தமிழ் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் ‘சிறுவர் சினிமா’ என்பதே அரிதான நிகழ்வு என்கிற நிலை கடந்த பத்தாண்டுகளில் மாறியிருக்கிறது எனலாம். ஹலிதா ஷமீம், மதுமிதா, மணிகண்டன் தொடங்கி இன்று தரமான சிறுவர் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிறுவர்களை மையமாகக் கொண்ட விளையாட்டுத் திரைப்படங்களும் அவ்வப்போது வரவே செய்கின்றன. இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிர்த்திசையில் சிறார் மற்றும் பதின்ம வயதினரைக் கொண்டு ‘கோலிசோடா’ போன்ற மோசமான படங்களும் வரவே செய்கின்றன. ‘கோலிசோடா’ மாதிரியான படங்களில் சிறார்களும் பதின்ம வயதினரும் வயது கூடிய கதாபாத்திரங்களை வேட்டையாடும், பழிவாங்கும், வன்முறையை கையிலெடுக்கும் சித்தரிப்புகள், வியாபாரம் அன்றி வேறில்லை. இதே வியாபார நோக்கத்தை உள்வாங்கிக் கொண்டாலும் வன்முறை, பழிவாங்கல் என்கிற அணுகுமுறையிலிருந்து விலகி முழுவதும் கட்சி அரசியலில் விருப்பம் கொண்ட சிறார்களின் குறும்பு உலகை, ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் மூலம் கலகலப்பாகக் காட்ட முயன்றுள்ளார் சங்கர் தயாள். இவர், கார்த்தி நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தை இயக்கிவர். தனது இரண்டாவது படம் வெளியாகும் முன்பே சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார். இனி படம் பற்றிய மதிப்பீட்டுக்கு வருவோம்..
ஆதிமூலமும் (யோகிபாபு), சாணக்கியர் (சுப்பு பஞ்சு) ஆகிய இருவரும் ஒரு கட்சியில் சமநிலையிலிருந்து அதிகாரத்துக்காகப் போட்டி போடும் ஊழல் அரசியல்வாதிகள். இவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவரான பக்கிரிசாமி (செந்தில்), இருவருடைய அக்கப்போர்களையும் கண்டுகொள்ளாமல் ’பேலன்ஸ்’ செய்து கட்சியை நடத்துகிறார். ஆதிமூலத்துக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்குப் பிறந்தவன் பல்லவன் (இமயவர்மன்), இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகன் அலெக்சாண்டர் (அத்வைத்). இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். பல்லவன், தாமொரு முழுநேர அரசியல்வாதியின் மகன் என்பதைப் பள்ளியில் தக்கவைத்துக்கொள்வதற்காக, சக மாணவ, மாணவிகளைப் பல வழிகளிலும் தன்பக்கம் குழு சேர்த்துக்கொண்டு, ‘லீடர்’ என அழைக்க வைக்கிறான். அண்ணனின் அரசியல் ஆட்டம் பள்ளியிலேயே தொடங்கிவிட்டதை அறியும் தம்பி அலெக்சாண்டர், அவனது அரசியல் ஆசையை ஆதரிப்பதுபோல், பள்ளிப் பேரவையின் மாணவர் சங்கத் தேர்தலில் தொடங்கி பல்லவனின் திட்டங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகிறான். இந்தச் சிறுவர்களின் அரசியல் ஆட்டம் வளர்ந்து அவர்கள் பெரியவர்கள் ஆனதும் என்ன நிலைகளை அடைகிறார்கள் என்பது கதை.
‘கோலி சோடா’ போல் கொலைவெறி வன்முறை இல்லாததே பெரிய ஆறுதல். ஆனால், கட்சி அரசியலில், தேர்தலில் பிழைத்திருக்கப் பழுத்த அரசியல்வாதிகள் பலர் செய்யும் எல்லாத் தில்லுமுல்லு வேலைகளையும் இருவரும் செய்கிறார்கள். அவை, இன்றைய நடைமுறை அரசியலை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது. அப்படியே சிரிப்பையும் வரவழைக்கிறது. அதேநேரம், உரையாடல்கள் பலவும் ஏற்கெனவே பார்த்த, கேட்ட, பழகியவையாக இருப்பதால் சலிப்பை உருவாக்குகிறது. பல்லவன் மாணவர் தேர்தலில் போட்டியிடாமல் வாபஸ் பெற்றுக்கொண்டு மாணவர் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட ரெங்கநாயகியைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வரும்போது திரையரங்கில் பறக்கும் விசில் சத்தம், இன்றைய வெகுஜன ரசிகர்கள் ‘தந்திரத்தை, காய் நகர்த்தலை’ அரசியலாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
சித்ரா லட்சுமணன் பள்ளி முதல்வராகவும் மயில்சாமி அலுவலக உதவியாளராகவும் செய்யும் அலப்பறைகள் ரசிக்கும்படி இருக்கின்றன. பள்ளிக்கு அட்மிஷன் கேட்டு வரும் வையாபுரி தம்பதியிடம் பள்ளிக் கட்டணங்களுக்கு தனது பள்ளியில் இருக்கும் ’ஸ்கீம்’ பற்றிச் சொல்லும்போது தியேட்டரில் சிரிப்பலை.
தனது கதாபாத்திரம் பெண்களை மலினப்படுத்தும் ஒன்றாக இருப்பது பற்றித் துளி கவலையும் இல்லாமல் நடித்திருக்கிறார் யோகிபாபு. சம்பளம் கொடுத்தால் சாக்கடை நாற்றமடிக்கும் கதாபாத்திரமும் கூட அவருக்குச் சரி என நினைக்கிறார் போலும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருந்தாலும் கொடுத்த கதாபாத்திரத்தை முதிர்ச்சியும் நகைச்சுவையும் வழிந்தோடும்படி நடித்துக்கொடுத்திருக்கிறார் செந்தில். ரெங்கநாயகியாக வரும் பதின்மச் சிறுமியான ஹரிகாவின் நடிப்பும் அவரது இருப்பும் படத்துக்கு சுவாரசியம் கூட்டுகிறது. அவரது பெற்றோராக வரும் கதாபாத்திரங்களின் வழியே சமூகத்தில் ஒரு பகுதி மக்களைக் கிண்டல் செய்திருப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
குழந்தைகளுக்கான அரசியல் என்று இயக்குநர் தவறாகப் புரிந்துகொண்டு, இன்றைய ஊழல் அரசியலைக் குழந்தைத்தனமான நகைச்சுவைத் தோரணங்களால் கோத்துக் கொடுத்திருக்கிறார். யோகிபாபுவின் ஒருசில ஒன்லைனர்கள், பல்லவன் - அலெக்சாண்டர் - ரங்கநாயகி உள்ளிட்ட சிறார் குழாமின் பள்ளி அளப்பறைகள் ஆகியவற்றைப் பொறுமையான மனம் இருந்தால் சிரித்து ரசிக்கலாம்.