இசையும் காதலும் நகைச்சுவையுமாகப் பத்தாண்டுகளுக்கு முன்னர் சகல வயதினரையும் ரசிக்கவைத்த திரைப்படம் ‘மம்மா மியா!’. இதன் அடுத்த பாகமாக, ‘மம்மா மியா! - ஹியர் வி கோ அகெய்ன்’ திரைப்படம் ஜூலை 20 அன்று வெளியாக உள்ளது.
எழில் கொஞ்சும் கிரேக்கத் தீவு ஒன்றில் விடுதிகளின் முதலாளியாக வளையவருகிறார் ஒரு சீமாட்டி. அவர் தன் மகளுக்கான திருமண ஏற்பாடுகளை விமரிசையாகத் திட்டமிடுகிறார். அவருடைய நீண்டகாலத் தோழிகளும் நட்புகளும் ஒன்றுசேர, நாளொரு கொண்டாட்டமாகத் திருமண நாள் நெருங்குகிறது. அம்மாவை நெகிழ்ச்சியூட்ட மகள் ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொள்கிறாள். அம்மாவின் டைரி வாயிலாகத் தன் தந்தை என்று ஊகிக்க முடிந்த மூவரை திருமணத்துக்குச் சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்கிறாள். ஒரு காலத்தில் பிரபல பாப் பாடகியாக இருந்த சீமாட்டி தன் முன்னாள் தோழர்களை எதிர்பாராது சந்திப்பதும், அவர்களுக்கு மத்தியிலான நகைச்சுவைக் களேபரமுமே திரைப்படம்.
‘மம்மா மியா!’ என்ற இத்தாலி பதத்துக்குத் தமிழில் ‘அம்மாடி!’ எனப் பொருள் கொள்ளலாம். 1999-ல் இதே தலைப்பில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டு பிரபலமான இசை, நாடகக் காட்சிகள் இன்றுவரை தொடர்கின்றன. இவை நட்புக்கும் காதலுக்கும் இடையே ஊடாடும் உணர்வுகளைப் பெண்ணின் பார்வையில் சிலாகித்த பாடல், நடன வகையில் அடங்குபவை. இதைத் தழுவியே ‘மம்மா மியா!’ முதல் பாகம் உருவானது. எழுபதுகளில் பிரபலமாக இருந்த ‘ABBA’ பாப் இசைக் குழுவினரின் ஹிட் பாடல்கள் பலவற்றைப் படத்தில் ரசிக்கும்படி கோத்திருப்பார்கள்.
தற்போது பத்தாண்டுகள் கழித்து வெளியாகும் ‘மம்மா மியா! - ஹியர் வி கோ அகெய்ன்’ திரைப்படம், இசைப் பாடகியின் இளம் வயது கொண்டாட்டங்களில் சென்று மீள்வதால் இதிலும் இசை ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது. முதல் பாகத்தின் அம்மா–மகள் ஜோடியான மெரில் ஸ்ட்ரீப் – அமண்டா மற்றும் அமண்டாவின் உத்தேச அப்பாக்களான பியர்ஸ் பிரஸ்னன் உள்ளிட்ட மூவர் என முதன்மைக் கதாபாத்திரங்கள் அப்படியே இரண்டாம் பாகத்திலும் உண்டு. கதை, திரைக்கதை பங்கேற்புடன் படத்தை ஆலிவர் பார்க்கர் இயக்கி உள்ளார்.