எ
ந்தவொரு விளையாட்டும் அதன் காலப் பயணத்தில் பல மாறுதல்களைச் சந்திப்பது இயல்பு. ஐந்து நாட்கள் ஆடப்பட்ட கிரிக்கட் விளையாட்டு, ஒரு நாள் ஆட்டம், 20 ஓவர் என்ற இடத்துக்கு வந்து நிற்கிறது. அதேபோல 11 பேர் கொண்ட குழுவாக ஆடும் கால்பந்து, கொல்கத்தாவின் குறுகிய வீதிகளில் ஆடுவதற்காக அணிக்கு 5 முதல் 7 பேர் கொண்ட குழுவாக மாறியது. கால்பந்தை நேசிக்கும் மற்றொரு மாநிலமான கேரளத்தின் மலப்புரத்தில் அணிக்கு 7 பேர் கொண்ட விளையாட்டு பிரபலமாகிவிட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
கொல்கத்தாவில் ஆண்டுதோறும் சுமார் 500 வீதிக் கால்பந்துப் போட்டிகள் நடக்கின்றன. ரூ.25,000 பரிசுத்தொகை, கலர் டிவி, பிரிட்ஜ் போன்ற பரிசுகளும் உண்டு. மினி கால்பந்து என்றும் அழைக்கப்படும் வீதிக் கால்பந்து போட்டிகளைப் பின்னணியாகக் கொண்டு கடந்த ஆண்டு வெளியாகி கவனமும் வெற்றியும் பெற்ற வங்காளப் படம் ‘மெஸ்ஸி’.
கொல்கத்தாவில் ஒரு சிறிய மத்தியதர வர்க்க குடும்பத்தில் கால்பந்துப் பயிற்சி தரும் தந்தை, அவரின் இரு மகன்களைச் சுற்றிக் கதை சுழல்கிறது. மூத்த மகன் ப்ரோசுன் வேலை இல்லாத இளைஞன். தம்பி சோட்டுவோ வீதி கால்பந்தில் மெஸ்ஸி என்ற பெயரில் ஆடும் சாம்பியன். ஒரு எதிர்பாராத சம்பவம் அந்தக் குடும்பத்தின் கனவை எப்படிக் கலைத்துவிடுகிறது. அதிலிருந்து அந்தச் சிறு குடும்பம் எப்படி மீள்கிறது என்பதே மீதிக் கதை. ரிங்கோ பானர்ஜி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், ஆரான், ரொனோதீப், ரானா மித்ரா, சைத்தி கோஷல் நடித்திருக்கிறார்கள்.
டெண்டுல்கர், பீலே, மெஸ்ஸி என்பவை வெறும் பெயர்கள் அல்ல. அது விளையாடும் ஒவ்வொருவரின் நம்பிக்கை, லட்சியம், கனவு. இந்த உணர்வுகளை, பிரபலமான பெரிய நட்சத்திரங்கள், கனவுப் பாடல்கள், நீண்ட வசனங்கள் இல்லாமல் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறது இந்தத் திரைப்படம். உண்மையில் பயிற்சி எடுத்து விளையாடும் மகன்களைக் காட்டிலும் அவர்களுடைய தந்தையின் துடிப்பு உணர்வுபூர்வமாகப் பதிவாகியிருக்கிறது.
தந்தையாக நடித்திருக்கும் ரானா மித்ரா கதாபாத்திரமாக பதிந்து விடுகிறார். மூத்த மகன் ப்ரோசுநின், பக்கத்துக்கு வீட்டுப் பெண் கவிதாவுடனான மென் காதல் கதையில் ஒட்டவைத்ததுபோல் இல்லாமல் மைய இழையுடன் இயைந்து செல்கிறது. ஒரு சிறிய இடத்தில் ஆடப்படும் இந்தக் கால்பந்து விளையாட்டின் பின்னணி முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
வட கேரளத்தின் நகரங்களான மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளில் மிகப் பிரபலமானது ‘செவன்ஸ்’ எனப்படும் ஏழு பேர் கொண்ட அணிகள் ஆடும் கால்பந்தாட்டம். பொதுவாகவே மிகப் பெரிய மைதானங்கள் இங்கு இல்லாத காரணத்தால் செவன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறுகிறார்கள். கொல்கத்தாவைப் போலவே, உணவு, இசை, கால்பந்து எனக் கொண்டாட்ட மனநிலை கொண்ட மலபார் பகுதியில், ஆங்கிலேயர் காலத்திலிருந்து கால்பந்து பிரபல விளையாட்டு.
மழைக்காலத்துக்குப் பின் நவம்பர் முதல் மே மாதம்வரை இங்கே செவன்ஸ் பருவம். இதன் விசேஷம் நைஜீரியா, காமரூன், கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து விளையாடி பணம் சம்பாதித்துச் செல்கின்றனர். இதன் பின்னணியில் வெளியான மலையாளப் படம் ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’.
மலப்புரத்தில் இஸ்லாமியர் வாழும் பகுதியில் மஜீத் என்னும் முதிர் இளைஞர் கால்பந்தாட்டக் குழு ஒன்றை நடத்துகிறார். தனிப்பட்ட வாழ்வில் சில குறைகளைக் கொண்ட அவர், தொடர் தோல்விகள், பண நெருக்கடிகளைச் சந்திப்பது வாடிக்கை. அவரது அணியில் விளையாட மூன்று நைஜீரியர்களையும் வைத்திருக்கிறார். அதில் ஸ்டார் வீரராக ஆடிவரும் நைஜீரியருக்கு விபத்தில் கால் அடிபட்டு விடுகிறது. அதைத் தொடர்ந்து தன் வீட்டில் அவரைத் தங்கவைக்கிறார் மஜீத். நைஜீரிய வீரரை மஜீத்தின் குடும்பம் எதிர்கொள்ளும் விதம், அவர் இல்லாததால் மஜீத் அணியின் நிலைமை, தள்ளிப் போகும் மஜீத்தின் திருமணம், அதனால் பெற்றோருடனான உறவில் விரிசல் போன்றவற்றை அன்பும் கலகலப்பும் கலந்த யதார்த்தத்துடன் பதிவுசெய்திருக்கிறது படம்.
ஒரு கால்பந்தாட்டக் குழு, அதன் நிர்வாக சிக்கல்கள், மஜீத்தின் குடும்பம் என அவரது வாழ்வு வெகு இயல்பாக நமக்குப் புலனாகிறது. தோல்விகள், இயலாமை, அம்மாவின் கணவன் மேல் (அப்பா அல்ல) வெறுப்பு, கால்பந்தாட்டத்தின் மேல் காதல், அரைகுறை ஆங்கிலம் என நிறைவான குணச்சித்திரத்தைத் தனது இயல்பான நடிப்பால் உருவாக்கியிருக்கிறார் மஜீத்தாக வேடமேற்றிருக்கும் சௌபீன் ஷாகீர். நைஜீரிய வீரராக வரும் சாமுவேல், அம்மாவாக சாவித்திரி ஸ்ரீதரன், பக்கத்து வீட்டுப் பாட்டியாக சரசா பாலுசேரி, வளர்ப்புத் தந்தையாக வரும் கேடிசி அப்துல்லா என அனைவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இனிமையான இசையும் உறுத்தாத ஒளிப்பதிவும், எளிமையான படத்தொகுப்பும் படத்தின் பலம். திரைக்கதையில், வசனங்களில் வெகு இயல்பாக நகைச்சுவையை இழையவிட்டிருப்பது அழகு. இயல்பின் அருகில் வரும் ஒரு மென்சோகப் படம் பார்வையாளனை நிச்சயம் கலங்கவைக்கும். குறிப்பாக முடிவுக் காட்சிகளில் இந்தப் படம் அதை நேர்த்தியாகச் செய்கிறது.
தொடர்புக்கு: tottokv@gmail.com