இந்து டாக்கீஸ்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 29-வது கோடை நாடக விழா: விருது மழையில் நனையும் கலைஞர்கள்!

வா.ரவிக்குமார்

கா

ர்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 29-வது கோடை நாடக விழா, நாடக மேதை ஒய்.ஜி. பார்த்த சாரதியின் நூற்றாண்டையொட்டி அவருக்கான அர்ப்பணிப்புடன் நடந்தேறியது. இந்த நாடக விழாவுக்கு என்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட நாடகங்கள் சிறப்புடன் அரங்கேற்றப்பட்டன. 12 நாட்கள் நடைபெற்ற இந்த நாடக விழாவுக்கு, எண்ணற்ற ரசிகர்கள் தினந்தோறும் பார்வையாளர்களாக வந்திருந்து ஆதரவளித்தது இன்னமும் நாடகக் கலைக்குரிய மக்களின் மரியாதையை உற்சாகமாக வெளிப்படுத்தியது.

சத்ய சாய் கிரியேஷனின் ‘கிருஷ்ணா இல்ல நயன்தாரா’, டம்மீஸ் டிராமாவின் ‘கனவு மெய்ப்பட’, அரங்கன் அரங்கம் வழங்கும் ‘நாடகமே உலகம்’, லீகலி யுவர்ஸ் வழங்கும் ‘சுக்ல பட்சம்’, தியேட்டர் மெரினாவின் ‘A.I. வேதாளம்’, ஸ்டேஜ் கிரியேஷன்ஸின் ‘வீடு வரை உறவு’, மயூரபிரியாவின் ‘தர்மாஸ்பத்திரி’, அகஸ்டோ கிரியேஷன்ஸின் ‘நாகம்மாள் பாடசாலை’, கூத்தபிரான் நவபாரத் தியேட்டரின் ‘ஸ்கந்தா’, குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் ‘தீதும் நன்றும்’, கே.எஸ்.என்.சுந்தரின் ‘மனசாட்சி’, கலைவாணியின் ‘விளையாட்டு பொம்மைகள்’ ஆகிய நாடகங்கள் நாடக விழாவில் அரங்கேறின. 12 நாடகங்கள், ஏறக்குறைய 120 நடிகர்கள் மேடையிலும், 50-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கெடுத்த இந்த நாடக விழாவில் சிறந்த நாடகம், இயக்கம், கதை வசனகர்த்தா, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த ஒப்பனை, சிறந்த அரங்க அமைப்பு உள்ளிட்ட 33 பிரிவுகளில் விருதுகள் பெற கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறந்த நடிகர்கள் விருதுக்கு ரமேஷ் விஸ்வநாதன், மாலதி சம்பத் (தீதும் நன்றும்), போதிலிங்கம் (நாகம்மாள் பாடசாலை), கற்பகவள்ளி (நாடகமே உலகம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த குணச்சித்திர நடிகர்கள் விருதுக்கு கிரீஷ் (விளையாட்டு பொம்மைகள்), மணி கிருஷ்ணன் (கனவு மெய்ப்பட), லட்சுமி (கிருஷ்ணா இல்ல நயன்தாரா), உமா ஷங்கர் (நாகம்மாள் பாடசாலை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறந்த நகைச்சுவை நடிகர் விருதுக்கு ‘சுக்ல பட்சம்’ நாடகத்தில் நடித்த ஜவகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த துணை நடிகர் விருதுக்கு ‘தர்மாஸ்பத்திரி’ நாடகத்தில் நடித்த கணபதி ஷங்கர், ‘வீடு வரை உறவு’ நாடகத்தில் நடித்த ஆர். ஸ்ரீநிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த பங்களிப்பினை வழங்கிய நடிகர்களுக்கான சிறப்பு விருதுக்கு ‘மனசாட்சி’ நாடகத்தில் நடித்த விஜயன், ‘தீதும் நன்றும்’ நாடகத்தில் நடித்த எஸ்.ஜி.கார்த்திக், ‘தர்மாஸ்பத்திரி’யில் நடித்த வி. பாலசுப்பிரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘ஸ்கந்தா’ நாடகத்தில் நடித்த ஹிதேஷ் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதைப் பெறுவார்.

சிறந்த நாடகங்களாக நாகம் மாள் பாடசாலை (அகஸ்டோ கிரியேஷன்ஸ்), சுக்ல பட்சம் (லீகலி யுவர்ஸ்), தீதும் நன்றும் (குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 95) ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த கதாசிரியர், இயக்குநர் என்னும் இரு பிரிவுகளில் அகஸ்டோ, சதீஷ் சந்திரசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களோடு ’தர்மாஸ்பத்திரி’ நாடகத்தை இயக்கிய முத்துக்குமரனும் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த வசனகர்த்தா விருதுக்கு ஸ்ரீவத்ஸன் (கனவு மெய்ப்பட), வி.பி.எஸ். ஸ்ரீராமன் (தீதும் நன்றும்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

A1 வேதாளம், சுக்ல பட்சம் நாடகங்களுக்காக சிறந்த அரங்க அமைப்பாளருக்கான விருதை மோகன் பாபு பெறுவார். சிறந்த ஒளி அமைப்புக்கான விருதை சேட்டா ரவி, சிறந்த ஒப்பனைக்கான விருதை பெரம்பூர் குமார், சிறந்த இசையமைப்புக்கான விருதை குருபிரசாத் ஆகியோர் பெறுவர்.

திரைப்படத் துறையிலும் நாடகத் துறையிலும் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற மூத்த கலைஞரான ‘கலா நிலையம்’ சந்துரு, புகழ் பெற்ற எழுத்தாளரும் இயக்குநருமான கோமல் சுவாமிநாதனின் மகளும் நாடகத் தயாரிப்பாளருமான தாரிணி, ‘புஷ்பாஞ்சலி’ கலாசார அமைப்பின் செயலர் ஸ்ரீநிவாசன் ஆகியோர் விருதுக்குரிய கலைஞர்களை முறையாகத் தேர்ந்தெடுத்தனர்.

SCROLL FOR NEXT