இந்து டாக்கீஸ்

வலியின் மொழி சிரிப்பு!

ரசிகா

‘பாகுபலி’ போன்று உலகையே தனது சந்தையாக்கிக் கொண்ட படங்கள் தெலுங்கு மெயின் ஸ்ட்ரீம் சினிமாவின் தற்போதைய முதன்மை அடையாளம். இன்னொரு பக்கம் ரயிலையே தன் புஜ பலத்தால் நிறுத்தும் கோமாளி மாஸ் ஹீரோ படங்களையும் அங்கே ஓட வைப்பார்கள். அதே தெலுங்கு மொழியில் உருவான ‘சினிமா பண்டி’ (2021) போன்ற சுயாதீன சினிமாக்கள் திரையரங்கில் ஆதரிக்கப்படாமல் ஓடிடியில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கிராமிய ஆந்திராவில் வீரபாபு ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவர் தற்செயலாக ஒரு விலையுயர்ந்த டிஜிட்டல் கேமராவைக் கண்டெடுக்கிறார். முதலில் அதை விற்றுவிடத் தீர்மானித்தவர், பிறகு அந்தக் கேமராவை வைத்துத் திரைப்படம் எடுக்க முடிவு செய்கிறார். உள்ளூர் திருமண ஒளிப்படக்காரரான கணபதியை கேமராமேன் ஆக்குகிறார்.

சலூன் கடை நடத்தும் இளைஞரான மரிடேஷ் பாபுவை கதாநாயகனாகவும் காய்கறி வியாபாரம் செய்யும் மங்காவை கதாநாயகியாகவும் நடிக்க வைக்கிறார். ஷாட் வித்தியாசம்கூடத் தெரியாத வீரபாபு தான் விரும்பிய படத்தை எடுத்தாரா? சக கிராமவாசிகள் அவருக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என எளியவர்கள் சினிமா எடுக்கும் கதையைக் கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான நகைச்சுவையுடன் சித்தரித்தது. விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் 15 லட்சம் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது.

’சினிமா பண்டி’ முற்றிலும் ஒரு கற்பனையான கதைக் களம். ஆனால், சங்ககிரி ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘பயாஸ்கோப்’ ரத்தமும் சதையுமான கிராமத்து மனிதர்களின் பங்கேற்புடன் உருவாகியிருக்கும் மிக அரிதான அசல் முயற்சி. தமிழ் சினிமா பேசத் தயங்கும் பொருளை, சமரசமில்லாமலும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் விமர்சனம் செய்திருப்பதில் காத்திரமான படைப்பு. சினிமாவைப் பற்றி வெளிவந்த சினிமாக்களுக்கெல்லாம் கிரீடம் இப்படம்.

சோதிடத்தால் விளைந்த தனது சொந்த இழப்பை உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்கிற தவிப்புடன், அதையே கதையின் உள்ளடக்கமாகக் கொண்டு சுயாதீனப் படமெடுக்கக் கிளம்புகிறார் ஒரு கிராமத்துப் பட்டதாரி இளைஞர். உள்ளூர் சோதிடரின் பொல்லாப்புடன் ‘வெங்காயம்’ என்கிற அந்தப் படத்தை எடுக்கும் செயல்முறையில், படக் கருவிகள் தயாரிப்பு, அவற்றை இயக்கவும் பயன்படுத்தவுமான தொழில்நுட்பக் கலைஞர்களாக, தன்னுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பயிற்சியளித்து பயன் படுத்துவது, கிராமத்து மக்களையே நடிக்க வைப்பது, படத்தை முடிக்க முடியாமல் பணத்துக்கு அல்லாடுவது, அதன்பிறகு சென்னைக்கு வந்து அதைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான சந்தைப் படுத்துதலில் எதிர்கொள்ளும் பாடுகள், இறுதியாக அந்தப் படைப்பை உருவாக்கியவருக்கு வந்துசேரும் உண்மையான ‘லாபம்’ என்பதுவரை ஒரு ‘முறைசாரா’ திரைப்படம் உருவாகும் பின்னணியில் இருக்கும் போராட்டத் தையும் வலிகளையும் சூழ்நிலை உருவாக்கும் தூய நகைச்சுவையில் நனைத்துக் கொடுத்திருக்கும் படம்.

சுயாதீனப் பட முயற்சியின் பாதையில் நிறைந்திருக்கும் வலி என்கிற உணர்வை, நகைச்சுவையைக் கடந்து பார்வையாளர்களை உணர வைப்பதில் இயக்குநர் சங்கரி ராஜ்குமாரின் ஆளுமை படம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அதேபோல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சின்ன கதாபாத்திரம் நமக்குக் கடத்தும் உணர்வுகளில்கூட போலியோ, பொய்மையோ இல்லாதது திரை அனுபவத்தை முழுமையாக வழங்கும் ஊக்கியாக மாறிவிடுகிறது. 2025இன் சிறந்த படமாக வெளிவந்திருக்கும் ‘பயாஸ்கோப்’பைத் திரையரங்கில் காணத் தவறியிருந்தால், ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வெகு விரைவில் கண்டுகளியுங்கள்.

SCROLL FOR NEXT