தீ
விரவாதிகளால் பேரிடருக்கு ஆளாகும் வானுயரக் கட்டிடங்கள். அவற்றில் உயிரைப் பணயம் வைத்து கதா நாயகன் நிகழ்த்தும் சாகசங்களை ‘த டவரிங் இன்ஃபெர்னோ’ (1974), ‘டை ஹார்ட்’ (1988) ஆகிய படங்களில் பார்த்திருப்போம். அந்த வரிசையில் ஜூலை 13 அன்று திரைக்கு வருகிறது ‘ஸ்கைஸ்கிராப்பர்’ திரைப்படம்.
துபாயின் புர்ஜ் கலிஃபாவை விட உயரமான கட்டிடமாக, 240 தளங்களுடன் வானளாவும் புதிய கட்டிடம் ஒன்று ஹாங்காங்கில் உருவாகிறது. கட்டிடத்தின் தலைமை பாதுகாப்பு அலுவலராக எஃப்.பி.ஐயில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியான ட்வைன் ஜான்சன் பொறுப்பேற்கிறார். போர் முனையில் ஒரு காலை இழந்த இவர், இதே கட்டிடத்தில் மனைவி குழந்தைகளுடன் தங்கி பணியைத் தொடருகிறார். கட்டிடத்தின் பாதுகாப்பு ஓட்டைகளைக் கண்டறிந்து நிர்வாகத்திடம் இவர் முறையிட்டதை முதலாளிகள் ரசிக்கவில்லை. ஒரு துரதிருஷ்ட தினத்தில் அந்தக் கட்டிடத்தில் ஊடுருவும் தீவிரவாதிகளால் 96-வது தளத்தில் மூளும் தீ கட்டிடம் நெடுகப் பிழம்பாய் பரவுகிறது.
பழியை ஜான்சன் மீது சுமத்தி ஒருபக்கம் போலீஸ் விரட்டுகிறது. மறுபக்கம் தீப்பிழம்பாய் தகிக்கும் கட்டிடத்துக்குள் தீவிரவாதிகளுக்கு எதிரான ஜான்சனின் மோதல் தொடங்குகிறது. இதற்கிடையே எரியும் தளத்தில் சிக்கிய தனது குடும்பத்தையும் காப்பாற்ற முயலுகிறார். இப்படிப் பல அபாயகர முனைகளுக்கு இடையே ஜான்சன் ஆடும் வெட்டாட்டத்தை 3டி தொழில்நுட்பத்துடன் நமக்குப் படையல் வைக்க வருகிறது ‘ஸ்கைஸ்கிராப்பர்’.
நேஃப் கேம்ப்பெல் (Neve Campbel), சின் ஹான், ரோலண்ட் மொல்லெர் உள்ளிட்டோர் உடன் நடிக்க, நாயகன் ட்வைன் ஜான்சன் படத்தயாரிப்பிலும் இணைந்திருக்கிறார். ராசன் எம்.தர்பர் (Rawson M.Thurber) எழுதி இயக்கிய இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.