‘மை
நேம் இஸ் அஜதஷத்ரூ லாவாஷ் படேல்’ என்று ட்ரெய்லரில் தனுஷின் குரலைக் கேட்கும்போதே அவ்வளவு துள்ளலாக இருக்கிறது. ‘துள்ளுவதோ இளமை’யில் அறிமுகமான இவரா ஹீரோ..?’ என்று ரசிகர்களைக் கேட்க வைத்ததில் தொடங்கி, கோலிவுட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடித்து, தற்போது பிரெஞ்சுப் படத்தில் கால் பதித்திருக்கிறார். இது அத்தனையும், தன்னுடைய ‘கெட் அப்’பில் எந்த விதமான பெரிய மாற்றங்களையும் செய்யாமல் சாதிக்க முடிந்திருப்பதால், தனுஷிடம் அந்தத் துள்ளல் இருக்கத்தானே செய்யும்!
பிரெஞ்சு, ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர்’ திரைப்படம், கடந்த 30-ம் தேதி கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. ‘வாழ்க்கையைத் தேடி நானும் போனேன்’ என்ற தலைப்பில் தமிழிலும் விரைவில் வெளியாகலாம்.
கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட்தான் இந்தப் படத்தின் இயக்குநர். கதை? ரொம்ப சிரமப்பட வேண்டாம். ரொமெய்ன் ப்யூர்தோலாஸ் எழுதிய ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர் ஹூ காட் ட்ராப்ட் இன் ஆன் ஐகியா வார்ட்ரோப்’ (The Extraordinary journey of the Fakir who got trapped in an IKEA wardrobe) எனும் நாவலைப் படித்தால் போதும். பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்த நாவலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சாம் டெய்லர்.
அஜதஷத்ரூ ஓகாஷ் ரத்தோட்..! அவர்தான் இந்த நாவலின் நாயகன். ராஜஸ்தானைச் சேர்ந்த அவர், ஒரு ‘ஃபகீர்’. அந்தச் சொல்லின் உண்மையான பொருள், ஆன்மிகத் துறவி. ஆனால், நாவலைப் பொறுத்தவரையில், அந்தச் சொல்லுக்கு ‘ஜேப்படி வித்தைக்காரன்’ என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இரும்பால் செய்யப்பட்ட ஆணிகளை விழுங்குவது, பொருட்களைத் தன் கைப்படாமல் காற்றில் தூக்கி நிறுத்துவது, எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குவது போன்ற சின்னச் சின்ன ஜேப்படி வித்தைகளை மக்களிடம் செய்துகாட்டி, பிழைப்பு நடத்தி வரும் நாயகன். அப்படிப்பட்டவன், ஆணிகளால் செய்யப்பட்ட படுக்கை ஒன்றைத் தேடி பிரான்ஸ் நாட்டுத் தலைநகரான பாரிஸுக்கு வருகிறான். அந்தப் படுக்கை இருந்தால், மக்களின் நோய்களை எல்லாம் விரட்டுவேன் என்று ஊரை நம்பவைத்ததால், அந்த ஊர் மக்களே காசுபோட்டு, ‘இந்தியா டூ பாரிஸ் - பாரிஸ் டூ இந்தியா’ என இருவழி விமான டிக்கெட் எடுத்து அவனை அனுப்பி வைக்கிறார்கள்.
ஒரே ஒரு பக்கம் மட்டும் அச்சான நூறு யூரோ நோட்டை வைத்துக்கொண்டு பாரிஸ் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் அவனிடம், ‘கர்மா’ வேறு சில சித்து விளையாட்டுகளை அவனிடம் நிகழ்த்துகிறது. பாரிஸில் கால் டாக்ஸிக்காரரை ஏமாற்றுவதில் தொடங்கி, துணிமணிகள் வைக்கும் அலமாரியில் சிக்கிக் கொண்ட தன்னைக் காப்பாற்றும் சூடான் அகதிகளிடம் பொய் சொல்வது, தனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் பிரபல இத்தாலி நாட்டு நடிகையின் நம்பிக்கையைச் சிதைப்பது என அந்த ‘ஃபகீர்’ அனைவரையும் ஏமாற்றிக் கொண்டேயிருக்கிறான்.
பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, லிபியா என விதி அவனை எங்கெங்கோ பந்தாடுகிறது. போகிற இடங்களில் எல்லாம், ‘ஃபகீர்’ மற்றவர்களை ஏமாற்றினாலும், மற்றவர்கள் எல்லோரும் அவனிடம் அன்பை விதைத்துச் செல்கிறார்கள். அவன் மேற்கொண்ட பயணங்களும் அவன் பெற்ற அன்பும் ஆதரவும் அவனை நல்வழிப்படுத்துகின்றன. இறுதியில், தன் ஜேப்படி வித்தைகளை எல்லாம் கைவிட்டு எழுத்தாளனாகப் புதிய அவதாரம் எடுக்கிறான். இதுதான் அந்த நாவலின் கதை.
ஆனால் படத்தின் கதையாக இதுவே இருக்குமா என்பது சந்தேகம்தான். நாவலின் மையத்தை மட்டும் அந்தப் படம் கொண்டிருக்கலாம். அல்லது, காட்சி ஊடகத்துக்கு ஏற்றவாறு நாவலின் கதை, சற்றே மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கலாம். நாவல் முழுக்க விரவிக் கிடக்கிற நகைச்சுவை படத்திலும் பரவிக் கிடக்குமா என்பதும் கேள்வி.
‘இதயம் என்பது துணிமணிகள் வைக்கும் அலமாரி போன்றது’ என்று சொல்லும் அஜதஷத்ரூவின் பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா? சம்ஸ்கிருதத்தில் அந்தப் பெயருக்கான பொருள்: ‘அவனுக்கு எதிரிகள் என்று யாருமில்லை!’
சரிதான்… தனுஷின் இப்போதைய வளர்ச்சியைப் பார்த்தால்!