இந்து டாக்கீஸ்

திரைப்பள்ளி 13: சுப்ரமணியபுரம் உருவாக்கிய சலனம்!

ஆர்.சி.ஜெயந்தன்

உலக வணிக சினிமாவின் தொட்டிலான ஹாலிவுட்டில், மசாலா அம்சங்களைத் தூரமாக நிறுத்திவைத்து, தரமான படங்களைத் தந்த பழம்பெரும் இயக்குநர் ராபர்ட் வைஸ். இவர் இயக்கிய திரைப்படங்களில் 1965-ல் வெளியான ‘தி சவுண்ட் ஆஃப் மியூசிக்’ (The Sound of Music), 1971-ல் வெளியான ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ (West side story) ஆகிய படங்கள் பல ஆஸ்கர் விருதுகளைக் குவித்தவை.

இவ்விரு இசைச் சித்திரங்களை, நாவல் மற்றும் நாடகத்திலிருந்து தழுவி திரைக்கதை எழுதியவர் ஏர்னெஸ்ட் மெஹ்லான். 50-கள் தொடங்கி 70-கள் வரையிலான அமெரிக்க ஆஃப் பீட் படங்களின் திரைக்கதைகளுக்கு மசாலா வீக்கங்கள் ஏதுமின்றி கச்சிதமாக எழுதப்பட மெஹ்லானின் தேர்ச்சிமிக்க திரைக்கதைகளே உந்துதல் அளித்தன. திரைக்கதாசிரியரே ஒரு திரைப்படத்தின் முதல் பிரம்மா என்பதை அவர் தன் அனுபவங்கள் வாயிலாகக் கூறுவதைப் பாருங்கள்.

“திரைப்படங்கள் அனைத்தும் முதலில் எழுதப்படுகின்றன. பின் தயாரிப்பு வடிவமைப்புக்கு உட்படுகின்றன. அதன்பின் நடிகர்களால் நடிக்கப்படுகின்றன. நடிகர்கள் இயக்குநரால் இயக்கப்படுகிறார்கள். காட்சிகள் படம்பிடிக்கப்படுகின்றன. பின்னர் அவை தொகுக்கப்படுகின்றன, இசையமைக்கப்படுகின்றன.

ஆனால், இறுதி வடிவத்துக்கு எந்தக் காட்சி தேவை, தேவையில்லை, எந்தத் தகவல் நாடகமயமாக்கப்பட வேண்டும், எந்தக் காட்சியின் செயல், உரையாடல் வழியாக வெளிப்பட்டே ஆகவேண்டும், ஒரு காட்சி கண்முன்னே நடைபெற வேண்டுமா அல்லது பார்வையாளரின் கற்பனை எனும் திரைமறைவுக்குள் நடைபெற வேண்டுமா, இதுபோன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளை முன் தீர்மானித்து எழுதுபவர்தான் திரைக்கதை ஆசிரியர்” என்கிறார் மெஹ்லான். எவ்வளவு உண்மையான சொற்கள்.

சம்பவங்களை இணைக்கும் புள்ளிகள்

எந்தக் களத்தின் பின்னணியில் திரைக்கதை நிகழ்ந்தாலும், திரைக்கதையில் காலம் எப்படிச் சிதற அடிக்கப்பட்டாலும் அதன் வடிவம் மாறப்போவதே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டீர்கள். தொடக்கம், நடுப்பகுதி, முடிவு என்ற தீர்வு ஆகிய இந்த மூன்று அடிப்படையான அங்கங்களில் நடக்கும் சம்பவங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் புள்ளிகள் பற்றிய தெளிவு தேவை.

உங்களது திரைக்கதையின் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திவிட்டீர்கள். அவர்களது வாழிடம் மற்றும் வாழ்க்கைச் சூழலையும் பார்வையாளர்களுக்குச் சில காட்சிகளில் காட்டிவிட்டீர்கள் என்றால் அடுத்து திரைக்கதை எதிர்கொள்ளும் நெருக்கடி என்னவாக இருக்கும்? முதன்மைக் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினையை எவ்வளவு விரைவாகப் பார்வையாளர்களுக்குக் காட்டுகிறீர்களோ அவ்வளவு விரைவாகத் திரைக்கதை வேகமெடுக்கும்.

இந்த முக்கியப் பிரச்சினையைத்தான் ‘ப்ளாட் பாய்ண்ட்-1 ’ (Plot Point -1) என்கிறோம். ஒரு விறுவிறுப்பான திரைக்கதையில் திணிப்பாகத் தெரியாத ஐந்து ப்ளாட் பாயிண்ட்களை நீங்கள் பயன்படுத்த முடியும். திரைக்கதையின் முதல் அங்கமான தொடக்கத்தை முடித்துவைத்து, கதையை இரண்டாம் அங்கமான நடுப்பகுதி நோக்கி நகர்ந்துசெல்ல உதவுவதே இந்த முதல் ப்ளாட் பாயிண்ட்.

திரைக்கதையின் இரண்டாம் அங்கம் அல்லது நடுப்பகுதியில்தான் முதன்மைக் கதாபாத்திரம் தனது முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டு போராடுகிறது. இந்தப் போராட்டத்திலிருந்து மீண்டு அல்லது சமாளித்து மூன்றாவது அங்கமான தீர்வை நோக்கிச் செலுத்துவதே ‘ப்ளாட் பாயிண்ட் – 2’ (Plot Point 2). இந்த இரு கண்ணிகளும் திரைக்கதையின் மூன்று அங்கங்களையும் இணைப்பது மட்டுமல்ல; ஒரு அங்கத்திலிருந்து அடுத்த அங்கம் நோக்கி கதையைச் செலுத்தும் ஊக்க சக்திகள். “ஒரு முக்கிய சம்பவம், கதையின் போக்கைச் சடாரென்று திசைதிருப்பி, வேறொரு திசைநோக்கி பயணிக்கச் செய்வதே ப்ளாட் பாயிண்ட்” என்று விளக்கம் தருகிறார் சித் ஃபில்ட்.

‘சுப்ரமணியபுர’த்தின் ப்ளாட் பாயிண்ட்ஸ்

எண்பதுகளின் மதுரையில் சுப்ரமணிபுரம் என்ற பகுதியில் நடப்பதாக சித்தரிக்கப்பட்ட திரைப்படம் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’. அதன் காட்சியாக்கம், கலை இயக்கம், நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக மட்டுமல்ல; திரைக்கதைக்காகவும் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படம் உருவாக்கிய சலனமும் தாக்கமும் தமிழ் சினிமாவைக் கௌரவமாகப் பார்க்க வைத்தது.

பிளாஷ் - பேக்கிலிருந்து விரியும் இந்தப் படத்தின் திரைக்கதை வடிவம் வழியாகப் பயணித்து, அதில் எத்தனை ப்ளாட் பாயிண்டுகளைத் திரைக்கதாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

சமூக அடுக்கில் விளிம்புநிலைக் குடும்பங்களைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களைத் தங்களின் சுயநலத்துக்காக அரசியல் பிழைப்பவர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை ஒரு காதல் மற்றும் நட்புக்குள் களையாகத் துளிர்க்கும் துரோகம் வழியாகக் கூறிச்செல்லும் கதை.

ஆயுள் சிறை முடிந்து வெளியேவரும் காசி (கஞ்சா கறுப்பு), கத்திக் குத்துக்கு உள்ளாகி இறக்கிறான். அதிலிருந்து 'சுப்ரமணியபுர'த்தின் காட்சிகள் பின்னோக்கி விரிகின்றன. எண்பதுகளில் மதுரையில் நடுத்தர வர்க்கமும் விளிம்புநிலை மக்களும் கலவையாக வாழும் சுப்ரமணியபுரம் என்ற பகுதியில் வாழும் அழகர் (ஜெய்), பரமன் (சசிகுமார்), காசி (கஞ்சா கருப்பு), சித்தன், டும்கான் ஆகிய ஐந்து நண்பர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

அவர்களது அன்றாட வாழ்வியல் வழியே அந்தப் பகுதியின் வாழ்விடம் வரைந்து காட்டும் 80-களின் வாழ்க்கைச் சித்திரம், பொருளாதாரச் சூழல், வழிபாடு, அரசியல் ஆகியவற்றுடன் பரமனின் காதலும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இவர்கள் சில்லறைக் குற்றங்களில் ஈடுபட்டு போலீஸிடம் சிக்கும்போது, அந்தப் பகுதியில் கட்சிப் பதவி இல்லாததால் செல்வாக்கு மங்கிய அரசியல்வாதியான சோமுவின் தம்பி கனகு (சமுத்திரக்கனி) ஓடிவந்து உதவுகிறார். உதவிக்குப் பிரதிபலனாக கனகு எதிர்பார்ப்பது ஒரு ரத்தபலி. அதை அவர்களிடம் கனகு எதிர்பார்க்கக் காரணமாக இருப்பது பதவி இல்லாத கணவனை ஏளனமாகப் பேசிவிடும் கனகுவின் அண்ணியுடைய வரட்டு கெளரவம். இந்தச் சம்பவம் திரைக்கதையின் முதல் ப்ளாட் பாயிண்ட் நிகழ முன்னோட்டம் அமைத்துக் கொடுக்கிறது.

அரசியல் பதவி இல்லாவிட்டால் வீட்டில் உள்ள பெண்கள் மதிக்க மாட்டார்கள் என்ற உந்துதலுக்கு ஆளாகும் கனகு கதாபாத்திரம் பரமனையும் அழகரையும் பயன்படுத்திக்கொள்கிறது. கனகுவின் சொற்களை நம்பி, அழகரும் பரமனும் இணைந்து சோமுவின் அரசியல் எதிரியான பழனிச்சாமியைக் கொலைசெய்துவிட்டுச் சிறைக்குச் செல்கிறார்கள். -இதுதான் திரைக்கதையின் முதல் ப்ளாட் பாயிண்ட்.

அந்த அரசியல் கொலைக்குப் பின்னர் கனகு எதிர்பார்த்ததுபோலவே அவருடைய அண்ணனுக்குக் கட்சியில் மாவட்டத் தலைவர் பதவி கிடைக்கிறது. சோமுவின் செல்வாக்கு மீண்டாலும் அவருக்காகச் சிறைக்குச் சென்ற அழகரையும் பரமனையும் வாக்களித்தபடி பிணையில் எடுக்காமல் ஏமாற்றிவிடுகிறான் கனகு.

முதன்மைக் கதாபாத்திரங்களில் இருவரான பரமனும் அழகரும் சிறையிலிருந்து வெளியே வந்து தங்களை ஏமாற்றிய கனகுவைப் பழி தீர்ப்பதும், அழகர் தன் காதலியைச் சேர்வதும் திரைக்கதை நகர்த்த வேண்டிய தீர்வாக இருக்கும் என்றுதான் பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ‘சுப்ரமணியபுரம்’ அதிலிருந்து விலகி ஐந்து ‘நியோ-நாய்ர்’ வகைப் ப்ளாட் பயிண்டுகளைக் கொண்ட துயர மற்றும் துரோக காவியமாக விரிந்தது. மற்ற நான்கு ப்ளாட் பயிண்டுகள் திரைக்கதையில் எந்தெந்த இடம் மற்றும் கால இடைவெளியில் இடம்பெற்றன என்பதையும் ஒரு ‘நியோ நாய்ர் வகை’ உலக சினிமாவுக்கு இணையான உத்திகளை அது எவ்வாறு வெளிப்படுத்தியது என்பதையும் அடுத்த வகுப்பில் காண்போம்.

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

“ஓவியா மாதிரி இப்போ யாருமே இல்ல...” - என்.எஸ்.கே.ரம்யா

“ஓவியா மாதிரி இப்போ யாருமே இல்ல...” - என்.எஸ்.கே.ரம்யா 

SCROLL FOR NEXT