அ
னைத்துத் தரப்பு பார்வையாளர்களாலும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறியிருக்கிறது ‘காலா’. ‘இந்தப் படத்தில் இயக்குநர் பா.இரஞ்சித், ரஜினியை வைத்து என்ன அரசியல் பேசியிருப்பார்?’ என விவாதங்கள் ஒருபக்கம். கர்நாடகாவில் ‘காலா’வைத் திரையிட மாட்டோம் என்ற கன்னடத் திரையுலகின் புறக்கணிப்பு இன்னொரு பக்கம் என பரபரப்பான சூழ்நிலையில் பா.இரஞ்சித்திடம் உரையாடியதிலிருந்து…
ரஜினியைக் கொண்டாடும் கலர்ஃபுல் திருவிழாவாக இருக்குமா ‘காலா’?
‘காலா’ன்னா கறுப்பு. கறுப்பு நிச்சயம் கலர்ஃபுல்லாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் கதை மும்பையின் தாராவி பகுதியில் நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருக்கிறது. பெரிய நடிகர் பட்டாளம் இருந்தாலும், யாருமே சினிமா ஆட்களாகத் தனித்துத் தெரிய மாட்டார்கள். எல்லாருமே கதையில் வரும் கதாபாத்திரங்களாகவே தெரிவார்கள். அந்தவகையில் கலர்ஃபுல்லான ‘காலா’வாக நிச்சயம் இருக்கும்.
அதேநேரம் இது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் படம். ஆனால், படமும், ‘காலா’ என்ற கதாபாத்திரமும் மக்களுடைய நிலத்தைப் பற்றியும் அவர்களுடைய வாழ்வியல் பற்றியும் நிறையப் பேசும். நிச்சயமாக, ரஜினி படமாகவும் மக்களுடைய படமாகவும் ‘காலா’ இருக்கும்.
‘காலா’ யாரைப் பற்றிய கதை?
இது கேங்ஸ்டர் படம் கிடையாது. ஃபேமிலி டிராமாவாகத்தான் இருக்கும். தன்னுடைய நான்கு குழந்தைகள், பேரப்பிள்ளைகளுடன் தாராவியில் வசிக்கும் ஒரு மனிதரைப் பற்றிய கதை இது. அந்தக் குடும்பத்துக்குள் நடக்கிற உணர்வுபூர்வமான விஷயங்கள் பார்வையாளர்களைக் கவரும் என நம்புகிறேன். நம்முடைய குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட, நமக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்த மாதிரி நம்முடைய குடும்பங்களைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் இந்தப் படத்திலும் இருக்கின்றன.
கபாலி - குமுதவல்லி போன்ற காதல் இந்தப் படத்திலும் இருக்கிறதா?
ஆமாம். காலாவுக்கும் ஷெரீனாவுக்குமான (ஹுமா குரேஷி) காதல், மிக மிகச் சுவாரசியமாக இருக்கும். அதேநேரத்தில், காலாவுக்கும் செல்விக்கும் (ஈஸ்வரி ராவ்) திருமணமாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் காதல், இன்னும் சுவாரசியமாக இருக்கும். நம் வீட்டில் கணவன் -மனைவிக்குள் இருக்கும் காதல் நெருக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் காதல் இருக்கும்.
ரஜினியின் சின்ன வயது கேரக்டரில் தனுஷ் நடித்திருப்பதாகத் தகவல் வெளியானதே?
அப்படி எதுவும் இல்லை. தனுஷைப் பொறுத்தவரை கதையிலோ, நடிகர்கள் தேர்விலோ தலையிடாத தயாரிப்பாளர். சுதந்திரமாக எங்களை வேலைசெய்ய விட்டார். இந்தப் படத்தில் அவர் நடிப்பதற்கான தேவையும் ஏற்படவில்லை.
நெல்லை வட்டார வழக்கு கதைக்களத்துக்கு தேவைப்பட்டதா? நெல்லைத் தமிழில் பேச ரஜினி ஏன் அவ்வளவு தடுமாறுகிறார்?
நெல்லைத் தமிழ், கதைக்கு முக்கியமானதுதான். காரணம், தாராவியில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் நெல்லையில் இருந்து சென்று குடியேறியவர்கள்தான். அதற்காக ஒரேடியாக வட்டார வழக்கு மொழியிலும் சென்று மாட்டிக்கொள்ள வேண்டாமென நினைத்தேன். காரணம், முக்கியமான சில கருத்துகளைப் படத்தில் பேசியிருக்கிறோம். அந்தக் கருத்துகள் மக்களிடம் எளிதில் சென்றுசேர வேண்டுமானால், அதற்கு பொதுத்தமிழ்தான் ஏற்றது. ரஜினி சார் ரொம்பக் கஷ்டப்படவில்லை.
விளிம்புநிலை மக்களுக்கான தலைவர் என்ற சித்தரிப்புக்காக மலேசியா, மும்பை என தமிழகத்துக்கு வெளியே தேடுகிறீர்கள். தமிழ்நாட்டில் அப்படி ஒரு தலைவன் இருந்ததில்லையா?
தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். ‘மெட்ராஸ்’ படத்தைத் தமிழ்நாட்டில்தானே எடுத்தேன்? ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களுக்குப் பிறகு, என்னை ஈர்க்கிற இடங்கள் நோக்கி நான் நகர்கிறேன். கதை, கதாபாத்திரம் எல்லாமே திரைக்கதை வழியே இயக்குநர் உணர்கிற விஷயம்தான். வாய்ப்பு வருகிறபோது, அடுத்து இங்குள்ளவர்களைப் பற்றியும் படம் எடுப்பேன்.
ரஜினியை இரண்டாவது முறையாக இயக்குவதில் உள்ள நன்மை என்ன?
முதல் படத்தில் பணியாற்றும்போது, இவ்வளவு பெரிய மனிதரை எப்படி வேலை வாங்குவது என்பது போன்ற சின்னச் சின்ன யோசனைகள் இருந்தன. ஆனால், ‘காலா’ படத்தின்போது எனக்கு என்ன வேண்டும் என்பதை அவரிடம் தெளிவாகச் சொல்லிவிட்டேன். ‘இதுதான் வேண்டும், இப்படித்தான் பண்ண வேண்டும்’ என்ற தன்னம்பிக்கை எனக்குக் கிடைத்தது. அதற்கான இடத்தை ரஜினி சார் எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். இரண்டு படங்களுக்கும் நான் ஒரே மாதிரிதான் உழைத்தேன்.
‘கபாலி’ படத்தின் கதையை எழுதி முடித்தபிறகு, அவருடைய நடிப்பில் இது எப்படி மாற்றமடையும் என்ற பயம் இருந்தது. இரண்டாவது படத்தில் அந்தப் பயம் இல்லை. நாம் என்ன எழுதுகிறோமோ, அது நிச்சயமாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அவருடன் அடுத்தடுத்து பணியாற்றியதில் அந்தப் புரிந்துணர்வு வந்துவிட்டது.
ரஜினியின் மகள் சவுந்தர்யா உங்களைப் பற்றி சொன்னதால்தான் அவரை இயக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது. ‘கோவா’ படத்தின்போது சவுந்தர்யா வியக்கும் அளவுக்கு என்னதான் நடந்தது?
நான் வேலை செய்வேன், அவ்வளவுதான். யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. தயாரிப்பாளர் வரும்போது, ‘எனக்கு இது வேண்டும், அது வேண்டும்’ என்று கேட்க மாட்டேன். என் வேலை எதுவோ, அதை நான் செய்வேன். ‘கோவா’ படப்பிடிப்பில், நான் ‘ரெடி’ என்று சொன்னால்தான் வெங்கட்பிரபு சார் ‘ஆக்ஷன்’ சொல்வார். நான், சுரேஷ், பிச்சுமணி என ஒரு குழுவாக வேலை செய்தோம். எந்தப் பிரதிபலனும் பார்க்காமல், என்னுடைய வேலையைச் சரியாக, நேர்மையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய உழைப்புக்குக் கிடைத்த பலனாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.
‘அட்டகத்தி’க்கு முன் – `கபாலி’க்குப் பின் இயக்குநர் பா.இரஞ்சித்: என்ன வித்தியாசம்?
எந்த வித்தியாசமும் கிடையாது. அப்போதும் இப்போதும் நான் பா.இரஞ்சித் மட்டும்தான்.
ரஜினியை வைத்து பெரிய பட்ஜெட் படங்களை இயக்கிவிட்டீர்கள். இனி, சிறிய பட்ஜெட் படங்களை இயக்குவீர்களா?
நிச்சயமாக இயக்குவேன். அதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
மூன்றாவது முறையாக ரஜினியுடன் இணையப் போகிறீர்கள், சூர்யா, தனுஷை இயக்கப் போகிறீர்கள் என உங்களுடைய அடுத்த படம் குறித்து வெளிவரும் தகவல்களில் எது உண்மை?
எதுவுமே உண்மை கிடையாது. அந்த மாதிரி யோசனையும் இப்போதைக்கு இல்லை. ‘காலா’வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அது மக்களுக்கான சினிமாவாக மாறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.