இந்து டாக்கீஸ்

பெண் எனும் உரைவாள்! - ஜென்டில்வுமன் திரைப் பார்வை

ரசிகா

முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அரவிந்த் (ஹரிகிருஷ்ணன்) - பூரணி (லிஜோமோள்) இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்திருமணம் முடித்த தம்பதி. நன்றாகப் போய்க் கொண்டிருந்த நாள்களில் ஓர் எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டு கணவனைக் கொன்றுவிடுகிறார் பூரணி.

ஆனால், பதற்றமடையாமல் சடலத்தை வீட்டின் குளிர் பதனப் பெட்டி யில் ஒளித்து வைக்கிறார். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க முடியாமல் இருக்கும் அவரின் வீட்டுக் கதவை தட்டுகிறார் அன்னா (லாஸ்லியா) என்கிற பெண். அவரைத் தொடர்ந்து போலீஸும் வருகிறது. அன்னா யார்? அவரையும் போலீஸையும் பூரணியால் சமாளிக்க முடிந்ததா என்பது படம்.

பெண்களை வெறும் உடலாக மட்டுமே காணும் ஓர் ஆணிடம் சிக்கிய இரண்டு பெண்களின் கதை. அந்த இரண்டு பேரும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்தித்துக் கொண்டார்கள், சில ஆண்களின் உலகம் அவர்களை எவ்வாறு இணைக்கிறது என்பதை நோக்கி நகரும் திரைக்கதை. ஒரு சில செய்தித்தாள்களில் இடம்பெறும், திருமணம் தாண்டிய உறவினால் விளையும் குற்றச் செய்திகளைப் போல் காட்சிகள் நகர்கின்றன.

ஆனால், கதாபாத்திரங்களை வடிவமைத்ததில் தேர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன். பூரணி, கணவன் மீதான பற்றுறுதியை இழந்து நொடிக்குள் கொலையுணர்ச்சி யைப் பெறும் இடமும், அதனால் சட்டனெ நிகழ்ந்துவிடும் குற்றமும், குற்றத்துக்குப் பின்னர் பதற்றமில்லாத அவரின் துணிவும் எனப் பூரணியை நம்பகமாகச் சித்தரித்திருக்கிறார்கள். அதேநேரம், பூரணி கதாபாத்திரம் சொந்த ஊரில் எப்படியிருந்தது என்பதைத் தொட்டுக் காட்டாதது இடறுகிறது.

‘லைஃப் இன்சூரன்ஸ் எக்ஸ்பயரி ஆகிடுச்சு.. ரின்யுவல் பண்ணணும் அரவிந்த் இல்லையா?’ எனக் கேட்டுவரும் அன்னாவிடம் ‘என் புருஷன் மட்டும்தான் வேணுமா?’ எனச் சூசகமாக உண்மையைச் சுட்டிக் காட்டும் பூரணி, ஒரு கட்டத்தில் அன்னாவைக் கையாளும் விதம் பெண்களின் மனதைத் தொடும்.

இந்த மூன்று கதாபாத்திரங் களுக்கு அப்பால், படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று காவல் அதிகாரி கதாபாத்திரங்கள் இரண்டுவிதமாகப் பெண்களை அணுகுவது படத்தின் வணிக மதிப்பைக் கூட்டி யிருக்கிறது. ராஜீவ் காந்தி (திமுக), வைரபாலன், துணை ஆணையராக வருபவர் ஆகிய மூன்று பேரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ படத்தில் ஜானி என்கிற கதா பாத்திரத்தில் வந்து ஆச்சரியப்படுத்திய ஹரிகிருஷ்ணன், அதன்பிறகு ‘ரைட்டர்’, ‘கபாலி’, ‘தங்கலான்’ எனக் கிடைத்த கதா பாத்திரம் எதுவாக இருந்தாலும் அதுவாக உருமாறிக் காட்டினார். இதிலும் அப்படியே! லிஜோமோள் இதற்கு முன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரங்களை மறக்கும் அளவுக்குப் பூரணி அமையா விட்டாலும் அவரும் அன்னாவாக வரும் லாஸ்லியாவும் கிடைத்தவெளியைத் தரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவு பலவீனமாக இருந்தாலும் யுகபாரதியின் உரை யாடலும் வயலின் கொண்டு பெண்களின் வலியை இசைக்க முயலும் கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. பெண்களைக் குறைத்து மதிப்பிடும் ஆண்களும், கணவன், காதலன் என உறவில் இருக்கும் ஆண்களைக் கண் மூடித்தனமாக நம்பும் பெண்களும் பார்க்க வேண்டிய படம்.

SCROLL FOR NEXT