இந்து டாக்கீஸ்

நகரும் படிக்கட்டில் கிடைத்த நாயகி !

செய்திப்பிரிவு

அழகான பெண்களைத் தனது திரைப்படங்களின் முக்கிய அம்சமாக மாற்றுவதில் ராம் கோபால் வர்மா ரசனை மிகுந்தவர். கதாநாயகிகளுக்காக இவர் எங்கும் தேடி அலைவதில்லையாம். தெலுங்கு மற்றும் இந்திப்பட உலகில் தங்களுக்கான இடத்தைத் தேடும் அழகான மாடல்கள் இவரைத் தேடி வந்துவிடுவதுதான் வர்மாவின் கன்னிராசி என்று கிண்டலடிக்கிறார்கள் டோலிவுட்டில்.

தனக்கு முன்னால் எத்தனை கதாநாயகிகள் அணிவகுத்தாலும், தனது உள்ளுணர்வு தேர்வு செய்யும் கதாநாயகிகளை மட்டுமே டிக் அடிப்பாராம். ஆனால் தன்னிடம் வாய்ப்பு தேடி வராத ஒரு பெண்ணை, வலியச் சென்று அழைத்துக் கதாநாயகி ஆக்கினார் என்கிறார்கள். ’மோசமான நடிகை’ என்று விமர்சகர்களால் வறுத்து எடுக்கப்பட்ட அனைக்கா சோட்டிதான் அவர்.

இந்தியாவில் பிறந்தாலும் ஹாங்காங் நகரில் ஒரு பிரபல கட்டிடக்கலை அதிபரின் ஒரே மகளாக அங்கேயே பள்ளிப்படிப்பையும் ஃபேஷன் டிசைனிங் பட்டப்படிப்பையும் முடித்தவர். பிறகு மாடலிங் வாய்ப்புகள் மும்பையிலிருந்து தேடிவர மும்பைக்கு வந்திருக்கிறார். வர்மா படத்துக்கு எப்படித் தேர்வானார் என்பதை அவர் சொல்கையில்...

“நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது என் தோழியுடன் மும்பையிலுள்ள ஒரு மாலின் நகரும் படிக்கட்டுக்களில் போகும்போது ராம் கோபால் வர்மாவை சந்தித்தேன். நான் அவரிடம் உங்கள் படங்களின் ரசிகை என்று மட்டுமே சொன்னேன். அருகில் இருந்த என் தோழி ஏற்கனவே அவருக்கு அறிமுகமானவள். அது ஒரு நிமிடத்துக்கும் குறைவான சந்திப்பு. பிறகு என் தோழி மூலம் அவர் படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அந்த லிப்ட் பயணம் எனக்கு ஏற்றம் தந்துவிட்டது.

வர்மாவின் கதாநாயகி என்பதில் கர்வம் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் அறிமுகமான சத்யா படத்தின் இரண்டாம் பாகம், தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தோல்வியடைந்தது. ஆனால் அனைகாவுக்காக உருகும் ரசிகர்கள் இப்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை பெருகியிருக்கிறார்கள்.

தற்போது தமிழில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தில் ரங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இவர் நாற்பதுகளின் நாடக நடிகையா அல்லது, தெற்கத்தி ஜமின்தார்களை மயக்கிய சொப்பனசுந்தரியா என்றால் அது சஸ்பென்ஸ் என்கிறது காவியத் தலைவன் படக்குழு.

SCROLL FOR NEXT