இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: வாலாட்டும் ரோபாட்!

எஸ்.எஸ்.லெனின்

செ

யற்கை நுண்ணுணர்வுமிக்க ரோபாட் நாய் ஒன்று வடிவமைக்கப்படுகிறது. எந்திரனாக இருந்தாலும் விசுவாசத்தில் இயல்பைத் தொலைக்காத அந்த ரோபாட் நாயை மையமாகக் கொண்ட சாகசத் திரைப்படமே ஏ.எக்ஸ்.எல் (A.X.L). ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

போர்முனையில் வீரர்களுக்கு உதவும் ரோபாட் நாய்கள் அமெரிக்க ராணுவத்துக்காக ரகசியமாகத் தயாரிக்கப்படுகின்றன. கண்டறிதல், காப்பாற்றுதல் தேவைப்பட்டால் தாக்குதல் என நன்றியும் வீரமும் மிக்க வேட்டை நாய்க்குரிய அறிவைச் செறிவூட்டுவதுடன் அடுத்த தலைமுறை ரோபாட்களுக்கு அவசியப்படும் செயற்கை நுண்ணறிவுடனும் வடிவமைக்கப்பட்ட ரோபாட் நாய் ஒன்று, பழுதான எந்திரக் கழிவுகளுடன் வெளியேறுகிறது. ஏ.எக்ஸ்.எல் எனும் நாமகரணம் பூண்ட அந்த எந்திரன், ரேஸ் பைக்கில் ஊரைச் சுற்றும் மைல்ஸ் என்ற இளைஞனால் மீட்கப்படுகிறது. அது உருவில் எந்திரனாக இருந்தபோதும் இதயத்தில் விசுவாசம் மாறாதது மைல்ஸின் விவரங்களை ஸ்கேன் செய்து அவனையே தனது எஜமானனாக ஏற்று ஒட்டிக்கொள்கிறது.

இதற்கிடையே எந்திர பைரவனை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் அதைத் தொலைவிலிருந்தபடியே கட்டுப்படுத்த முயல்கிறார்கள். அவர்களில் சில துக்கிரிப் பேர்வழிகள், விபரீத பரிசோதனைகளிலும் இறங்குகிறார்கள். இவற்றுக்கு எதிராகப் போராடும் ரோபாட் நாய், மைல்ஸ், அவனுடைய தோழி சகிதமாய் நடத்தும் அடுத்தக்கட்ட சாகசங்களே திரைப்படம்.

எண்பதுகளில் வெளியான ‘ஷார்ட் சர்க்யூட்’ படத்தின் பாதிப்புடன் உருவாகி இருக்கும் ஏ.எக்ஸ்.எல் படத்தில் அலெக்ஸ் நியுஸ்டேடர் (Alex Neustaedter), பெக்கி ஜி, தாமஸ் ஜேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பவர் ஆலிவர் டேலி.

SCROLL FOR NEXT