இந்து டாக்கீஸ்

நடிகர் ஜெய்யைக் கலாய்த்த யோகிபாபு!

ரசிகா

யுவராஜ் பிலிம்ஸ் பி.யுவராஜ் தயாரிப்பில், பிரதாப் இயக்கத்தில், ஜெய் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேபி & பேபி’. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரக்யா நாயகியாக நடிக்க, இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபுவும் சத்யராஜும் நடித்துள்ளனர். அஜித் - விஜய் ஜோடியாக நடித்த கீர்த்தனா, இதில் சத்யராஜின் மனைவியாக நடித்துள்ளார். கலகலப்பான நகைச்சுவைக் குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்.

படத்தின் இயக்குநர் பிரதாப் பேசும்போது: “ஒரு பெரிய குடும்பத்துக்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப் படம். இந்தக்கதையை எழுதி முடித்தவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போய் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. அவர்தான் இந்தப் படம் அடுத்துக் கட்டத்துக்கு நகரக் காரணம். அடுத்து சத்யராஜ் சாரிடம் சொன்னதும் அவரும் ஒப்புக்கொண்டார்.

நாயகன் ஜெய் அவ்வளவு உழைத்தார். ரம்ஜான் நோம்பின்போது மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார். கீர்த்தனா மேடம் முதலில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார். சத்யராஜ் சார் ஜோடி என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்த குடும்பக் கதைக்கு இமான் சார் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். கதையைக் கேட்டு உடனே ஒப்புக்கொண்டார். அவர் இசையில் எல்லாப் பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் பிடித்த படத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.

இயக்குநரைத் தொடர்ந்து யோகிபாபு பேசும்போது: “ இப்படத்தின் இயக்குநர் பிரதாப் எனக்கு 17 வருட நண்பர். இன்னக்கி அவர் இயக்குநர், நான் காமெடி நடிகன். நாம் உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும். இந்தப்படம் மிக நல்ல அனுபவம். சத்யராஜ் சாருடன் எப்போதும் கவுண்டமணி சார் பற்றி பேசி சிரிப்போம். ஜெய்யிடம் ‘இன்னும் எப்படி இவ்வளவு இளைமையாகவே இருக்கிறீர்கள்?! எனக் கேட்டேன். அவர், ‘சிங்கிளாக இருப்பதால் இளமையாக இருக்கேன்’ என்றார். அங்கிளா ஆகிவிடப்போகிறீர்கள், சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள்” என்று கலாய்த்துத் தள்ளினார்.

நடிகர் சத்யாராஜ் பேசும்போது: “ நானும் ஜெய்யும் இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் இணைந்து நடித்த ‘ராஜா ராணி’ படம் வெளியாகி 13 வருடங்கள் ஓடிவிட்டது. ‘பார்டி’ படம் இன்னும் வரவில்லை,’மதகதராஜா’ போல் அந்தப்படம் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படத்தில் அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்த கீர்த்தனா எனக்கு ஜோடி. நாமளும் இன்னும் இளைஞர் தான். பிரதாப் இத்தனை நடிகர்களை வைத்து, வெகு அழகாக வெகு சீக்கிரமாகத் திட்டமிட்டுப் படத்தை எடுத்துள்ளார் வாழ்த்துக்கள். நானும் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்”

இறுதியாக படத்தின் நாயகன் ஜெய் பேசும்போது: “ இயக்குநர் கதை சொல்ல வந்த போது, சத்யராஜ் சார், யோகிபாபு டார்லிங் எல்லாம் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றவுடனே நானும் ஒகே சொல்லிவிட்டேன். படப்பிடிப்பில் பட்டினியாக நடித்தது கஷ்டமாகத் தெரியவில்லை. படப்பிடிப்பில் சத்யராஜ் சார், யோகிபாபு என எல்லோரும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து விடுவார்கள் அது தான் கஷ்டமாக இருக்கும். ரத்தம், வெட்டுக் குத்து இல்லாமல், மனம் விட்டுச் சிரித்து மகிழும் படமாக இப்படம் இருக்கும். பார்த்து விட்டுச் சொல்லுங்கள்” என்றார்.

SCROLL FOR NEXT