இந்து டாக்கீஸ்

காதல் சடுகுடு | சினிப்பேச்சு

செய்திப்பிரிவு

மலையாள நடிகராக இருந்தாலும் ‘கும்பளாங்கி நைட்ஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானவர் ஷேன் நிகம். அவர், கதாநாயகனாக நடித்துள்ள நேரடித் தமிழ்ப் படம் ‘மெட்ராஸ்காரன்’. “ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சினையாக மாறி இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதுதான் திரைக்கதை.

இதுவொரு குடும்ப, காதல், ஆக்‌ஷன், த்ரில்லர் படம்” என்கிறார் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் வாலி மோகன் தாஸ். இவர் ‘ரங்கோலி படத்தின் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்க்கையை வண்ணமயமாகத் தீட்டிக் காட்டியவர்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.ஆர். புரொடெக்‌ஷன் சார்பில் பி. ஜகதீஸ் தயாரித்துள்ளார்.ஷேன் நிகமுக்குச் சவாலாக அமையும் எதிர் நாயகன் கதாபாத்திரத்தில் கலையரசனும் நாயகியாக நிஹாரிகாவும் நடித்துள்ளனர். நிஹாரிகா ஆந்திர சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காதல் சடுகுடு’ என்கிற பாடலை இரண்டாவது சிங்கிளாக சென்னையில் வெளியிட்டனர். அந்த விழாவில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT