இந்து டாக்கீஸ்

“நவீனக் காதலின் ‘யூ டேர்ன்’ வளைவுகள்!” - கிருத்திகா உதயநிதி நேர்காணல்

ஆர்.சி.ஜெயந்தன்

பாடல்களின் எண்ணிக்கை குறைந்து வரும் தமிழ் சினிமாவில் 5 பாடல்களுடன் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தை எழுதி, இயக்கி முடித்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி - நித்யா மேனன் நடித்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்னை இழு இழு இழு இழுக்குதடி’ பாடல் தாறுமாறான ஹிட்! தொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியாகி கலாச்சாரக் காவலர்களைக் கதற வைத்திருக்கிறது. படம் பொங்கல் வெளியீட்டில் இடம்பிடித்திருக்கும் நிலையில் கிருத்திகா உதயநிதியுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

ஏ.ஆர்.ரஹ்மானை எப்படிப் பிடித்தீர்கள்? - ரஹ்மான் சார் இருக்கும் பிஸிக்கு அவரைப் பிடிக்க முடியாதுதான். ஆனால், இந்தக் கதைக்கு அவரது நவீன இசை எவ்வளவு அவசியமானது என்பதையும் கதையோட்டத்தில் பலவிதமான ‘வெரைட்டி’ யில் பாடல்களுக்கான சூழ்நிலைகள் அமைந்து விட்டதையும் அவரிடம் கூற விரும்பினேன். அதிர்ஷ்டவசமாக அவரைச் சந்தித்துக் கதையைச் சொன்னதும் அவருக்குப் பிடித்துவிட்டது.

ஒரு ‘ட்ராவல்’ பாடல், ஒரு ‘பிரேக் அப்’ பாடல், ஒரு ‘பப்’ பாடல், ஒரு கிராமியப் பாடல் உள்பட 5 முக்கியமான பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. எல்லாமே கதையை நகர்த்தும் பாடல்கள். அத்தனையிலும் ரஹ்மான் சாரின் நவீனம் ஆர்ப்பரிக்கும். ஒரு பாடலில் ரஹ்மான் சார் தோன்றி நடனமாட வேண்டும் என்கிற கோரிக்கையைச் சற்று தயக்கத்தோடு அவரிடம் வைத்தேன். அவரும் கூலாக ஏற்றுக்கொண்டார். படப்பிடிப்பில் அவர் காட்டிய உற்சாகத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் டான்ஸ் ஆடத் தொடங்கிவிட்டோம்.

ஸ்ரீதர் இயக்கி, வெள்ளிவிழா கொண்டாடிய ஒரு படத்தின் தலைப்பைப் பயன்படுத்தக் காரணம் என்ன? - கதைதான் காரணம். இன்றைய தலைமுறை காதலை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் கதை. குறிப்பாக இன்றைய காதலில் சகிப்புத்தன்மை என்பது மருந்துக்கும் கிடையாது.

இன்றைய தலைமுறைக்குக் காதலிக்க நேரமில்லாவிட்டாலும் எல்லாருக்குள்ளும் காதல் இருப்பதை மூன்று முதன்மைக் கதாபாத்திரங்கள் வழியாக விவரிக்கும் திரைக்கதை. காதல் போராட்டமாக இருக்கும் அதே நேரம் அது மகிழ்ச்சியையும் அள்ளி வழங்குகிறது என்பதுதான் கதையின் அடிப்படை. இதில் காதலின் எல்லாக் கட்டங்களும் உண்டு.

காதலின் எதிர்பாராமைகளும் உண்டு. காலத்துக்கேற்பக் காதலில் எதிர்பார்ப்புகள் மாறிக்கொண்டு வருவதைப் படம் பேசும். அதேநேரம், காதல் தோன்றும்போது அது தரும் மகிழ்ச்சி, அது உடையும்போது ஏற்படும் வலி என உணர்வுகள் எக்காலத்துக்கும் மாறாது இல்லையா? உலகம் முழுமைக்கும் பொதுவாக இருக்கும் அந்த அடிப்படையான உணர்வுகள் ஆடியன்ஸ் அனைவரையும் படத்துடன் பக்காவாக கனெக்ட் செய்யும். இதில் பிரச்சினைக்கான எந்தத் தீர்வையும் நான் சொல்லவில்லை. அது இந்தக் கதைக்கு அவசியமற்றது.

ஜெயம் ரவி-நித்யா மேனன் என்கிற இந்த ஜோடி! - இந்தப் புதுமையான ஜோடி உருவாகக் காரணமே நித்யா மேனன்தான்! முதலில் நித்யா மேனனிடம்தான் கதை சொல்லி ஓகே செய்தேன். அவர் ‘ஹீரோ யார்?’ என்றார். நான் ‘சில ஹீரோக்களிடம் கதை சொல்லியிருக்கிறேன்’ என்றேன். அப்போது அவர்தான் ‘ஏன் நாம் ஜெயம் ரவியிடம் கேட்கக் கூடாது?’ என்றார். எனக்கோ ஜெயம் ரவி ஓகே சொல்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. அவர், காதல் நாயகன்தான் என்றாலும்.

இதில் அவர் ஒரு ‘பட்டர் நைஃப்’ கூட தூக்க முடியாதே என்ன சொல்வாரோ, முழு நீளக் காதல் கதையில் இப்போது அவருக்கு நாட்டம் இருக்குமா என்கிற தயக்கத்துடன்தான் அவரிடம் திரைக்கதைப் புத்தகத்தைக் கொடுத்தேன். அவர் படித்துவிட்டு அதே காதல் நாயகனாக முகம் முழுவதும் மகிழ்ச்சி பரவ ஓகே சொன்னார். அது மட்டுமல்ல; ‘நித்யாவுடன் இந்தக் கதையில் நடிப்பதில் எனக்கு டபுள் ஓகே’ என்றார்.

தற்போது ‘உமன் சென்ட்ரிக்’ கதைகள் தமிழ் சினிமாவில் குறைந்துவிட்டதைக் கவனித்தீர்களா? - உண்மைதான்! ஆனால், அதைவிட அற்புதமான விஷயம் தற்போது தமிழ் சினிமாவில் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கதையில் 3 பெண் கதாபாத்திரங்கள் இருந்தால் மூன்றையுமே வலிமையாக எழுதுவதும் சித்தரிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் பெண் கதாபாத்திரங்களும் அப்படித்தான்.

- jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT