சதிக்கோட்பாட்டாளர்களையும் மாயன் நாள்காட்டியையும் பிரிக்கவே முடியாது. மாயன் நாள்காட்டியின்படி உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது கிலி கிளப்பி, உலக அளவில் ஊடகங்களுக்குத் தீனி போட்டு வருகின்றனர். ஹாலிவுட்டில் பல பெரிய முதலீட்டுப் படங்கள் இதை அடிப்படையாகக் கொண்டு வெளியாகின.
அவற்றில் கடந்த 2009இல் 200 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகி, 800 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தது ‘2012’ என்கிற படம். தற்போது இதே மாயன் நாள்காட்டியின் உலக அழிவு கருது கோளை மையமாகக் கொண்டு வெளி வந்திருக்கும் தமிழ்ப் படம் ‘மாயன்’.
சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ‘டீம் லீட’ராகப் பணிபுரியும் ஆதிக்கு (வினோத் மோகன்) ‘இன்னும் 13 நாள்களில் உலகம் அழியப் போகிறது, நீ வாழ நினைத்த தருணங்களை வாழ்ந்துகொள்’ என்று ஒரு மின்னஞ்சல் வருகிறது. அதை முதலில் நம்பாத ஆதி, தன்னைச் சுற்றி நடக்கும் சில நிகழ்வுகளால் அதை நம்புகிறான். அதன் விளைவாக, தனது காதல், திருமணம், சொந்த வீடு ஆகிய கனவு களை அதிரடியாக நிறைவேற்றுகிறான்.
ஆனால், அத்துடன் அவனது வேட்கை முடிந்ததா என்றால் இல்லை. யுகம் யுகமாக நன்மைக்கும் தீமைக்குமாக நடக்கும் போரில் விதி அவனை ஆதிசக்தியாக முன்னிறுத்துகிறது. அதனால், தனது கட்டுப்பாட்டை இழந்து அவன் செய்த செயல்கள் என்ன? உலகின் கடைசி நாளுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் அவன் இருந்தானா? ஒவ்வொரு அழிவுக்குப் பின்னரும் உலகின் சுழற்றி என்னவாக இருக்கக்கூடும் எனக் கதை செல்கிறது.
புராணம், மாயன் நாள்காட்டி, தற்காலம் மூன்றையும் இணைத்துப் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஜெ.ராஜேஷ் கண்ணா, கதாபாத்திரங்களை முழுமையுடன் எழுதுவதில் கோட்டை விட்டிருக்கிறார். ஆதியின் கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகளும் சக்கரவர்த்தி கதாபாத்தி ரத்தின் நகர்வுகளும் தர்க்கத்துடன் பொருந்திப் போகிற அளவுக்குக் கோப்பெருந்தேவியாக வரும் பிந்து மாதவி, வீரசூரனாக வரும் சாய் தீனா உள்ளிட்ட கதாபாத்திரங்களின் நகர்வுகளும் அவற்றின் பின்னணியும் சொல்லப்படவில்லை.
கலிகாலம் முற்றிவிட்டது, உலகம் அழியப் போகிறது என்கிற நம்பிக்கையை கிராஃபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் வழியாகச் சொல்ல நினைத்தது தவறில்லை. ஆனால், அவற்றில் பெரும்பாலான காட்சிகள் வீடியோ கேம் தன்மையுடன் இருப்பது பின்னடைவு. ஆதியாக வரும் வினோத் மோகன், சக்ரவர்த்தியாக வரும் ஜான் விஜய், தேவியாக வரும் பிந்து மாதவி ஆகியோரின் நடிப்பு சிறப்பு. ஒரு பாடல், ஹாலிவுட் படங்களுக்கு இணையான பின்னணி இசை ஆகியவற்றால் மிரட்டியிருக்கிறார் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்.
அருண் பிரசாந்த்தின் ஒளிப்பதிவில் பெரும் பாலான காட்சிகளில் கேமரா கோணங்கள் பொருத்தமற்று இருக்கின்றன.
தமிழில் எடுத்தாளப்படாத ஒரு நல்ல கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த இயக்குநர், அதில் அறிவியல் புனைவைக் கலக்காமல் ஆன்மிகம் கலந்த கேங்ஸ்டர் மிஸ்டரியாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்.