சில படங்கள் திரையரங்குகளில் வெளிவரும்முன்பே கோடம்பாக்கத்தில் பேசப்படும். தற்போது இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் அப்படிப் பேசப்பட்டுவரும் படம் ‘மாயபிம்பம்’.
முழுக்க புதுமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு அந்தப் படத்தை தயாரித்து இயக்கியும் இருக்கிறார். சுரேந்தர். அவரது வளசரவாக்கம் அலுவலகத்துக்குச் சென்றால் தனி ஆளாகப் படத்தை வெளியிடப் போராடி வருவது தெரிந்தது. அவரிடம் உரையாடியதிலிருந்து...
யாரைப் பார்த்தாலும் இவர் நல்லவர், இவர் கெட்டவர் என்ற பிம்பத்தை நமக்குள்ளே உருவாக்கிக் கொள்வோம். நெருங்கிப் பழகினால் மட்டுமே உண்மையான பிம்பம் என்ன என்பது தெரியவரும். அப்போதுதான் நாம நினைத்தது தப்புடா என்று புரியும். நமது அன்றாட வாழ்க்கையில் அனைவருக்குமே இந்த அனுபவம் இருக்கும். கதையும் அதைச் சார்ந்திருப்பதால் ‘மாய பிம்பம்’ என்ற தலைப்பு வைத்தேன்.
பிரபலமான இயக்குநர்களிடமோ, படங்களிலோ நான் உதவி இயக்குநராகப் பணிபுரியவில்லை. ஆகையால், பெரிய நடிகர்களிடம் சென்றால் நமக்கான அடையாளம் என்ன என்னும் கேள்வி முன்னால் வந்து நின்றது. பெரிய இயக்குநர்கள், தெரிந்த படங்களில் இருந்திருந்தால் மட்டுமே பெரிய நடிகர்களிடம் கதை சொல்ல கதவே திறக்கும். அதனாலேயே, புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கி, நமக்கும் இயக்கம் தெரியும் என்று காட்ட விரும்பியே இந்தப் படத்தை எடுத்தேன். புதுமுகங்களை வைத்து படம் எடுத்தால் நம் மக்கள் கதையோடு ஒன்றிப் படம் பார்ப்பார்கள் என்பதும் ஒரு காரணம்.
புதுமுக நடிகர்களிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியிருப்பதாகப் படம் பார்த்த அனைவருமே பாராட்டினார்கள். ஒரு இயக்குநராக எனக்குக் கிடைத்திருக்கும் முதல் ஊக்கம் இது. அதேபோல் புதுமுக நடிகர்கள் என்றால் சம்பளம் வாங்காமல் நடிப்பார்கள் என நினைக்கிறாங்க. அது ஒரு காலம். இது குறும்பட காலம். ஊதியம் கொடுத்தால் மட்டுமே உணர்வுபூர்வமாக வேலை செய்ய வருவார்கள்.
சின்ன பட்ஜெட்டில், முழுக்க புதுமுகங்களை வைத்து படம் பண்ணவேண்டும் என்று முடிவு செய்தே கதையை எழுதினேன். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களோடு கொஞ்சம் கற்பனை சேர்ந்திருக்கிறேன். அதில் ஒரு முக்கியமான விஷயத்தை வைத்தேன். இப்படி நடந்திருந்தால் என யோசித்து, அதற்கான விடையாகத் திரைக்கதையை எழுதினேன். இதில் வாழ்க்கை இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின், இயக்குநர்கள் பாண்டிராஜ், பிரபுசாலமன், பாலாஜி சக்திவேல், ராஜு முருகன் என பலர் படம் பார்த்திருக்கிறார்கள். எல்லோருக்கும் படம் ரொம்பவே பிடித்திருந்தது. “ ‘சேது’, ‘மைனா’, ‘காதல்’ படங்கள் பார்த்தபோது மனம் எவ்வளவு கனத்ததோ, அந்த மாதிரி இருக்கு என்று பாராட்டினார்கள்”. இந்த மாதிரியான பாராட்டுகள்தான், இன்னும் என் நம்பிக்கையை அதிகமாக்கியிருக்கிறது. இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் பாலா இருவரிடமும் படத்தைக் காட்ட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
முன்பு புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வெளியிட்டால், அதை மக்கள் அங்கீகரிப்பதற்கு ஒரு நேரம் இருந்தது. மக்கள் படத்தைப் பார்த்து, நல்லாயிருக்கு என்று சொல்லி பக்கத்து வீட்டுக்காரர்கள் படத்துக்கு வருவார்கள். இன்று அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. புதுமுகங்களை வைத்து படம் எடுத்தால், முதல் நாளுக்குக் கொஞ்சமாவது கூட்டமிருந்தால் மட்டுமே அடுத்த நாளைக்கு ஆட்கள் வருவார்கள்.
இல்லையென்றால் ஞாயிற்றுக்கிழமை புதுமுகங்களின் படம் திரையரங்கில் இருக்காது. அதனால், வியாபாரம் செய்யும் பலரும் ஏன் புதுமுகங்கள் நடித்த படத்தை வாங்கி வெளியிட வேண்டும் எனத் தயங்குகிறார்கள். புதுமுகங்கள் நடித்தாலும் நல்ல படமாக இருந்தால் மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களை அதற்காக நாம் முன்பே தயார் செய்ய வேண்டியுள்ளது.
’மாய பிம்பம்’ கொடுக்கப் போகும் அங்கீகாரத்தை வைத்துத்தான் எல்லாம். நல்ல படம் பண்ணனும் என்று முடிவு செய்து கஷ்டப்பட்டு இந்தப் படத்தை எடுத்துவிட்டேன். ஆனால் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அதை என் தோள் மீது வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறேன். எப்போது அந்தப் பாரம் கீழே இறங்கும் என்பது தெரியவில்லை.