ஒரு டாக்டர், கார்ப்பரேட் மருத்துவமனையில் பணிபுரிகிறான். மருத்துவத் தொழிலை உன்னதமான சேவையாகக் கருதும் அவன், ஏழைகளுக்குக் குறைந்த விலை மருந்துகளை எழுதிக் கொடுப்பது, அனாவசிய மருத்துகளைப் பரிந்துரை செய்யாமல் இருப்பது என்று செயல்படுகிறான். நிஷா என்னும் பெண்ணை அவனுக்கு நிச்சயம் செய்கிறார்கள்.
நிஷா எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுப் படபடக்கும் பெண். தொழிலில் இவனுக்கு இருக்கும் அதீத ஈடுபாடு, அவனுடைய அளவுக்கதிகமான பொறுமை ஆகியவை அவளை வெறுப்படையச் செய்கின்றன. இவர்களுக்கிடையேயான ஒவ்வொரு சந்திப்பும் பிரச்சினையில் முடிகிறது.
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் ஒரு பெண்ணைத் தற்செயலாகப் பார்க்கும் சலீம், அவளுக்கு மருத்துவம் செய்கிறான். ஆனால் அவளுக்கு அநீதி இழைத்தவர்களை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சலீமின் போக்கு தங்களுக்கு ஒத்துவராததால் மருத்துவமனை நிர்வாகம் அவனை வெளியே அனுப்புகிறது. காதலியும் அவனைப் புறக்கணிக்கிறாள். அவமானமும் புறக்கணிப்பும் வெறுப்பின் உச்சத்துக்கு அவனை இட்டுச் செல்கின்றன. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் வெடிக்கிறான். அந்த வெடிப்பு அவனை எங்கே இட்டுச் செல்கிறது என்பதே மீதிக் கதை.
முதல் பாதி முழுவதும் அவமானம், புறக்கணிப்பு, நல்லுணர்வின் வீணான முயற்சிகள் என நகரும் படம் பின் பகுதியில் த்ரில்லராக முகம் மாறுகிறது. அமைச்சரின் பையனையும் அவன் நண்பர்களையும் பிடித்துவைத்துக்கொண்டு ஆடும் விறுவிறுப்பான ஆட்டமாக உருவெடுக்கிறது. முக்கியமான சமூகப் பிரச்சினையைக் கையாளும் படம், அதை த்ரில்லர் வகையில் கையாண்டிருந்தாலும் முதல் பாதி உதிரிச் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது. உறவுச் சிக்கல்கள், தொழில் நெருக்கடிகள், சமூகப் பிரச்சினைகள் எனப் பல விஷயங்களை முதல் பாதி கையாள்கிறது. இரண்டாம் பாதி ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துகிறது.
சாது மிரண்டால்... என்பதற்கு ஏற்ற கதையும் அதற்கேற்ற பாத்திரப் படைப்பும் தமிழ்த் திரையில் புதிதல்ல. எனவே படம் புதிய அனுபவம் எதையும் தரவில்லை. சாது நாயகன் வீர அவதாரம் எடுக்கும்போது சூர சம்ஹாரம் செய்யும் பராக்கிரமசாலியாகக் காட்டாமல் புத்திசாலித்தனத்தையும் சேர்த்திருப்பது ஆறுதல். முன் பாதியில் காட்டப்பட்ட பிரச்சினையைப் பிற்பகுதியில் கவனமாகக் கோர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
இயக்குநர் என்.வி. நிர்மல் குமார் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் படம் முழுவதும் ஒரு ஓட்டலுக்குள்ளேயே நடந்தாலும் வேகம் குறையவில்லை. பிணைக் கைதிகளைத் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு பேசும் பேரங்களும் அப்போது நடக்கும் திருப்பங்களும் விறுவிறுப்பாக உள்ளன.
நாயகனின் உருமாற்றத்திற்கான காட்சிகள் வலுவாக அமையவில்லை. இரவு பார்ட்டியிலிருந்து வெளியே வந்து போலீஸிடம் மாட்டிக்கொள்வது, போலீஸிடமிருந்து தப்பிப்பது ஆகிய காட்சிகள் வலுவாக அமையவில்லை; கவரவில்லை. பிணைக் கைதிகளை விடுவித்து, வில்லனின் தாக்குதலிலிருந்தும் தப்பிக்கும் சலீம் தனியாக நிற்கும் காட்சியில் தொடரும் என்று போட்டு முடிக்கிறார்கள். இவனைப் பற்றிச் சகல விவரங்களும் அறிந்த போலீஸிடமிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதை அடுத்த படத்தில் காட்டுவார்களோ?
கைதிகளைப் பிடித்துவைத்திருப்பவன் பெயர் சலீம் என்றதும் அவனை பயங்கரவாதி எனச் சந்தேகப்படும் போலீஸ் அதிகாரிக்கு சலீம் தரும் பதில் நச்சென்று உள்ளது.
விஜய் ஆண்டனி நல்ல தேர்வு. இறுக்கமான அமைதி பொருந்திய அவரது முகம் இந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. ஆனால் அவர் முகபாவங்களில் மாற்றங்களைப் பார்க்கவே முடியவில்லை. நுட்பமான நடிப்பு என்றால் சலனமே இல்லாத நடிப்பு என்று நினைத்துவிட்டார்போல.
பூசினாற்போன்ற தோற்றம் கொண்ட அக்ஷா பர்தசானி சட்டுச் சட்டென்று மாறும் முக பாவங்கள் மூலம் கவனிக்கவைக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படும் பெண்ணைச் சரியாகவே பிரதிபலிக்கிறார். இரண்டாம் பாதியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கவனத்தில் நிற்கும்படி செய்திருக்கிறார்.
மத்திய அமைச்சராக வரும் ஆர்.என்.ஆர். மனோகர் நன்றாக நடித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் இசையில் மஸ்காரா பாடல் நன்றாக இருக்கிறது. வழக்கம் போல இதிலும் பெண்களைக் காதல் துரோகிகளாகச் சித்தரிக்கும் பாடல் இருக்கிறது. ஆனால் அதைக் கதைக்குள் கொண்டுவராமல் தந்திரமாகப் புகுத்தியிருக்கிறார்கள்.
முதல் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சலீம் அழுத்தமான தடம் பதித்திருப்பான்.