இந்து டாக்கீஸ்

மாற்றுக் களம்: பிராய்லர் கோழியா பெண்? - அமோலி (ஆவணப்படம்)

இந்திரா செளந்தர்ராஜன்

‘இ

ந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்துக்கும் ஒரு பெண் குழந்தை காணாமல் போகிறது!’ - இது தலைப்புச் செய்தி அல்ல. புள்ளிவிவரமும் அல்ல. நம் நாட்டில் உள்ள வக்கிரத்தின் அடர்த்தி! உலக அளவில் ஆயுதக் கடத்தல், போதை மருந்துக் கடத்தல், காட்டுயிர்கள் கடத்தல் ஆகியவற்றுக்குப் பிறகு, ‘ஹியூமன் ட்ராஃபிக்கிங்’ எனப்படும் மனிதக் கடத்தல்தான் அதிகமாக நடைபெறுகிறது.

அதிலும், பெண்கள், குறிப்பாகப் பெண் குழந்தைகள்தான், சதைச் சந்தையில் அதிகம் விற்பனையாகும் பொருளாக இருக்கிறார்கள். பிஹார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முறையற்ற காமத்தைக் காசாக்கும் இந்த வணிகத்துக்குப் பின்னுள்ள உண்மைகளை, முகத்தில் அறைவது போலக் காட்டுகிறது ‘அமோலி’ எனும் ஆவணப்படம். தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநர்கள் ஜாஸ்மின் கவுர் ராய், அவினாஷ் ராய் ஆகியோரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தப் படம், ‘யூடியூப்பில்’ காணக் கிடைக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்கத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கிடையே அமைந்திருக்கும் கிராமம் ஒன்றிலிருந்து, ‘அமோலி’ என்கிற 5 வயது சிறுமி காணாமல் போகிறாள். தந்தையை இழந்த அவள் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவள்.

மிகவும் வறுமையான குடும்பம். அம்மா, வேலைக்குப் போயிருந்தபோது, அந்தச் சிறுமி கடத்தப்பட்டிருக்கிறாள். அடுத்தடுத்த சில நாட்களில், அவள் வேறு மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ கூட சில ஆயிரங்களுக்கு விற்கப்பட்டிருக்கலாம். அதற்குப் பிறகு, அவளின் உடல் சிதைக்கப்பட்டு, பால்யம் தொலைக்கப்பட்டு, விடியலே இல்லாத இருளின் கையில் அகப்பட்டிருப்பாள்.

படத்தில், மனிதக் கடத்தலுக்கு எதிரான செயற்பாட்டாளர் ஒருவர் சொல்லும் செய்தி நம்மைத் திடுக்கிட வைக்கிறது. “இங்கே கடத்தல்காரர்கள் என்பவர்கள், வேறு எங்கோ இருந்து வருவதில்லை. நண்பர்கள், உறவினர்கள்… ஏன், பெற்றோர்களாகக்கூட இருக்கலாம். இவர்களை ‘ஸ்லீப்பர் ஏஜெண்ட்ஸ்’ என்று அழைக்கிறோம்” என்கிறார்.

விலை, மாயை, பரம்பரை வழக்கம், விடுதலை என்ற நான்கு அத்தியாயங்களாகப் படம் விரிகிறது. முதல் அத்தியாயத்தில், பெண் குழந்தைகளை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்ற தகவல்கள் சொல்லப்படுகின்றன.

“12 முதல் 13 வயது குழந்தைகளுக்குத்தான் டிமாண்ட். ஒரு குழந்தைக்கு 1 அல்லது 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்” என்று சொல்கிறார் ஒரு ஏஜெண்ட். இதில் என்ன கொடுமை என்றால், அந்த ஏஜெண்ட்டே, ஒரு காலத்தில் தன் உறவினர்களால் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட பெண்தான்! பிராய்லர் கோழிகளை ஊசி போட்டு வளர்ப்பது போல, 14 வயதில் 27, 28 பெண் போலத் தெரிவதற்காக, சிறுமியின் உறவினர்களே அவளுக்கு ஹார்மோன் ஊசிகளைச் செலுத்திய கொடுமை ஒன்றைச் சொல்கிறது இரண்டாவது அத்தியாயம்.

“முதியவர்கள் குழந்தைகளுடன் பாலுறவு கொண்டால் இளமை திரும்பும் எனும் மூட நம்பிக்கைதான், இவ்வாறு சிறுமிகள் சிதைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம்” என்கிறார் ஒரு செயற்பாட்டாளர்.

சிறுமிகள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுவதைப் பற்றி தமிழ்த் திரையுலகில் கமல்ஹாசன் நடித்த ‘மகாநதி’தான் முதலில் சொன்னது. அதனால், இந்த ஆவணப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு கமல்ஹாசனே ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்திருப்பது, மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

பிஞ்சுகளை நுகரும் வக்கிர வாடிக்கையாளர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படாத வரை, இந்த வியாபாரத்தைத் தடுக்க முடியாது என்பதே நிதர்சனம். கடைசி ஒரு வாடிக்கையாளர் இருக்கும் வரையிலும், அமோலி இருந்துகொண்டேதான் இருப்பாள்.

SCROLL FOR NEXT