அது 1988 ம் ஆண்டு. தெலுங்குப் படவுலகில் ஏற்கெனவே சில படங்களில் வேலை செய்த அனுபவமுள்ள உதவி இயக்குநர் அவர். அவரிடம் முன்பின் அறிமுகமில்லாத ஓர் இளைஞர் வந்து இது என் முதல் திரைக்கதை என்று ஒரு நோட்டுப்புத்தகத்தை படிக்கக் கொடுத்தார். முதலாமாண்டு பயிலும் கல்லூரி மாணவனைப் போல் டெனிம் ஜீன்சும் டீ ஷர்ட்டும் கண்ணாடியும் அணிந்து வந்திருந்த அவர் முழுதாக யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கவில்லை.
இவன் நிச்சயம் சிபாரிசில்தான், இந்தப் பட வாய்ப்பைப் பெற்றிருப்பான் என அலட்சியமாக எண்ணிய அந்த உதவி இயக்குநர், திரைக்கதை மாதிரி கூட இல்லாத ஒரு கதையைப் படிக்கிறார். அன்று மாலையே கதை எப்படி என இளைஞர் கேட்க, அந்த உதவி இயக்குநர் “ சார்.. இது ஏற்கெனவே இந்தியில் வந்த ‘அர்ஜுன்’ படக்கதையின் சாயல் தெரிகிறதே” என மெதுவாக இழுக்கிறார். “அர்ஜுன் மாதிரியல்ல.. அர்ஜுனே தான்” என பதில் சொல்லிச் சிரித்துவிட்டு நகர்கிறார்.
இத்தனைக்கும் புகழ் பெற்ற கதாசிரியர் ஜாவேத் அக்தர் எழுதி, 1985- ம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றிப்படமாக ஓடி முடிந்துவிட்டது ‘அர்ஜுன்’. அதை முறையே தமிழில் ‘சத்யா’, கன்னடத்தில் ‘சங்க்ரமா’, ஏன் தெலுங்கில் கூட வெங்கடேஷ் நடித்து ‘பாரதம்லோ அர்ஜுனுடு’, என பல்வேறு விதமாக மறுஆக்கம் செய்து இந்தியா முழுதும் பார்வையாளர்கள் மத்தியில் பரிச்சயமான ஒரு கதையாக இருந்தது. ஆனாலும், படம் வளர வளர அந்த உதவி இயக்குநரின் பார்வையில் புதிய இயக்குநரின் பிம்பமும் வளர்ந்து.
பின்னாளில் அந்தப்படத்தை விநியோகிஸ்தர்கள் வாங்காமல் தயாரிப்பு நிறுவனமே வெளியிட, தெலுங்கில் அந்தப் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. எந்த அளவுக்கு என்றால், மொழிமாற்றம் செய்து வெளியிட யாரும் முன்வராததால், தயாரிப்பு நிறுவனமே ஒரு லட்சம் செலவு செய்து தமிழில் வெளியிட, அந்தப் படம் செய்த வசூல் தொகை இரண்டு கோடி. இளைஞரைக் கண்டு வியந்த அந்த உதவி இயக்குநர் பின்னாளில் ‘குலாபி’, ‘அந்தப்புரம்’ போன்ற படக்கள் எடுத்த கிருஷ்ணா வம்சி. அந்த தயாரிப்பு நிறுவனம் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ். யாரிடமும் முழுதாகப் பணியாற்றியிருக்காத அந்தப் புது இயக்குநர் ராம் கோபால் வர்மா. அந்தப் படம் 1989 –ல் தெலுங்கில் வெளிவந்த ‘ஷிவா’. தமிழில் ‘உதயம்’ என்ற தலைப்பில் வெளியாகி தமிழகக் கல்லூரி மாணவர்களை துருதுருக்க வைத்தது.
இந்தக் கதை இதோடு முடியவில்லை. மறுபடியும் ராம் கோபால் வர்மா, 1990 -ல் இந்தியில் நாகார்ஜுனாவை வைத்து ‘ஷிவா’ என்ற பெயரில், அதையே மறுஆக்கம் செய்து வெளியிடுகிறார். இது போதாமல், 2006-ல் இன்னொரு ‘ஷிவா’ என்கிற படம். இது ஷிவாவின் முன்கதை. அது தமிழில் 2006 –ல் ‘உதயம்2006’ என வந்து தோற்றுப் போனது.
நாளை நாக சைதன்யாவையும் சமந்தாவையும் வைத்து இன்னொரு மறுஆக்கம் வந்தாலும் நாம் தாங்கிக்கொண்டுதான் ஆக வேண்டும். இத்துடன் ‘ஷிவ’ புராணம் முடிந்தது. இன்றுவரை மறக்கமுடியாத ஆக்ஷன் படமான ‘ஷிவா’ வெளியாகி 29 ஆண்டுகள் கடந்துவிட்ட பெருமையைக் கெடுக்க, ராம் கோபால் வர்மாவும் நாகார்ஜுனாவும் தற்போது எடுத்து வெளியிட்டிருக்கும் கர்ண கொடூரம் ‘ஆபீஸர்’.
இன்னொரு உதாரணம்: எழுத்தாளர் சுதேசமித்திரனின் ஒரு கட்டுரையில் சொல்லப்பட்டது. ஆண்டு 1985. ஒரே ஆண்டில் வெளிவந்த மூன்று தமிழ்ப்படங்கள். ஒரு திருமணமான, மத்திய வயது ஆணின் சுவாரசியமில்லாத வாழ்வில், இன்னொரு இளம்பெண் நுழைகிறாள். அவளின் ஈர்ப்பால் அலைக்கழியும் ஆணின் வாழ்வு என்ன ஆகிறது என்பதே பொறி. இந்தக் கதைக்கருவே, பெரு நகரத்தில் மேல்தட்டு இசைக் கலைஞன் ஜே.கே. பாலகணபதி, கிராமத்துப் பெரிய மனிதரான மலைச்சாமித் தேவர், மத்திய குடும்பத்தின் சராசரி நாயகனான மதனகோபால் ஆகியோரின் வாழ்வின் பக்கங்களை திரையில் கொண்டு வருகிறது.
இவை முறையே கே.பாலசந்தரின் ‘சிந்து பைரவி’, பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’, கே.பாக்யராஜின் ‘சின்ன வீடு’ ஆகிய திரைப்படங்கள். ஒரே கருப்பொருளை வைத்து கதாசிரியரின், இயக்குநரின் திறமையால் வெவ்வேறு வெற்றிப் படங்கள் கிடைக்கின்றன.
இன்னும் பல முழுமையான, சிறந்த, வெற்றித் திரைப்படங்களை குறிப்பிடலாம். மகேந்திரனின் ‘தங்கப்பதக்கம்’ கதை ஒரே வாரத்திலும், ‘ஓர் இரவு’ படத்தின் கதை உண்மையிலேயே ஓர் இரவில் எழுதப்பட்டதாகவும் இந்திப் படமான ‘ஷோலே’யின் கதை விவாதம் மட்டும் ஒரு வருடம் நடைபெற்றதாகவும் நாம் படிக்கிறோம்
தெரிந்த கதை வெற்றி பெறுவதும், கதை வறட்சியில் எடுத்த படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பதும் அதே கதையை திரும்ப எடுப்பதையும் பிரம்மாண்டமான கதை படு தோல்வியடைவதையும் பார்க்கிறோம். எடுக்கப்படும் ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் இதே போல கதையைத் தேடியலைவதும், அதைப் படாத பாடுபட்டு திரைவடிவமாக ஆக்குவமான மாயமான் வேட்டையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதானிருக்கிறது.
தொடர்புக்கு: tottokv@gmail.com