உருப்படியான திரை அனுபவத்தைத் தரும் விறுவிறுப்பான படங்களைக்கூட தவறவிடுவது சகஜமாகிவிட்டது. பவன் ராஜகோபாலன் எழுத்து, இயக்கத்தில் வெளியான ‘விவேசினி’யைத் திரையரங்குகளில் தவறவிட்டிருந்தால் இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் அதைக் காணலாம்.
நறவங்காந்தம் என்கிற வனப்பகுதிக்குப் பெண்கள் செல்லத் தடை இருக்கிறது. காரணம், அங்கே பேய் நடமாட்டம் இருப்பதாகக் கூறி, அப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களை அச்சமுடன் வாழப் பழக்கியிருக்கிறார்கள். பகுத்தறிவுப் பிரச்சாரகரான ஜெயராமன் (நாசர்) தடை செய்யப்பட்ட பகுதியில் பேய் என்று ஒன்று இல்லை, அது கட்டுக்கதை என நிரூபிக்க அங்கே செல்ல முயல்கிறார்.
ஆனால், எதிர்பாராத விதமாக அவரால் செல்ல முடியவில்லை. என்றாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்று தன்னுடைய மகள் சக்தியையும் (காவ்யா) அவளுடைய நான்கு நண்பர்களையும் வனநடையாக அந்த வனப்பகுதிக்குள் அனுப்புகிறார். குழுவாகச் சென்றவர்கள் கண்ட காட்சிகளும் பெற்ற அனுபவங்களும் என்ன? ஜெயராமனின் முயற்சிக்கும் சக்தியின் தேடலுக்கும் வெற்றி கிடைத்ததா, இல்லையா என்று கதை செல்கிறது.
படத்தில் காட்டின் அனுபவங்கள் ஒரு பக்கம் உறைய வைத்தாலும் ஜெயராமனுக்கும் அவரது மகளுக்குமான முரண்களும் திரைக்கதையின் அழுத்தத்தைக் கூட்டுகின்றன. பிரச்சாரமாக எதையும் திணிக்காமல், திரை அனுபவத்துக்கு முக்கியத்துவம் தரும் விதமாகக் காட்சிகள், ஒளிப்பதிவு, இசை ஆகியவற்றைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்திலும் இது புதிய தலைமுறை மிஸ்ட்ரி த்ரில்லர் படமாகப் பார்வையாளரின் தரமான ரசனைக்குத் தீனி போடுகிறது. எதையும் ஆராய்ந்து பொருள் தேட விரும்பும் பெண்ணை ‘விவேசினி’யாக முன்னிறுத்தும் படத்தில் பார்வையாளர்களுக்குக் காத்திருக்கும் எதிர்பாராத ஆச்சரியங்களே இதைப் பார்க்கவும் பாராட்டவும் தகுதியான ஒன்றாக மாற்றிவிடுகின்றன.