இயற்பியல் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் உயர் கல்வி பெற முடியாத ஏழ்மையான சூழலில், பிரபாவின் விண்வெளி அறிவியல் அறிஞர் ஆகும் கனவு தகர்ந்து விடுகிறது. இதனால் அன்றாடம் ஆதங்கத்திலேயே கழியும் மனநிலை யுடன் சென்னையில் ஆட்டோ ஓட்டிப் பிழைக்கிறான் பிரபா. அவனுடைய ரோல் மாடல் அப்துல் கலாம்.
“இந்த உலகத்தில் உன்னோட கனவு, என்னோட கனவை விடப் பெரிய விஷயங்கள் நிறைய இருக்கு பிரபா. என்னைக்காவது ஒருநாள் அது உனக்குப் புரியும்” என்று அறிவுரை வழங்கும் வுமன் டிராபிக் கான்ஸ்டபில் கமலா, அவனைத் தன்னுடைய சொந்தத் தம்பியைப் போல் அரவணைக்கிறார். இப்படிப் போகும் பிரபாபின் நாட்களில் குறுக்கே வருகிறார் 16 வயது ஏ.பி.ஜே.அப்துல் கலாம். ஆமாம்! நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், இளையோர் உலகின் வழிகாட்டியாக விளங்கிய அதே கலாம் தான்.
1948இல் இருந்து நிகழ்காலத்துக்கு வந்துவிடும் அவரை, அடையாளம் கண்டு கொள்கிறான் பிரபா. 2023ஆம் ஆண்டிலிருந்து 1948 ஆம் ஆண்டுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறான். 16 வயது கலாம் எதற்காக இப்போது வரவேண்டும், தாம் காலப் பயணம் செய்து வந்த நோக்கத்தை அவரும் பிரபாவும் கண்டு பிடித்தார்களா? கலாம் திரும்பவும் கடந்த காலத்துக்குச் சென்றடைந்தாரா என்பது கதை.
பொதுவாக ஹாலிவுட்டிலிருந்து வரும் ஃபேண்டஸி காமெடி டிராமா வகைப் படங்களில், வாழ்க்கை வரலாறு, நகைச்சுவை, தத்துவம் மூன்றும் இணையும் கதைக்களம் என்றால் அதிர்ச்சியளிக்கக்கூடிய செயற்கையான திருப்பங்கள் வந்து அயர்ச்சியூட்டும். இதில் நெகிழ்ச்சியான திருப்பங்கள் அடுத்தடுத்து அணிவகுக்கின்றன.
வாழ்க்கையில் சின்ன விஷயங்கள், சில்லறைத்தனமான விஷயங்கள் என நினைக்கும் எதுவும் அதன் உள்ளார்ந்த மதிப்பில் உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருப்பதைப் படம் தெளிந்த நீரோடை போல் சித்தரிக்கிறது.
சிறுவயது கலாமாக வரும் தேசிய விருதுபெற்ற நாகவிஷாலும் பழுத்த பழமாக வந்தாலும் இளைஞனைப் போல் துள்ளியிருக்கும் காத்தாடி ராமமூர்த்தியும் மனதில் தங்கிவிடுகிறார்கள். பிரபாவாக வரும் விஷ்வத், கமலாவாக வரும் சுனைனா ஆகியோரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். ‘அவரும் செத்துட்டாரா?’ பாடல் உட்பட, கதைக் களத்தை தூக்கி நிறுத்தும் அற்புதமான இசையைத் தந்திருக்கிறார் கௌஷிக் க்ரிஷ்.
அறிவியலையும் தத்துவத்தையும் இணைக்கும் அட்டகாசமான முயற்சியைச் சுவாரஸ்யம் குறையாமல் முயன்றுள்ள ஸ்ரீராம் ஆனந்த சங்கரின் வரவு நல்வரவாகட்டும். இப்படியொரு திரைக்கதையைத் தேர்வு செய்து தயாரித்ததற்காக இப்படத்தின் தயாரிப்பாளர் அனிருத் வல்லபையும் பாராட்டலாம்.