்சர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த மேற்குத் தொடர்ச்சிமலை வனப்பகுதிக்குள் விழுந்து விடுகிறது. மீட்புப்பணிக்காக ராணுவம் வந்தாலும் உள்ளூர் மக்களின் வழிகாட்டுதல் தேவை. மக்களோ வரமறுக்கிறார்கள். காரணம் ஹெலிகாப்டர் விழுந்த இடம், செந்நாய்கள் வசிக்கும் கோட்டை. இந்தத் தருணத்தில்தான் நாயகன் கிருஷ்ணாவின் உதவி தேவைப்படுகிறது. இதன்பிறகு ஒவ்வொரு நிமிடமும் மிரட்டலாக இருக்கும்” என்கிறார்.

அதர்வா அடுத்து…

 ‘இமைக்கா நொடிகள், ‘பூமராங்’, ‘ஒத்தைக்கு ஒத்த’, ‘100’ எனப் பல படங்களைக் கையில் வைத்திருக்கிறார் அதர்வா. இந்நிலையில் ‘மரகத நாணயம்’ அறிமுகப்படத்தை சூப்பர் ஹிட்டாகக் கொடுத்த ஏ.ஆர்.கே.சரவன் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கலாச்சார த்ரில்லர்!

சொற்கலப்பின்றி தமிழில் தலைப்பு சூட்டுவது மீண்டும் அரிதாகிவிட்ட நிலையில் ‘தீதும் நன்றும்' என்ற அழகான தலைப்புடன் ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் ராசு ரஞ்சித். இவர் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர். “அன்றாடத் தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதைதான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும், பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால்தான்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற சங்க இலக்கியம் காட்டும் நீதியில் இருந்துதான் இந்தப் படத்துக்கான ஒருவரிக் கதையை எடுத்தேன். எனினும் கதாபாத்திரங்கள் நிகழ்காலத்தின் கண்ணாடிகள். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது படம். நம் கலாச்சாரம் அதற்கு எதிரான குற்றங்களும் உரசிக்கொள்ளும் திரைக்கதை புதுவித அனுபவத்தைக் கொடுக்கும்” என்கிறார் படத்தின் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ள ராசு ரஞ்சித். மற்ற இரண்டு நாயகர்களாக சந்தீப் ராஜ், ஈசன் நடிக்க, நாயகியாக '8 தோட்டாக்கள்' புகழ் அபர்ணா பாலமுரளி நடித்துவருகிறார்.

ஹாட்ரிக் கூட்டணி?

‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களின் வசூல் மூலம் நடிகர் விஜய் - அட்லீ கூட்டணி ரசிகர்கள் மற்றும் வசூல் வட்டாரத்தின் பாராட்டைப் பெற்றது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தில் நடித்துவரும் விஜய், மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை இந்தக் கூட்டணி தரவிருப்பது முழுமையான மசாலா பொழுதுபோக்கு படமாம்.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

SCROLL FOR NEXT