அ
நீதிகளையும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் அலட்சியங்களை யும் கண்டும் காணாமல் செல்பவர்களுக்கு மத்தியில், நேரடியாக களத்தில் இறங்கி தட்டிக் கேட்பவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. பொதுநலன் பாதிக்கப்பட்டால் தயங்காமல் நீதிமன்றத்தை நாடி, தனி ஒருவராகப் போராடும் இவரது வாழ்க்கையின் சில பகுதிகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.
சாலையில் எச்சில் துப்பும் சிங்கப்பூர் ரிட்டன் மனிதர், காவல் நிலையத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் பெண் ஆய்வாளர், மீன்பாடி வண்டிகளால் தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் டிராஃபிக் ராமசாமி. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடுக்கும் தாக்குதல்களை மீறி, அவர் எப்படி தனது போராட்டத்தைத் தொடர்ந் தார் என்பதுதான் கதை. அதை நிறைய லாஜிக் மீறல்களோடு, கமர்ஷியல் டிராமாவாக தந்திருக்கிறார் இளம் இயக்குநர் விக்கி.
டிராஃபிக் ராமசாமியை போராளியாக மாற்றிய 14 வயது சம்பவத்தை சில ஷாட்களில் அழுத்தமாக சித்தரித்த வகையில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. இப்போதைய சூழலில், நீதிமன்றம் மீது டிராஃபிக் ராமசாமி வைத்திருக்கும் நம்பிக்கையை யும் நன்கு பதிவுசெய்திருக்கிறது படம்.
நடிகர் விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, பிரகாஷ்ராஜ் போன்ற பிரபல நட்சத்திரங்களை திரைக்கதையில் பயன்படுத்திக்கொண்ட விதம், தேர்ந்த புத்திசாலித்தனத்துடன் இருக்கிறது.
அழுத்தமான பிரச்சினைகள் படத்தில் இருப்பதால் குத்தாட்டம் உள்ளிட்ட திணிக்கப்பட்ட வணிக அம்சங்களை மீறி படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அதிகார வர்க்கத்தில் உள்ள அனைவருமே பணப் பேய்கள் அல்ல என்பதைக் காட்டும் இயக்குநர், அவர்களை காமெடியன்களாகக் காட்டி கலகலப்பூட்டுகிறார். ஆனால், அதுவே பிரச்சினையின் தீவிரத்தைக் குறைத்துவிடுகிறது.
எஸ்ஏசி 75 வயதானாலும் ஸ்மார்ட்டாக இருக்கிறார். தனது முதுமையை மீறி ரிஸ்க்கான ஆக்சன் காட்சிகளிலும், தலைகீழாக தொங்கியும் நடித்திருக்கும் அவரது அர்ப்பணிப்பை பாராட்டலாம். ஆனால், எல்லா காட்சிகளிலும் ஒரேமாதிரி வசனம், பாவனைகள் என பார்வையாளர்களை எந்தவிதத்திலும் ஈர்க்காமல் வெறுமனே கடந்து போகிறார். அநீதி யைக் கண்டு பொங்கும் கதாபாத்திரத்துக்கு எஸ்ஏசி கச்சிதமாக பொருந்தினாலும், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியாக அவரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கும் காட்சியில் பரிதாபத்தை ஏற்படுத்திவிடுகிறார்.
எஸ்ஏசி மனைவியாக நடித்திருக்கும் ரோஹிணி, காவல் ஆணையராக வரும் பிரகாஷ்ராஜ், ரவுடியாக வரும் ஆர்.கே.சுரேஷ் நன்றாக நடித்துள்ளனர். பாலமுரளியின் பின்னணி இசை ஓகே.
அரசியல்வாதிகள் என்றாலே மோசமானவர்கள் என்றுதான் காட்ட வேண்டுமா? அதிலும் மேயராக நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி கதாபாத்திரம் ரொம்ப மோசம். அவருக்கு அயிட்டம் சாங், பெண் தோழி என கடைசியில் படத்தின் நம்பகத் தன்மையையே கேள்விக்குறியாக்கிவிட்டார் இயக்குநர். டிராஃபிக் ராமசாமி அதிகம் குரல் கொடுக்கும் முக்கிய அம்சம், சாலை விதிகளை மீறும் பேனர்கள். அதுதொடர்பான காட்சியை படத்தில் எங்காவது சேர்த்திருக்கலாம். பல உயிர்களை பலிவாங்கிய மீன்பாடி வண்டிகளுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்க டிராஃபிக் ராமசாமி எப்படியெல்லாம் போராடுகிறார் என்பதை, படத்தின் 2-வது பாதியில் காட்சிப்படுத்திய விதத்தில் பார்வையாளர்களை கொட்டாவி விட வைத்துவிடுகிறார் இயக்குநர்.
ஆதாயங்கள் இல்லாத உண்மையான சமூக அக்கறை குறைந்து வரும் காலகட்டத்தில், அதுபோன்ற ஒரு வாழும் கதாபாத்திரத்தின் சாதனை வரலாற்றைப் படமாக்கிய முயற்சிக்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.