எ
ழுத்தாளர், பத்திரிகையாளர், வானொலி அறிவிப்பாளர், ஆவணப்பட இயக்குநர், பாடலாசிரியர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருப்பவர் தமயந்தி. தற்போது தனது ‘தடயம்’ என்ற சிறுகதையை அதே தலைப்பில் திரைப்படமாக்கியிருப்பதன் மூலம் இயக்குநராகவும் தடம் பதிக்கும் அவருடன் உரையாடியதிலிருந்து...
உங்களது இருபது வருட எழுத்துப் பயணம் எந்த இடத்தை அடைந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
ஓர் இடத்தை அடைவது என்பதை விடவும் என்ன எழுதியிருக்கிறேன் என்றும் எங்கிருந்து தொடங்கி எந்தப் புள்ளிக்கு நகர்ந்திருக்கிறேன் என்பதையும் மிக முக்கியமான விஷயமாக பார்க்கிறேன். பெண் வாழ்வு பற்றிய பதிவுகளும் தாமிரபரணி படுகொலை, முல்லைப் பெரியாறு பிரச்சினை , ஜெயலலிதாவின் மரணம் என்று நேரடியாக அரசியல் கதைகள் எழுதியதை முக்கியமாக நினைக்கிறேன். ‘நிழலிரவு’ என்னும் என் நாவல் நடைமுறை கிறிஸ்தவத்தின் , நடைமுறை கம்யூனிசத்தின் தோல்விகளைப் பேசியது . இத்தனையும் வாழ்வின் பெரும் இழப்புகளுக்குள்ளாகவும் அவமானங்களுள்ளாகவும் திளைந்து மீண்டு மீட்சி பெற எழுதியவையே. என் வாழ்வின் சாட்சிகளாக இருக்கப்போவதும் இவையே
புனைவெழுத்தைத் தாண்டி, திரைப்படப் பாடலாசிரியராக உங்கள் கணக்கைத் தொடங்கினீர்கள். தேன்மொழி, குட்டிரேவதி, நீங்கள், தற்போது உமாதேவி என்று பல பெண்கள் எழுத வந்தாலும் கவிஞர் தாமரையைப்போல் முழுவீச்சில் எழுதாதது ஏன்? பெண் பாடலாசிரியர்களுக்கு இங்கு என்னதான் சிக்கல்?
தாமரை இத்துறைக்கு வந்து பல வருடங்கள் ஆகின்றன. பாடல் பெறும் வாய்ப்புகளில் அரசியல் அதிகம். அதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். குட்டி ரேவதியின் ‘நெஞ்சே எழு’ பாடலின் அந்த முதல் இரு வார்த்தைகளுக்கு நிகர் ஏது? வசதிகளுக்குப் பதிலாக வேறு வார்த்தைகளை நினைத்தும் பார்க்க இயலாது. உமாதேவியின் ‘மாயநதி’, ‘புது வரலாறே’ பாடல்கள் சிறப்பானவை. பெண்களை , அவர்களின் திறனை இச்சமூகம் நம்புவதுமில்லை. வாய்ப்பு கொடுக்க முன் வருவதுமில்லை. அது மட்டுமே காரணம். பார்வதி என்னும் பாடலாசிரியருக்கு ஏன் வாய்ப்பு இல்லை? இப்போது இயக்குநர் சசியின் அடுத்த திரைப்படத்தில் சித்துகுமாரின் இசையில் நான் எழுதியிருக்கும் பாடல் நிச்சயம் பெருவெற்றி பெறும்.
முன்பு எப்போதையும் விட இலக்கியவாதிகள் வெகுஜன சினிமாவில் அதிகமாகப் புழங்கும் காலகட்டம் இது. ஆனால் நீங்கள் இயக்கிவரும் ‘தடயம்’ படத்தின் மூலம் ஒரு சுயாதீன திரைப்பட இயக்குநராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களே?
நான் அடிப்படையில் ஒரு கதாசிரியர். இயக்குநராவது என் கனவிலோ திட்டத்திலோ இல்லை. ஆனால் தடயம் இயக்க நினைத்த நொடி எப்படி நிகழ்ந்ததென்றே தெரியவில்லை. நான் பாலகைலாசத்தின் வழிப்பாதையில் ஆவணப் படங்களை இயக்கியவள் . அவர் இறக்கும் தருவாயில் எனது `முகம்’ எனும் கதையை திரைப்படமாக்க வேண்டுமென நினைத்தார். `தடயம்’ சிறுகதையில் திரைமொழிக்கான கூறுகள் மிகக் குறைவு. அதைத் தமிழ்ச் சூழலில் தயாரிக்க முன் வருபவர்களை என்னால் யோசிக்க முடியவில்லை. சுயாதீன முயற்சிக்கான வெளிப்படையான காரணம் இதுவே. இரு காதலர்கள் இருபது வருடம் கழித்து சந்திக்கும் அந்த ஒருமணி நேரம்தான் படம்.
சுயாதீன திரைப்படம் எடுத்தப் பிறகுதான் தமிழில் இதற்கு முன் இம்முயற்சிகளில் ஈடுபட்டவர்களின் வலிகள் புலப்பட்டது. இது வெறும் 10 நாட்களில் எடுக்கப்பட்ட ஒரு மணி நேரத் திரைப்படம். இத்திரைப்படத்தையே சரியான பொருட்செலவில் எடுத்திருந்தால் இன்னும் டெக்னிக்கலாக லைட்டிங், கலர் கரெக்ஷனில் மேம்படுத்தியிருக்க முடியும். சுயாதீன திரைப்படங்களில் பண நெருக்கடி மிக மோசமான ஒன்று.
ஆனால் சுயாதீனப்படங்கள் எடுக்கும் போது க்ரவுட் ஃபண்டிங்கில் பணம் கொடுத்தவர்களின் ஈடுபாட்டை மதித்து வரவு செலவுகளை வெளிப்படையாக வைப்பதன் மூலம், அடுத்த சுயாதீன படம் எடுப்பவருக்கு நாம் வழி விடுகிறோம் என்பதை உணர வேண்டும். அதே போல் தமிழில் அதிக சுயாதீனப் படங்கள் வருவதென்பது தமிழின் ஸ்டீரியோ டைப் கதையுலகத்திலிருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுக்கும் முயற்சியாய் இருக்கும்.
‘தடயம்’ என்ன மாதிரியான படம், இந்தப் படம் உருவானதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
இரு காதலர்களின் ஒரு மணி நேரச் சந்திப்பு. ‘கூடவே இருந்தாதான் கல்யாணம் ஆனவங்களா?’ - இதுதான் ஒன் லைனர். படம் செய்ய வேண்டும் என்றவுடன் செளபா அண்ணா, “ வந்து என் தோட்டத்துல எடு தமயந்தி” என்றார். அது என் பேறு. அங்குதான் படம் பிடித்தோம். பட நாயகர்களான கனி குஸ்ருதியும் கணபதி முருகேசனும் அத்தனை திறமையான கலைஞர்கள். அஸ்ரா கர்க் ஐபிஎஸ், குட்டி ரேவதி, மாலினி ஜீவரத்தினம், இணை இயக்குநர் ஏழுமலை, நடராஜன் ஜெகந்நாதன், நீதியரசர் சந்துரு, அருணாசலம், ஶ்ரீநிவாசன் நடராஜன் , லதா அருணாசலம், மயன் ரமேஷ் ராஜா மற்றும் பல நண்பர்கள் இத்திரைப்படத்தின் பின்னணியில் இருக்கிறார்கள். இருபாடல்கள் - குட்டி ரேவதியும் நானும் எழுதியிருக்கிறோம். சிந்தூரி, சந்தோஷ் ஜெயகரன், பத்மஜா ஶ்ரீதரன் , ஜெ சி ஜோ பாடியுள்ளனர்
இப்படத்தில் பங்கு பெற்ற மூவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இசையமைப்பாளர் ஜஸ்டின் . அத்தனை அற்புதமாக இரண்டு பாடல்கள் கொடுத்திருக்கிறார். எடிட்டர் பிரவீண் பாஸ்கர்.owning a project என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதை அவர் செய்தது மிக முக்கியமானது. அடுத்து ஒளிப்பதிவாளர் ஆண்டனி ஜெய். பெரிதாக நகர்தலுக்கு சாத்தியமில்லாத கேமரா கோணங்களில் கதை சொல்லியிருக்கிறார். அது பெருமுயற்சி.
சிறுகதையைத் திரைக்கதை ஆக்கிய விதத்தில் சவால் இருந்ததா?
நிச்சயம். புற்றுநோயில் இருக்கும் காதலி. அவளைப் பார்க்க வரும் காதலன். இந்த சந்திப்பை தொய்வில்லாமல் எடுப்பது சவாலாகவே இருந்தது. ஆனால் கனி குஸ்ருதியும் கணபதியும் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து விட்டார்கள்.
‘என் எழுத்தும் நானும் வேறல்ல, என்னுடைய, என் தோழிகளின் வாழ்க்கையில் நடந்தவற்றைத்தான் நான் எழுத்தில் பிரதிபலிக்கிறேன். என்னுடைய எழுத்தில் பொய்மை இல்லை’ என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்கள். ஆனால் சினிமாவில் அழகியலுக்காக உண்மையில் கொஞ்சம் கற்பனையைக் கலப்பது ஒரு அம்சமாகவே இருக்கிறது. ‘தடயம்’ படத்தில் உண்மை மட்டுமா, கற்பனையும் உண்டா?
இது முழுக்க முழுக்க உண்மைக் கதை. ஒரு ப்ரேம் கூட பொய்யில்லை. உண்மையை விடச் சிறந்த அழகியல் வேறு ஏது?
வெளியீடு எப்போது?
இந்த பொறுப்பை மாலா மணியன் தனது ஃபர்ஸ்ட் காப்பி புரடக்ஷன் மூலமாக செய்கிறார். திரைத்துறையில் நான் மிகவும் மதிக்கும் அன்பான நேர்மையான ஆளுமை மாலா. அவர் இந்த வெளியீட்டு விவரங்களை விரைவில் அறிவிப்பார்.