தி
ண்டுக்கல்லில் மளிகைக் கடை நடத்தும் சமையனுக்கு (வசுமித்ரா) ஒரு செல்போன் அழைப்பு வருகிறது. ‘‘ஒரு வாரத்துக்கு அப்புறம் உயிரோட இருக்கமாட்டே’’ என்று மிரட்டுகிறது எதிர்முனை குரல். சமையன் பதற்றமாகிறார். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனான சசிகுமார், அவரைக் கொல்வதற்காக துரத்திக்கொண்டே இருக்கிறார்.
இருவருக்கும் இடையே துரத்தல், மோதல், ஆவேசம், ரவுத்திரம் என கலந்துகட்டி, காட்சிக்கு காட்சி பரபரப்பைக் கூட்டுகிறார்கள். கடைசியில், சசிகுமார் ஏன் சமையனை துரத்துகிறார்? அவரைக் கொன்றாரா? என்பதை வழக்கமான ரத்த வாடையோடு வித்தியாசமாகச் சொல்கிறது அசுரவதம்.
தொடக்கம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை பதற்றமாகவே வைத்திருக்க முயலும் திரில்லர் படங்கள் தமிழில் அரிது. இந்தப் படம் மூலம், அந்த வகையையும் முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் மருதுபாண்டியன்.
பூனையின் கையில் சிக்கிய எலியாக சமையன் சசியிடம் மாட்டுவது, தப்பிப்பது, மீண்டும் சிக்கும்போது சமையனுக்கு மரண பயத்தை உணர்த்திவிட்டு அவனை விட்டுப்பிடிப்பது, பின்னர் சமையனிடம் சசி மாட்டிக்கொள்வது என சங்கிலித் தொடராக நீளும் திரில் விளையாட்டுதான் முக்கால்வாசிப் படம். வில்லனைப் போலவே சசியைப் பார்த்து, ‘‘யார்ரா நீ?’’ என்று நம்மையும் கேட்க வைத்துவிடுகிறார் இயக்குநர்.
கடைசிவரை வில்லனுக்குக் காரணத்தை சொல்லாத சசி, அதற்கான பதிலை தனக்குக்குள்ளேயே நினைத்துப் பார்க்கிறார். இந்த ஆடுபுலி ஆட்டத்தின் துரத்தலில் இருந்த நியாயம், பிளாஷ்பேக் காட்சியில் தெரியவருகிறது.
சசிகுமார் இந்தப் படத்தில் வசனக்கோட்டை கட்டாமல், பார்வை, உடல்மொழியால் பிரமாதப்படுத்துகிறார். கிரைம் திரில்லர் வகை கதைக்கு தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி இருக்கிறார். நடிப்பில் நாயகன் சசிகுமாரை விஞ்சிவிடுகிறார் வசுமித்ரா. மரண பயம் உருவாக்கும் பதற்றத்தை, கண்கள், முகச்சதைகள், உடல்மொழி, ஓட்டம், நடை, உட்காரும் முறை, வசன உச்சரிப்பு என அனைத்து வடிவிலும் திறம்பட வெளிப்படுத்துகிறார். உயிருக்கு பயந்து நடுங்கும் அவரது அச்ச உணர்வு, ஒரு கட்டத்தில் பார்வையாளர்களையும் தொற்றிக்கொள்கிறது.
ஹீரோ, வில்லன் தவிர மற்றவர்களுக்கு அதிக ஸ்கோப் இல்லை என்றாலும், நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். சசிகுமார் மனைவியாக வரும் நந்திதாவுக்கும் அதிகம் வாய்ப்பு இல்லை.
குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு முழுமையான திரில்லர் படத்தை வழங்க முடிந்ததற்கு முக்கிய காரணம் எஸ்.எஸ்.கதிரின் ஒளிப்பதிவு. மலைப்பகுதி, அதையொட்டிய கிராமங்களின் தனிமை, அந்த நிலப்பரப்பில் உறைந்திருக்கும் மர்மம் ஆகியவற்றை ஒளியமைப்பு, கோணங்கள் வழியாக காட்சிப்படுத்திய விதம் அருமை. கோவிந்த் மேனனின் பின்னணி இசையும் சிறப்பு. சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன். குறிப்பாக, லாட்ஜுக்குள் ரவுடிகளுடன் நடக்கும் மோதல் காட்சி அதகளம்.
இடைவேளை வரை பரபரப்பாக நகரும் படம், அதற்குப் பிறகு சற்று தொய்வடைவது போல தோன்றுகிறது.
‘சுப்ரமணியபுரம்’ படத்துக்குப் பிறகு முழுநேர நடிகராகிவிட்ட சசிகுமார், அந்தப் படத்தின் 10-வது ஆண்டு நிறைவில், இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்றிருக்கிறார்.
அவரது படத்துக்கே உரித்தானவன்முறை, இதில் மிதமிஞ்சி இருந்தாலும், திரில்லர் அனுபவத்தை முழுமையாகத் தருகிறது படம்.