இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: வீரத்தின் மகன் | ஒரு கற்பனைத் தீவின் கொடுங்கனவு!

திரை பாரதி

கடந்த 2009இல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இலங்கையின் வடகிழக்குக் கடற்கரை ஊர்களில் ஒன்றான முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்தது. அதில் புலிகள் அமைப்பின் போராளிகளும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களும் இலங்கை ராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதை பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல் 4, தனக்குக் கிடைத்த காட்சிகளின் வழியாக உறுதி செய்தது.

அதேபோல், அப்போரில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை இலங்கை ராணுவம் உறுதி செய்தது. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போராளிகள் பலரும் கொல்லப்பட்ட நிகழ்வும் இலங்கை மீதான போர்க் குற்றப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால், மிக முக்கியமாகப் பிரபாகரனின் கடைக்குட்டி மகன், 12 வயதேயான பாலசந்திரன் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, 5 முறை சுடப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களைத் பெருந்துயரத்தில் ஆழ்த்தியது. அந்தப் படுகொலைச் சம்பவத்தைக் களமாக வைத்து வெளிவந்துள்ள படம்தான் ‘வீரத்தின் மகன்’.

இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்களைச் சர்வதேசச் சமூகம் தடுக்கத் தவறிய நிலையில், போருக்குப் பின்னர் இலங்கையில் எஞ்சியிருந்த தமிழ் மக்கள், சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் அடைக்கப்பட்டு வதைபட்டனர். பின்னர், அவர்களின் கணிசமான நிலங்கள் பிடுங்கப்பட்டு அங்கெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் வலிந்து செய்யப்பட்டன. எஞ்சியிருப்பவர்கள் சிங்கள ராணுவத்தால் வெள்ளை வேன் கொண்டு கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் அடிக்கப்பட்டனர். இந்த நிகழ்காலக் கொடுமைகள் குறித்துப் பல திரைப்படங்கள் கடந்த பல ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. அதில் ‘வீரத்தின் மகன்’ தமிழ் நாட்டில் தயாரான ஒரு படம். அங்கே விசாரணைக் கைதிகளாக ராணுவச் சிறைக் கொட்டடிகளில் பிடித்து வைக்கப்பட்ட பெண் போராளிகள் தொடர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் கொடுமை, ஆண் போராளிகள் விசாரணைக்குப் பின் கொல்லப்பட்டுவருவது போன்ற சிக்கல்கள் தொடர்ந்து வருவதாக கல் நெஞ்சத்தையும் கரைக்கும்விதமாகப் இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்றாகத் தொடர்வதால், தணிக்கைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, இலங்கை என நேரடியாகக் குறிப்பிடாமல், படத்தில் கற்பனையான தீவு ஒன்றில் நடக்கும் இன விடுதலைப் போராட்டமாகக் கதைச் சித்தரிக்கப்படுகிறது. அப்போராட்டத்தில் ஆயுதப் போராளிக் குழுத் தலைவருக்கு அன்பழகன் எனப் பெயர் சூட்டியிருக்கிறார் எழுதி, இயக்கியிருக்கும் அன்புமணி. அவரே ஒளிப்பதிவு செய்து, சரவணன் என்கிற ராணுவ வீரராக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

போருக்குப் பிறகான ஒரு ராணுவ முகாம் தான் கதைக் களம். அங்கே ஒரு கேப்டனின் தலைமையில் பல ராணுவத் துணை அதிகாரிகளும் வீரர்களும் பணியாற்றுகிறார்கள். அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆண், பெண் போராளிகள் பலரும் பட்டினி, குறைந்த உணவு, பாலியல் வல்லுறவு, கடுமையான உடல் உழைப்பு, உடல் ரீதியான சித்திரவதை எனப் பல துன்புறுத்தல்களுக்கு விசாரணை என்கிற பெயரால் உள்ளாகி வருகிறார்கள். மரணத்தைத் தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தாலும் அதற்கான வழி தெரியாமல் கடிமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

இச்சூழ்நிலையில் இறுதிப் போருக்குப் பின் பிடிபட்ட, போராளிகள் குழுத் தலைவர் அன்பழகனின் மகன் 12 வயது இனியனை இந்த முகாமுக்கு அழைத்து வருகிறார்கள். இனியனைப் பாதுகாக்கும் பொறுப்பில் ராணுவ வீரர் சரவணன் அமர்த்தப்படுகிறார். முதலில் இனியனை வெறுக்கும் சரவணன், தன்னுடைய ஒரே மகன் கண்ணனை விடச் சில வயதுகள் இளையவனாக இருக்கும் இனியன் மீது அன்பு காட்டத் தொடங்குகிறார். அதற்கு இனியனின் அணுகுமுறையும் ஒரு சிறுவனின் தந்தை என்பதையும் சினிமாத்தனம் துளியும் இல்லாத காட்சிகளின் வழியாக யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் அன்புமணி.

இனியனை விசாரிக்கும் ராணுவ அதிகாரிகள் குழுவின் அணுகுமுறையும் யதார்த்திலிருந்து விலகவில்லை. இறுதியில் இனியன் விடுதலை செய்யப்பட்டானா இல்லையா என்பதை நோக்கி நகரும் இப்படைப்பில் சில குறைகள் இருந்தாலும் அதைத்தாண்டி, நடுநிலையுடன் நியாயத்தின் பக்கம் தன் பார்வையை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். இறுதிக் காட்சியில் தனது மூத்த அதிகாரியிடம் சரவணம் கேட்கும் கேள்வி, தமிழர்கள் இலங்கையில் அழித்தொழிக்கப்பட்டபோது கள்ள மௌனம் சாதித்த சர்வதேசச் சமூகத்துக்கானது.

உயர்தரமான இப்படைப்பின் மேக்கிங், குறைந்த செலவில் நம்பகமாக காட்சிகளையும் காட்சி சட்டங்களையும் நம் முன் விரிக்கிறது. இயக்குநரே நல்ல நடிகராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருப்பது படத்துக்கு நேர்த்தியைக் கொண்டு வந்திருக்கிறது. போராளிக் குழுத் தலைவர் இனியன் அன்பழகனாக நடித்துள்ள சிறார் நடிகர் மாஸ்டர் அத்வைத் தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி, பாலசந்திரன் பிரபாகரன் கொல்லப்பட்ட நாள்களுக்கு நம்மை அழைத்துப் போகிறார். அவரது மலையாளம் கலந்த தமிழ் ஈழ பேச்சு வழக்காக இல்லாவிட்டாலும் குழந்தைத்தனத்துடன் ஈர்க்கிறது.

ராணுவ முகாமின் செல்லில் அடைக்கப்பட்டுள்ள குழந்தையாக வரும் மழலை ஜோயலின் அழுகை உங்களை அழ வைக்கும். அந்த முகாமின் செல்லில் இருக்கும் போராளிகளும் ராணுவ அதிகாரிகளாக வருபவர்களும் நல்லப் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கும் பிஜு ரவிந்தீரன் தமிழர்களின் இன, நிலவியல் வரலாறு தெரியாத தற்குறி என்பது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி மனிதாபிமானத்துடன் அவர் அமைத்துள்ள காட்சிகளுக்காக அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதேபோல், இதுபோன்றதொரு படத்தை உருவாக்க நினைத்தற்காகவே அன்புமணியைப் பாராட்டலாம். அவர் ஒரு நல்ல நடிகராக, இயக்குநராகத் தொடர்ந்து களமாட வாழ்த்துவோம். அதேபோல் இப்படத்தின் எடிட்டர் ஆர்.ஜஸ்டின் பிரண்டாஸ், பாடல் இசையமைப்பாளர் ரவி மேனன், கலை இயக்குநர் சஜித் ஆகியோரும் தரமான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு கற்பனைத் தீவின் கொடுங்கனவுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இது இலங்கை இனப்போராட்டத்தின் அசல் பிரதி என்பதைப் படத்தைக் காணும் உலகத் தமிழர்கள் அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.

SCROLL FOR NEXT