வெகு சுவாரசியமாகக் கதை சொல்வதைத் தாண்டி, ஒரு நல்ல திரைப்படம் என்ன செய்யும்? மரபை உடைக்கும். கூடவே, கதை மாந்தர்களுடன் நம்மையும் பயணிக்கச் செய்யும். அடர்ந்த கானகத்தில் ஒரு குற்றவியல் நாடகம் நடந்தேறுகிறது. பொதுவாக அதைக் காவல்துறை அல்லது வனத்துறை புலனாய்வு செய்யும் கோணத்தில் கதை சொல்லப்படுவது மரபு. அதை அநாயாசமாக உடைத்து, குற்றத்துடன் தொடர்புடைய ஒரு தந்தை, மகன், மருமகளின் உணர்வுப் போராட்டங்களின் வழியாக ‘பிளாஷ்பேக்’ காட்சிகளில்லாமல் கதை சொல்கிறது ‘கிஷ்கிந்தா காண்டம்’.
மறதி நோய் கொண்ட தந்தை, கடந்தகால இழப்புடன் அவரின் மகன், குதூகலமற்ற ஒரு பதிவுத் திருமணம், அடர்ந்த காடு, அலையும் குரங்குகள், காணாமல் போகும் கைத்துப்பாக்கி, தொலைந்த இரண்டு தோட்டாக்கள், எதையும் தேடிக் கண்டறியும் ஆர்வம் கொண்ட மருமகள். இவ்வளவுதான் கதைக்களம். இதற்குள் பல புள்ளிகளை இணைக்கும் திரைக்கதையைக் கதாநாயகனாக முன்னிறுத்தி வென்றிருக்கிறார் கதாசிரியர், ஒளிப்பதிவாளர் பாஹுல் ரமேஷ். கதையின் சாரம் சற்றும் குறையாமல் வெகு நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் டிஞ்சித் அயத்தன். பதற்றமில்லாமல், சமவெளியில் பாயும் ஒரு நதியின் நிதானத்துடன் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் இ.எஸ். சூரஜ்.
எல்லாக் காட்சிகளிலும் பார்வையாளர்களைப் பங்கேற்கச் செய்யும் உத்தியும் கானகப் பின்னணியும் சிறப்பாகக் கையாளப் பட்டிருக்கின்றன. கதை மாந்தர்களைப் போலவே மர்மங்கள் கொண்ட அரண்மனையும் வனவிலங்குகளும்கூட கதையை நகர்த்தப் பெரிதும் உதவி இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் கைத்துப்பாக்கியைக் காவல் நிலையத்தில் யாரோ ஒருவர் ஒப்படைக்கும் காட்சியில் தொடங்கி இறுதிக்காட்சி வரை தொய்வேயில்லாமல் கதை நகர்கிறது.
நடிகர்களின் பங்களிப்பாக அப்பு பிள்ளை வாழ்ந்திருக்கும் விஜயராகவன் என்கிற நுணுக்கமான உடல் மொழியுடனான கதாபாத்திர நடிப்பைக் குறிப்பிடலாம். வழக்கத்துக்கு மாறாக உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, கையறுநிலையை வெளிப்படுத்தியிருக்கும் ஆசிப் அலி, பார்வையாளர்களின் பிரதிநிதியாகக் குற்றத்தை ஆராயும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரது நடிப்பும் அபாரம்.
படத்தின் உண்மையான கதாநாயகன் அதன் ஒளிப்பதிவாளர் - கதாசிரியர் பாஹுல் ரமேஷ். என்ன நடந்திருக்கக்கூடும் என்கிற பேரார்வத்தை முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை அதன் கட்டமைப்பு குறையாமல், வழக்கமான வார்ப்புரு காட்சிகள் இல்லாமல் வெகு நேர்த்தியாகக் கதை சொல்லியிருக்கிறார். பேட்டிகளில் கிறிஸ்டோபர் நோலனை மானசீக குருவாகச் சொல்லிக்கொள்ளும் கதாசிரியர் பாஹுல் ரமேஷ், அதற்கு நியாயமும் கற்பித்திருப்பதாகவே சொல்லவைக்கிறது ‘கிஷ்கிந்தா காண்டம்’.
- totokv@gmail.com