தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா நடித்த ‘களவாடிய பொழுதுகள்’ உருவாக்கத்தில் இருந்தபோதே பேசப்பட்டது. பிரபுதேவா, சத்யராஜ். பிரகாஷ்ராஜ் பேட்டி கொடுக்கும்போதெல்லாம் அந்தப் படத்தைப் பற்றிப் பேச மறந்ததில்லை.
தங்கர் பச்சானின் இரண்டாவது அழகி என்று படம் பார்த்த இயக்குநர்களால் வருணிக்கப்பட்டு வரும் அந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது. அயல்நாடுகளில் தமிழ்ப் பட விநியோகத்தில் புகழ்பெற்ற ஐங்கரன் நிறுவன அதிபர் கருணாமூர்த்தி தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி ’
படத்தைத் தயாரித்து வருகிறார். களவாடிய பொழுதுகள் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். கத்தி படத்தைக் கடும் போட்டிக்கு நடுவே வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் அனைவரும், கத்தி வெளியீட்டுக்கு முன்பாக ‘களவாடிய பொழுதுகள்’ படத்தை வாங்கி வெளியிட முன்வந்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் தங்கர் பச்சானின் உதவியாளர்கள் ராம், பாண்டிராஜ், அஜயன் பாலா, ஆகியோர், “ஒளிப்பதிவு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்? ஒளி ஓவியர் என்ற பட்டத்தை வாங்கிக்கொண்டு, நீங்கள் ஒளிப்பதிவைக் கண்டுகொள்ளாமல் விட்டது எங்களுக்கு கவலையாக இருக்கிறது.
உங்களிடம் உதவியாளர்களாக இருந்த பலர் இன்று இந்திய அளவில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர்களாக இருக்கிறார்கள். உங்கள் பலமே உங்கள் ஒளிப்பதிவுதான் ” என்று எடுத்துக் கூற, உற்சாகத்துடன் துள்ளியெழுந்த தங்கர் பச்சான், முதலில் தனது உதவியாளர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். இனி நல்ல கதையுடன் யார் அழைத்தாலும் ஒளிப்பதிவு செய்யத் தயங்க மாட்டாராம்.
முழு வீச்சில் ஒளிப்பதிவில் கவனத்தைத் திருப்பியிருக்கும் அதேநேரம், தனது புதிய படத்துக்கான திரைக்கதையும் எழுதி முடித்துவிட்ட தங்கர் பச்சானின் இயக்கத்தில், இரண்டு முன்னணி ஹீரோக்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பது அடுத்த ஹாட் நியூஸ். அந்த இரண்டு பேர் ஜெயம் ரவி - அதர்வா.