திரையிசைப் பாடல்களை ஒப்பிலக்கியக் கண்ணோட்டத்துடன் அணுகி, அதற்கு நயமும் பொருளும் சொல்லிய விதத்தில் எஸ். எஸ்.வாசனின் 'மொழி பிரிக்காத உணர்வு' எனும் இந்நூல் தனித்துவமானது. இந்தியிலும் தமிழிலும் ஒரே கால கட்டத்தில் வெளிவந்த திரையிசைப் பாடல்களை ஒப்பு நோக்கி, இரண்டிலும் உள்ள நயங்களை இக்கட்டுரைகளில் வாசன் பட்டியலிட்டிருக்கிறார்.
இது, சாதாரண காரியமில்லை. இரண்டு மொழிகளையும் பிழையறக் கற்றிருந்தாலன்றி இக்காரியத்தில் ஈடுபடமுடியாது. இக்காரியத்தில் ஈடுபட மொழி அறிவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இரண்டு சினிமாக்களின் வரலாற்று அறிவும் அவசியம். ஏனெனில், காலகட்டத் தெளிவில்லாமல் ஆய்வுகளை மேற்கொள்வது சாத்தியமில்லை.
எஸ். எஸ். வாசன், தம்முடைய நினைவுகளில் இருந்து அவர் ஒரு பாடலை விவரிக்கத் தொடங்கியதுமே அதற்குச் சார்புடைய பின்னணித் தகவல்களையும் அதனுடன் இணைத்துச் சொல்கிற முறையில் கவர்ந்துவிடுகிறார். ராயல்டியாக தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாயை, போர் வீரர்களின் விதவை நிதிக்கு அளித்த தேசியக் கவி பிரதீப்பைப் பற்றிய வாசனின் விவரணை அத்தகையதே.
தமிழ்த் திரையிசைப் பாடலாசிரியர்கள் பலரையும் இந்நூல் வழியே அவர் கவுரவித்திருக்கிறார். குறிப்பாக, 1965-ல் வெளிவந்த ‘கல்யாண மண்டபம்’ என்னும் திரைப்படத்தில் பாடல் எழுதிய தமிழ் வித்தகர் தெள்ளூர் தர்மராசன் கவியை, இந்நூல் தவிர வேறெங்கும் வாசித்தறிய வாய்ப்பில்லை.
மறக்கப்பட்ட மறக்கடிக்கப்பட்ட பாடல்களையும் பாடலாசிரியர்களையும் நினைவூட்டி, அதன்மூலம் நம்மையும் அவருடைய நெகிழ்வு வட்டத்துக்குள் இழுத்துவிடுகிறார். பாடல்கள் குறித்த தகவல்கள் சரியாக வந்திருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை தமிழ்ப் பாடல்களும் அதன் வரிகளும் ஓரளவு தெரிந்ததுதான். என்றாலும், அதற்கு ஒப்புமையான இந்திப் பாடல்களின் இசையை கேட்கத் தூண்டுவதே இக்கட்டுரைகளின் சிறப்பு. இந்திப் பாடலாசிரியர் ஆனந்த பக்ஷி என் விருப்பத்துக்குரியவர்.
அவருடைய பல பாடல்களை கேட்டுக் கிறங்கியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த இந்திக்காரர்கள் மொழிபெயர்த்துச் சொன்னதிலிருந்து, அப்பாடல்களை உணர்த்ததற்கும் வாசன் மொழிபெயர்த்துச் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. காரணம், மொழிபெயர்ப்பை வாசன் கவித்துவ அழகுடன் செய்திருக்கிறார்.
வாசனின் திரையிசைப் பாடல் மொழிபெயர்ப்பு, ஏறக்குறைய ஓசை ஒழுங்குகளுடன் செய்யப்பட்டிருப்பதை வாசகர்கள் உணரமுடியும். அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படும் ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்னும் கண்ணதாசனின் பாடல், ஆனந்த பக்ஷியின் ‘ஃபூலோன் - கா, தாரோன் - கா’ பாடலுடன் எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்பதை அசைச் சொற்களின்றி ஆசிரியர் காட்டியிருக்கிறார். ஒருவகையில் எஸ். எஸ். வாசனின் எழுத்து, திரையிசை வழியே மீண்டும் ஒருமுறை தேசிய கட்டுமானத்தை நிர்மாணிக்க முயன்றிருக்கிறது. கூடுதலாக ஒரு மொழி தெரிந்திருந்தால், கலை இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லலாம் என்பதை இந்நூலில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இந்நூல் நெடுக எஸ். எஸ். வாசன் கையாண்டிருக்கும் உத்திகளில் ஒன்று, தமிழுக்கும் இந்திக்கும் இருக்கும் பொதுத்தன்மையை மிகையில்லாமல் மொழிந்திருப்பதே. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் ஒரு வாக்கியத்தைக்கூட உருவாக்கவில்லை. வாசகனின் அல்லது ரசிகனின் மனோநிலையில் ஒரு பாடலின் சிறப்பைச் சொல்வதன்மூலம் திரைப்பாடலின் முழு பரிமாணத்தையும் காட்டிவிடுகிறார். பட்டிமன்ற பேச்சாளர்களால் படுகாயத்துக்கு உள்ளான திரைப்பாடல்களை, தன்னுடைய அற்புதமான கலையுணர்வால் காப்பாற்றியிருக்கிறார். இக்கட்டுரைத் தொடர் ‘தி இந்து’ தமிழின் `இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் வெளிவந்த காலத்தில் இந்த வாரம் எஸ்.எஸ்.வாசன், யாரை, எப்பாடலை எழுதியிருக்கிறார் என்னும் ஆவலை ஏற்படுத்திய இத்தொடர் புத்தகவடிவில் வெளிவந்திருப்பது இன்னும் ஈர்க்கிறது.
மொழி பிரிக்காத உணர்வு | ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன்
விலை: ரூபாய் 150 | வெளியீடு:‘தி இந்து’ குழுமத்தின் தமிழ் திசை, கஸ்தூரி மையம்,124, வாலாஜா சாலை, சென்னை – 600002, தொடர்புக்கு:7401296562