இந்து டாக்கீஸ்

சுழல் 2 - மீண்டும் அதே பிரம்மாண்டம் | ஓடிடி திரை அலசல்

ஆர்.சி.ஜெயந்தன்

கடந்த 2023இல் அமேசான் தளத்தில் வெளியான ‘சுழல்’, முக்கிய சமூகப் பிரச்சினையைக் கதையாகத் துணிந்து பேசியது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத திரைக்கதை, அட்டகாசமான நடிகர்கள் தேர்வு, அபாரமான கலை இயக்கம், சாம்.சி.எஸ்ஸின் ஊக்கமூட்டும் இசை என ‘வெப் சீரீஸ்’ ரசிகர் களுக்குப் பெரும் தீனியாக அமைந்தது. அத்துடன் தமிழில் பிரம்மாண்டமானதோர் இணையத் தொடர் இல்லையே என்கிற குறையையும் துடைத் தெறிந்தது.

தற்போது வெளியாகி இருக்கும் ‘சுழல் - தி வோர்டெக்ஸ் - சீசன் 2’, காளிப்பட்டினம் என்கிற கற்பனையான கிராமத்தைக் களமாகக் கொண்டிருக்கிறது. அதேபோல் முதல் சீசனில் முக்கியக் கதாபாத்திரங்களாக வந்தவர்களில் காவல் உதவி ஆய்வாளர் சர்க்கரையும் (கதிர்) முதல் பாகத்தின் கதைக் களமான சாம்பலூரின் யூனியன் லீடர் சண்முகத்தின் மூத்த மகள் நந்தினியும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இதில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். தன் தங்கை நிலா காணாமல் போன மர்மத்தின் பின்னணியை அறியமுடியாத நிலையில், முதல் பாகத்தின் முடிவில் நந்தினி சிறைக்குச் செல்வதோடு தொடர் முடிந்தது.

இரண்டாவது சீசனில் சமூக அக்கறை கொண்ட, மக்களின் வழக்கறிஞர் லாலின் கொலையுடன் தொடங்குகிறது. முன்பு நிலா காணாமல் போன வழக்கை புலனாய்வு செய்து வந்து சர்க்கரை, இப்போது வழக்கறிஞரின் கொலையை விசாரிக்கிறார். வழக்கறிஞருடன் தொடர்புப்படுத்தப்படும் 8 இளம் பெண்களும் அவரது விசாரணை வளையத்துக்குள் வருகிறார்கள். முதல் சீசனின் முடிவில், நந்தினி பதின்ம வயது தொடங்கி தன் மனதுள் புதைத்து வைத்திருந்த ரகசியம் வெளிப்படுவது போலவே, நிலா போன்ற இளம் பெண்கள் காணாமல் போகும் மர்மத்தின் பின்னணியில் இருக்கும் முகங்களையும் அவர் களின் இயல்புகளையும் துலக்கிக் காட்டுவதுடன் முடிகிறது.

அசுரத்தனமாக விரையும் திரைக்கதையை இந்த சீசனுக்கும் எழுதி இருக்கிறார்கள் புஷ்கர் - காயத்ரி இயக்குநர் தம்பதி. இயக்கு நர்கள் பிரம்மா - கே.எம். சர்ஜுன் ஆகிய இருவரும் முதல் சீசனில் காட்டியிருந்த அதே புத்துணர்வை 8 எபிசோட்களிலும் பரவவிட்டிருக்கிறார்கள். இத்தொடரின் நாயகன் கதைதான் என்றாலும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்ஸின் பாடல்களும் இசையும் அவரையே நாயகன் என்பதுபோல் காட்டியிருக் கின்றன.

குறிப்பாக நாட்டார் தெய்வ வழிபாட்டின் மரபார்ந்த பழமை, அதன் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிர்த்திசையில் சுழலும் சமூக யதார்த்தமாக நம்மை அதிர வைக்கும் முகமூடி மனிதர்களைத் தொடரின் கிளைமாக்ஸ் நமக்கு அடை யாளம் காட்டுகிறது. பழமையும் கசப்பான நவீன யதார்த்தமும் மோதி விலகும் இந்த முரண்பாட்டை முன்வைக்கும் அஷ்ட காளி திருவிழா காட்சிகளுக்கு சாம்.சி.எஸ். உயிர் கொடுத்திருப்பது உலகத் தரம். எந்தமொழிப் பார்வையாளர்கள் இத்தொட ரைக் கண்டாலும் மூச்சடைத்துப் போவார்கள். அவ்வளவு பிரம்மாண்டம்!

SCROLL FOR NEXT