இந்து டாக்கீஸ்

சட்டம் என் கையில்: குற்றமும் அதன் நிமித்தமும் - திரைப் பார்வை

திரை பாரதி

முதன்மைக் கதாபாத்திரம் நல்ல மனிதனா, அல்லது சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் எதிர்மறைக் குணம் கொண்டவனா என்கிற சட்டகத்துடன் பல படங்கள் வந்திருக்கின்றன. இப்படம் அந்த வரிசையில் இடம்பெற்றாலும் நாயகன் எப்படிப்பட்டவன் என்பதை முதலில் சொல்லாமல், அவனது புத்திசாலித்தனமான நகர்வுகளுக்குப் பின்னர் அவனைப் பற்றிச் சொல்லும் திரைக்கதையுடன் வந்திருக்கிறது ‘சட்டம் என் கையில்’.

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ தொடங்கி மாஸ் ஹீரோக்கள் பலரின் நண்பனாக வந்து குணச் சித்திர, நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்ற சதீஷ், ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். சட்டத்தின் கண்களைத் தன் புத்திசாலித்தனத்தால் மறைத்து பகடையாட்டம் ஆடும் கதாபாத்திரத்தில் அவரைப் பொருத்தியிருக்கிறார் ‘சிக்ஸர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாச்சி. இது சதீஷுக்குப் பொருந்தினாலும், மற்றொரு முக்கியக் கதாபாத்திரம் பற்றியும் பின்னால் சொல்லப்படும் விஷயங்கள், அக்கதாபாத்திரம் கொலையாகும் தருணத்தில் கொடுத்திருக்க வேண்டிய தாக்கத்தைக் கொடுக்கத் தவறி விடுகிறது.

ஏற்காடு மலைப் பகுதியில் ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. வாடகைக் கார் ஓட்டுநரான சதீஷ், தனது காரில் எதிர்பாராமல் வந்து மோதி நிகழ்விடத்திலேயே இறந்துபோகும் ஒருவரின் சடலத்தை மறைக்க, அதைத் தனது காரின் டிக்கியில் வைத்துக்கொண்டு புறப்படுகிறார். அதே இரவில் ஒரு பெண் கொலையான தகவல் ஏற்காடு காவல் நிலையத்துக்கு வருகிறது.

இந்தச் சிக்கலான சூழ்நிலையில் அந்தக் காவல் நிலையத்தில், சக காவல் அதிகாரியான அஜய் ராஜுடன் அதிகாரப் போட்டியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர் பாவெல்லிடம் வேறொரு விதி மீறலுக்காக மாட்டுகிறார் சதீஷ். பெண் கொலையான வழக்கை விசாரிக்கிறார் அஜய் ராஜ். இந்த இருவருக்கிடையில் மாட்டும் சதீஷ் யார்? காவல் நிலையத்திலிருந்து அவரால் வெளியே வர முடிந்ததா? கொலையான பெண் யார்? அவரது கொலையின் பின்னணி என்ன என்பதை நோக்கி விறுவிறுவென நகர்கிறது படம்

உடனடியாகக் கதையைத் தொடங்கியதும் சதீஷின் காய் நகர்த்தல்களும் ரசிக்கும்படி இருக்கின்றன. சதீஷைப் பகடையாக வைத்து பாவெல்லும் அஜய் ராஜும் ஆடும் ஆட்டம், ஒரு குற்ற த்ரில்லர் திரைக்கதை உருவாக்கும் அழுத்தத்தைச் சீராக்கும் அதிகார மைய நகைச்சுவையாக எடுபடுகிறது. இந்த இருவரது நடிப்பும் குற்ற நாடகத்தின் திரை அனுபவத்தை மேம் படுத்தியிருக்கின்றன. சதீஷ் தனது கதாபாத்தி ரத்தின் திரிசங்கு நிலையை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்.

கதை நிகழும் ஏற்காட்டின் பனி படர்ந்த இரவை, மிக இணக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா. படத்தின் ஒலி வடி வமைப்பில் கதைக் களத்தை உணரவைத்திருக்கிறார்கள் அருண் ஏ.கே. ராஜா நல்லையா இருவரும். எம்.எஸ்.ஜோன்ஸ் இசையிலும் பழுதில்லை. கதாநாயகி தேவைப்படாமலேயே ஒரு த்ரில்லர் குற்றக்கதையை விறுவிறுப்பாக நகர்த்திக் காட்டியிருப்பதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT