இந்து டாக்கீஸ்

மாற்றுக்களம்: மூழ்கடிக்கப்பட்ட மனிதாபிமானம்! - நர்மதா டைரி

என்.கெளரி

பாரன்ஹீட் 9/11 ஆவணப்படப் புகழ் மைக்கேல் மூரை மனதில் கொண்டு ஆனந்த் பட்வர்தனை இந்தியாவின் மைக்கேல் மூர் என்பர். ஆனாலும் மூருக்கு முன்பாகவே தனது மூன்றாவது கண்ணோடு களம் புறப்பட்டவர் ஆனந்த். இவரது 'நர்மதா டைரி ' கடந்த 16-ம் தேதி சென்னை மைலாப்பூரில் திரையிடப்பட்டது. இந்த ஆவணப் படம் 1995-ல் வெளிவந்து கவனம் பெற்றது.

நர்மதை அணைத் திட்டம் குறித்தும் அது வரவிக்கும் மானுட இயற்கை அழிவுகள் குறித்தும் இது பேசுகிறது. 19 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்படத்தைப் பார்க்கும்போது நர்மதை திட்டத்தை மட்டும் அல்லாது தற்போதும் மக்கள் இயக்கங்களின் எதிர்ப்பை மீறித் தொடரப்பட்டுவரும் பல்வேறு ‘வளர்ச்சி' திட்டங்களைப் பற்றிய கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படத்தின் வெற்றி இதுவாகவும் இருக்கலாம்.

ஜவஹர்லால் நேரு 50களில், பெரிய அணைகளை ‘இந்தியாவின் திருக்கோயில்கள்'என்று வர்ணித்தார். அனால் 80களில் உலகெங்கும் எழுந்த சுற்றுச்சூழல் சிந்தனைகள் இந்த ‘திருக்கோயில்கள்' உலக அளவில் அருள்பாலித்த தீமைகள் பற்றிய கேள்வியையும் விழிப்புணர்வையும் உருவாக்கின. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த பின்னணியில் நர்மதை ஆற்றின் போக்கில் கட்டத் திட்டமிடப்பட்ட சர்தார் சரோவர் ஆணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு உருவானது. அதனால் பாதிக்கப்படும் பழங்குடிகளை ஒன்றிணைத்து மேதா பட்கர் தலைமையில் ‘நர்மதா பச்சாவ் அந்தோலன்' அமைப்பு போராட்டத்தில் இறங்கியது. உலக வரலாற்றில் மக்கள் விரோத வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான முக்கியப் போராட்டங்களில் இதுவும் ஒன்று.

ஆனந்த், நர்மதை அணைத்திட்டம் பொருளாதார ரீதியில் மோசமானது என்றும் சமத்துவத்திற்கும், நீதிக்கும் எதிரானது என்றும் இந்த ஆவணப்படத்தில் அழுத்தமாகச் சொல்கிறார். இந்தத் திட்டம் நிறைவடையும்போது 37,000 ஹெக்டேர் வளமான விளைநிலம் மூழ்கடிக்கப்பட்டிருக்கும், மண்ணின் மைந்தர்களான 2 லட்சம் ஆதிவாசிகள் துடைத்தெறியப்பட்டுவிடுவர்கள் என்பதைச் சோகமும் கோபமும் நிறைந்த மொழியில் படம் புரியவைக்கிறார்.

எனினும் இதை ஆவணப்படுத்துவதில் காட்சி ஊடகதிற்கே உரிய அழகியலையும் குறியீட்டுத் தன்மையையும் இணைக்க ஆனந்த் தவறவில்லை. ஆதிவாசிகளின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், துக்கம் ஆகியவற்றின் ஊடாக அலையும் கேமராவும், அங்கு வாழும் மக்களின் இசையே பின்னணி இசையாகவும் பார்வையாளர்களை ஊடுருவுகின்றன.

தனது தாய் மண்ணை இழந்த ஆதிவாசி ஒருவர் அணை மட்டம் உயர்ந்ததால் நீரில் மூழ்கிவிட்ட தன் இடத்தைக் காட்டி ‘அதுதான் என் வீடு’ எனும்போது மூழ்கடிக்கப்பட்டது அவர் வீடா அல்லது நாகரிக மனிதனின் மனிதாபிமானமா என்கிற கேள்வி எழுகிறது. அதிகாரம் அற்ற ஆதிவாசிகளின் வாழ்வைப் பறிப்பதில் அதிகாரம் மிக்க சிவில் சமுதாயம் கொஞ்சமும் கூச்சம் கொள்வதில்லை. ‘கிரேட்டர் காமன் குட்' , அதாவது ‘பெரிய பொது நலனை' கருத்தில் கொள்ளும்போது சில ஆயிரம் அல்லது சில லட்சம் மக்கள் பிரச்சினை எல்லாம் பிரச்சினை அல்ல. இங்கு ‘பெரிய பொது நலன்' கருதிய பெரும் திட்டங்களில் ஆதிவாசிகள் தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவர்களின் நலன்கள் இடம்பெறுவதில்லை. ‘பெரிய பொது' என்பது அவர்களைப் போன்ற விளிம்பு நிலை மக்களைத் தவிர்த்ததாகவே பொருள் கொள்ளப்படுகிறது.

நர்மதா அணைப் பிரச்சினை அங்குள்ள ஆதிவாசிகளின் பிரச்சினை. நம் பிரச்சினை இல்லை, கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை அப்பகுதி மீனவர் பிரச்சினை. நம் பிரச்சினை இல்லை என்ற சுயநலத்தைச் சிவில் சமூகத்தில் விதைப்பதிலும் அநீதிக்கு எதிராகப் போராடுபவர்களை வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான அன்னியக் கைக்கூலிகள் என்று கருத வைப்பதிலும் தாராளமயமாக்கம் வெற்றி பெற்று விட்டது. இந்தச் சூழ்நிலையில் ஆனந்த் பட்வர்த்தனின் நர்மதா டைரி நாம் இழந்து வரும் மானுட விழுமியங்களை நமக்குள் தக்கவைக்க முயல்கிறது.

உச்ச நீதிமன்றம், ஆதிவாசிகளின் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் அளித்த பிறகே அணையின் மட்டத்தை உயர்த்த வேண்டும் என 1995ல் தடைஆணை பிறப்பித்த வெற்றியோடு படம் நிறைவடைகிறது. ஆனால் 2000ல் உச்ச நீதிமன்றம் தடையை விலக்கிக்கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. நீதியான சமூகத்தை உருவாக்க நாம் நெடும்பயணம் செல்ல வேண்டியுள்ளது. ஆனந்த் பட்வர்த்தனின் கேமராவும்தான்.

SCROLL FOR NEXT